பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல்.
(இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!
திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது.
அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!.
குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா?
போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!
சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல.
சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!
தமன்னா, கார்த்திக்கு பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!
ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!
வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!
1 comments:
ennanga ippadi solliteenga
Post a Comment