ஊருக்குள் சண்டியராக சுற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகனான சசிகுமாருக்கு, திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று அவனுக்கு பெண் பார்க்கிறார் அம்மா சரண்யா பொன்வண்ணன்.
ஊருக்காக அரிவாள் தூக்கி தன் உயிரை மாய்த்துவிட்டு அம்மாவை தவிக்க விட்டுச் சென்ற அப்பாவைப் போல், தானும் அடிதடி என்று சுற்றுவதால், அம்மா நிலைமை போன்று வேறு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என நினைத்து திருமணத்தை வெறுக்கிறார் சசிகுமார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி வெளியே தங்குகிறார்.
இந்நிலையில், அந்த ஊருக்கு புதிதாக வரும் லட்சுமிமேனன், பெண்களை அதிகமாக மதிக்கும் சசிகுமாரின் குணத்தை கண்டு அவர்மேல் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை சசிகுமாரிடம் சொல்லவரும் நேரத்தில், ஏற்கெனவே சசிகுமாரிடம் அடிவாங்கிய கூட்டம் ஒன்று சசிகுமாரை வெட்டிச் சாய்க்கிறது. இதைக்கண்டதும் லட்சுமிமேனன் அதிர்ச்சியடைகிறார்.
உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சசிகுமாரை காப்பாற்ற 3 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு லட்சுமிமேனன் சசிகுமாரின் நண்பரிடம் தன்னுடைய நகையை கொடுத்து அவரை காப்பாற்ற உதவுகிறார். இதிலிருந்து மீண்டு வருகிறார் சசிகுமார்.
அரசு அதிகாரியாக வேலைசெய்யும் லட்சுமிமேனனின் அப்பாவுக்கு தனது மகள் சசிகுமாரை விரும்புவது தெரியவரவே, வேறு ஊருக்கு மாறுதலாக முடிவெடுக்கிறார். இதற்காக, அதே ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூர்த்தியிடம் சென்று உதவி கேட்கிறார். ஆனால் மூர்த்தியோ நேர்மையான அதிகாரியை மாற்ற மனமில்லாததால், சசிகுமாரை அழைத்து அதட்டி வைக்கலாம் என நினைத்து, அவரை அழைத்துவர தனது அடியாட்களை ஏவி விடுகிறார்.
மூர்த்தியை சந்திக்க வரும் சசிகுமாரோ மூர்த்தியையும், அவரது ஆட்களையும் அடித்து துவம்சம் செய்கிறார். லட்சுமிமேனனின் அப்பாதான் மூர்த்தியை தன்மீது ஏவி விட்டார் என தவறாக நினைக்கும் சசிகுமார், லட்சுமிமேனனின் வீட்டிற்கு சென்று அவரது அப்பாவிடம் திருமணம் செய்தால் உன்னுடைய மகளைத்தான் திருமணம் செய்வேன் என சவால் விட்டு திரும்புகிறார்.
இந்நிலையில், சசிகுமாரால் அடித்து துவம்சம் செய்யப்பட்ட மூர்த்தி அவரை தீர்த்துக்கட்ட துடிக்கிறார். இறுதியில் இந்த கும்பலிடமிருந்து சசிகுமார் தப்பித்தாரா? லட்சுமிமேனனை கரம் பிடித்தாரா? தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தாயின் கனவு நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.
அழகான கிராமம், அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணம் என காட்சிப்படுத்தியதில் இயக்குனர் முத்தையா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். முன்பாதியில் அடிதடி, காமெடி, செண்டிமெண்ட் என விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக, சின்ன சின்ன வசனங்களைக்கூட ரசிக்கும்படியாக அமைத்திருப்பது சிறப்புக்குரியது. முழுக்க முழுக்க பெண்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் களமிறங்கியிருக்கும் இயக்குனர் முத்தையாவுக்கு பாராட்டுக்கள்.
அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். குட்டிப்புலியாக சசிகுமார், தனது முந்தைய படங்களில் உள்ள அதே அலப்பறையை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். முறுக்கு மீசை, கையில் அரிவாள், தூக்கி கட்டிய லுங்கி என பக்கா சண்டியர்போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்திற்கு படம் இவருக்கென்று வசனங்கள் உருவாக்குவார்கள் போலும்.
இந்த படத்திலும் இவர் பேசும் வசனங்கள் பலத்த கைதட்டல்களை பெறுகின்றன. சசிகுமாரின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனுக்கு கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். சசிகுமாரைவிட இவருக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சபாஷ் என்று சொல்கிற அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். லட்சுமிமேனன் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.
சசிகுமாரை துரத்தி துரத்தி காதலிப்பது மட்டும்தான் இவருடைய வேலை. மற்றபடி படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. காமெடிக்காக ‘கனா காணும் காலங்கள்’ குழு செய்யும் ரகளை ரசிகர்களை ஆங்காங்கே உற்சாகப்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையில் ‘காத்து காத்து’, ‘அருவாக்காரன்’ பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு, வசனம், காமெடி காட்சிகள் என அனைத்தும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த குட்டிப்புலி இன்னும் கொஞ்சம் கூடுதலாக பாய்ந்திருக்கும். மொத்தத்தில் ‘குட்டிப்புலி’ பதுங்கிப் பாயும்.