பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்

பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்த ஹியூமா குரேஷி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற பார்வதி ஓமணக்குட்டின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் பில்லா-2. இது ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தின் 2ம் பாகம் ஆகும். இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பில்லா-2 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரபல மாடல் அழகி ஹியூமா குரேஷி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க முடியாது என்று விலகிவிட்டார்.

இதனையடுத்து அஜித் ஜோடியாக, கடந்த 2008ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டமும், உலக அழகி போட்டியில் இரண்டாவது இடமும் பிடித்த பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பார்வதி ஓமணக்குட்டன், தமிழில் நடிக்கும் முதல் படம் இது. அதுமட்டுமின்றி முதல்படத்திலேயே அஜித்துடன் சேர்ந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறேன் என நினைக்கும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தற்போது பில்லா-2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் பார்வதி ஓமணக்குட்டனுடன், பிரேசில் மாடல் அழகி புருணா அப்துல்லாவும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது.

விஜயகாந்த் மீதுள்ள காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. சகநடிகர், ஒரு கட்சிக்கு தலைவர் என்று கூட பாராமல் விஜயகாந்தை கன்னா, பின்னா என்று வசைபடினார்.

செல்லும் இடமெல்லாம் வடிவேலு பிரச்சாரத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியது. வர்றகூட்டம் எல்லாம், நிச்சயமாக திமுக.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று மனக்கணக்கு போட்ட வடிவேலுவுக்கு, தேர்தல் முடிவு பேரிடியை தந்தது.

சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது தி.மு.க., மாறாக தே.மு.தி.க., எதிர்கட்சி அந்தஸ்த்தை ‌பெற்றது.

தேர்தல் முடிவு திமுக.வுக்கு மட்டுமல்லாமல், வடிவேலுவுக்கும் நிச்சயம் ஒரு பேரிடி தான். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலுக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் கூட எதுவும் இல்லாமல் போய்விட்டது.

தமிழகத்தில் தான் வடிவேலு இருக்கிறாரா...? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் போல், உள்ளாட்சி‌ தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய வருவாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே வடிவேலுவை தேர்தல் களத்தில் மீண்டும் இறக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவேளை, மாப்பு... மறுபடியும் வேண்டான்டா ஆப்பு... என்று வடிவேலு ஒதுங்கி கொண்டாரோ...?

எஸ்.பி.பி.சரணை மன்னித்துவிட்டாராம் சோனா

கடிதம் மூலம் எஸ்.பி.பி. சரண் வருத்தம் தெரிவித்ததால் அவரை மன்னித்து விட்டு, சமரசம் செய்து கொண்டதாக நடிகை சோனா அறிவித்துள்ளார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மங்காத்தா மிட்நைட் மது விருந்தில் பங்கேற்ற தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் அளித்தார்.

எஸ்.பி.பி.சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர் தான் காரணமாக இருப்பார் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சோனாவின் புகார் மீது போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், எஸ்.பி.பி. சரண், தன்னை கைது செய்ய இடைக்கால தடையாணை பெற்றார். அதோடு என் மீது சோனா அபாண்டமாக புகார் கூறுகிறார்.

நான் அவரிடம் பாலியல் முறையில் தவறாக நடக்கவில்லை. அவர் தான் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் என்னிடம் நடந்து கொண்டார், என்று எஸ்.பி.பி.சரண் கூறினார்.

இதனால் கோபமடைந்த சோனா, சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறி அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனால் வழக்கு சூடு பிடித்தது. இதுஒருபுறமென்றால், பெண்கள் அமைப்பு சோனாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க ஆயத்தமானது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஆண்கள் சங்கமும் சரணுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் சோனா - எஸ்.பி.பி.சரண் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன், என்று சோனா அதிரடியாக அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

ஆஸ்கர் உருவியதால் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்

2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது செலக்ஷ்னுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை செலக்ஷ்ன் செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா.

அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம்.

இதில் முதல் இரண்டு இடங்களை மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. அ‌தாமின்டே மகன் அபு, உருமி இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகும்.

செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம்.

இப்படி சொன்னார்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கான, ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவில் இருந்த எல்.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.

இந்த விஷயம், தமிழ் சினிமாவை தங்களது சட்டை பாக்கெட்டுக்குள் ‌வைத்திருப்பதாக பேசிவரும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு தெரியுமா...!

சம்பளம் கொடுக்காததால் விழாவை புறக்கணித்த நடிகை

சினிமாவில் நடித்ததற்கான சம்பளத்தை கொடுக்காததால் பாடல் வெளியீட்டு விழாவை மை பட ஹீரோயின் புறக்கணித்து விட்டார்.

