ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமான கடிதம்

உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம் என, ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி, தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார்.

தற்போது, சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய ரஜினி, ரசிகர்களுக்கு தன் கைப்பட நான்கு பக்க கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

வாழ்க்கை என்ற விளையாட்டில், காசை மேலே சுண்டிவிடுவது தான் மனிதனின் வேலை, அது கீழே விழும்போது, பூவா, தலையா என்பதை ஆண்டவன் முடிவு செய்கிறான். என் வாழ்க்கையில், பணம், மருந்து, அறிவியல், சிறந்த மருத்துவர்கள் என, ஒரு புறம் எனக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

மற்றொரு புறம், சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்தும், உண்ணாவிரதம் இருந்தும் நான் நலமடைய என் ரசிகர்கள் செய்த வேண்டுதலும், என் மீது அவர்கள் காட்டிய அன்பும் தான், என்னைக் காப்பாற்றி உள்ளது. விரைவில், "ராணா படம் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன். அது தான் என் லட்சியம்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு கடிதம் எழுதுவதற்காக, பேப்பர் மற்றும் பேனாவை கொண்டு வரச் சொல்லி, ரஜினியே கடிதத்தை எழுதியதாக, ரஜினியின் பி.ஆர்.ஓ., கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ஏப்ரல் 29ம் தேதி ரஜினி சேர்க்கப்பட்டார்.

அன்றைய தினமே வீடு திரும்பிய ரஜினி, மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மே 13ம்தேதி மாற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, மே 27ம்தேதி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...