ஆந்திராவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது அங்கும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா பாசன்.

கொஞ்சம் அழகாக இருந்தால் போதும். அதுவும் கொழுக் மொழுக் என்று இருந்தால் தமிழ் சினிமாக்காரர்கள் விட்டு வைப்பார்களா? ரா ரா, மை ஆகிய இரு படங்களிலும் இவர்தான் ஹீரோயின்.

மை படத்தின் சூட்டிங்கில் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் தேதிகளை அள்ளிக் கொடுத்து நடித்து முடித்திருக்கும் ஸ்வேதா பாடல் வெளியீட்டு விழா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.

ஏனாம்? படத்தின் ஹீரோயினான ஸ்வேதா வந்தால்தான் விழா களைகட்டும் என நினைத்த தயாரிப்பாளர் தரப்பு, அம்மணியை விழாவுக்கு அழைக்க, அம்மணியோ.... முதலில் சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன் என்றாராம்.

விழா நடக்கும் நிமிடம் வரைக்கும் சம்பளம் போய் சேராததால் சென்னையிலேயே இருந்தும், அறையை விட்டு வெளியே வரவில்லையாம் ஸ்வேதா.

ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...?

பிரபல ஜோசியர் ஒருவர் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை தான் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ‌ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் பெண் அல்லது இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

அவர்கூறியது, இப்போது நிஜமாகிவிடும் போல் இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனால் அமிதாப் குடும்பம் படுகுஷியாகியுள்ளது.

ஏற்கனவே மணிரத்னத்தின் குரு படத்தில் நடித்த ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியருக்கு, இரட்டை குழந்தை பிறப்பது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் சாவுக்கு கூடுற கூட்டம்... - அஜித் உருக்கம்

என் சாவுக்கு கூடுற கூட்டம், அஜித்குமார் யார் என்று நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டும், என்று நடிகர் அஜித்குமார் உருக்கமாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்வர் ஜெயலலிதா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம்.

சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க, என்று கூறியுள்ளார்.

சினிமா விழாவொன்றில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, பதில் அளித்திருக்கும் அஜித், "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான்.

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை.

என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

இப்போது தனக்கு 40 வயசாகிறது என்று கூறியிருக்கும் அஜித், இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானு கூட தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்கு கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க.

என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகரின் தந்தையிடம் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையன்

சென்னையில் நடிகர் கரணின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அவரது தந்தையிடம் கத்திமுனையில் தங்க சங்கிலியை பறித்துச் சென்றான்.

நடிகர் கரணின் தந்தை கேசவன். 80 வயதாகும் இவரும் சில படங்களில் நடித்துள்ளார். இவர், சென்னை கோயம்பேடு வடக்குமாட வீதியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் கேசவன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு கதவு தட்டப்பட்டது. கேசவன் கதவை திறந்தார். வெளியில் நின்ற மர்ம நபர் ஒருவன், கேசவனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

பின்னர் கத்திமுனையில் கேசவனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக கேசவன் கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எஸ்.பி.பி.சரண் மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனா

பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்.பி.பி.சரண் மீது குற்றம் சாட்டியிருக்கும் நடிகை சோனா, சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன், இல்லாவிட்டால் வழக்கு தொடரும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் வைபவ் தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இதில் நடிகை சோனாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.சரணும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விருந்தில் எஸ்.பி.பி.சரண், தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக சென்னை பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசாரும் சரண் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனிடையே சோனாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் நேரில் போய் கேட்டுக் கொண்டார் சரணின் தந்தை எஸ்பி பாலசுப்ரமணியன். சரணின் நண்பர்களும் சோனாவிடம் இதுகுறித்து வலியுறுத்தி வந்த நிலையில் எஸ்.பி.பி.சரண் முன்ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அந்தமனுவில், சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித்துள்ளார். என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சரணின் இந்த புகார் சோனாவை ஆத்திரமடைய செய்துள்ளது. இது குறித்து சோனா கூறுகையில், மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்.பி.பி.சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும்.

சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடருவேன். எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் போய் சரணை பாலியல் தொந்தரவு செய்வேனா... இதை யாராவது நம்புகிறீர்களா...

சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அப்புக்குட்டி

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் அப்புக்குட்டி, அழகர் சாமியின் குதிரை படம் மூலம் ஹீரோவானார்.

ஹீரோவுக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் கதாநாயகனாக நடித்த அப்புக்குட்டியை பலரும் பாராட்டினார்கள்.

அதேபோல படமும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அப்படத்தின் பெயர் மன்னாரு.

தேசிய விருது பெற்ற தம்பி ராமையா, இந்த படத்தின் வசனம் - பாடல்களை எழுதி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஜெய்சங்கர் என்பவர்தான் படத்தை இயக்குகிறார். தமிழ் பிக்சர்ஸ் சார்பில் படம் தயாராகிறது.

அஜித்தின் அடுத்தபடம் ஏ.எம்.ரத்னத்திற்கு தான்

பில்லா-2 படத்திற்கு பிறகு, அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்னம் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மங்காத்தாவின் சூப்பர் ஹிட் வெற்றியால், மீண்டும் வெங்கட்பிரபு கூட்டணியில், அஜித் ஒரு படம் பண்ணப்போவதாகவும், அந்தபடத்தில் அஜித்துடன், சிம்புவும் சேர்ந்து நடிக்க போவதாகவும், இப்படத்தை பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது ஏ.எம்.ரத்னம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

மேலும் இப்படத்தை அஜித்திற்கு, பில்லா படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனே இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜி்த் இப்போது நடித்து வரும் பில்லா-2-வை, விஷ்ணுவர்தன் தான் முதலில் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சக்ரி டோல்டி அந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் பாணியில் தயாராகும் விஸ்வரூபம்

நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் "விஸ்வரூபம்" படம் ஹாலிவுட் பாணியில் தயாராகி வருகிறது. சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சங்கர் லீசான் ராய் இசையமைக்கிறார். 


கமல்ஹாசன் படங்களில் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற படங்களை மைல் கற்கள் என்று சொல்வதுண்டு. 


அந்த படங்களை தூக்கி சாப்பிடுகிற மாதிரி, "விஸ்வரூபம்" இருக்கும் என்றும், தொழில்நுட்ப ரீதியில், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமையும் என்றும் "விஸ்வரூபம்" படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கூறுகிறார்கள். 


இதில் டைரக்ஷன் எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.


ஹாலிவுட் படங்களை தொடங்கும்போது, அந்த படங்களின் திரைக்கதை புத்தகம் தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வழங்கப்படுவது வழக்கம். 


அந்த நடைமுறை, "விஸ்வரூபம்" படத்தில் பின்பற்றப்பட்டு இருக்கிறது. 


இந்த படத்தின் திரைக்கதை புத்தகம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் உள்பட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு இருப்பது கூடுதல் தகவல்.

விக்ரமுடன் குத்தாட்டம் போட ரூ.1கோடி ஆஃபர்

"ராஜபாட்டை" படத்தில் விக்ரமுடன் ஒருபாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்துவிட்டார் ஹன்சிகா மோத்வானி. 


"தெய்வத்திருமகள்" படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் படம் "ராஜபாட்டை". இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடித்து வருகிறார். 


இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் அசத்தலான ஒரு குத்துபாடல் ஒன்று இருக்கிறதாம். 


இதுவரை குத்து பாடலுக்கு ஆடாத ஒருவரை இப்பாடலுக்கு ஆட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்களாம் படக்குழுவினர். 


இதற்காக ஹன்சிகாவை அணுகி, ரூ.1கோடி வரை தருவதாக கேட்டார்களாம். ஆனால், அவரோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மாதிரி பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என்று கறாராக மறுத்து விட்டாராம். 


இது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது, "நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை. 


எனது திரையுலக வாழ்வில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நாயகியாக நடிக்காத படங்களில் ஒரு பாடல் ஆட்டத்துக்கு சம்மதிக்க மாட்டேன்." என்று கூறி இருக்கிறார். 

நயன்தாராவுக்கு விரித்த வலையில் விழுந்தார் மல்லிகா ஷெராவத்

சிம்பு நடித்து வரும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் ஒரு குத்தாட்ட பாடலில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஆடப்போகிறார். 


இந்தியில் வெளியான தபாங் படத்தினை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் டைரக்டர் தரணி இயக்கி வருகிறார். 


நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம்பெறுகிறது. இந்தப் பாடலுக்கு நயன்தாராவை ஆட வைக்க எவ்வளவோ முயன்றனர் சிம்புவும், தரணியும். 


பெரும் தொகையை சம்பளமாகத் தருகிறோம் என்று கூறி வலை விரித்தும், அதில் விழ நயன்தாரா சம்மதிக்கவில்லை. இந்நிலையில் நயன்தாராவுக்கு விரித்த வலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் விழுந்திருக்கிறார். 


இதுபற்றி சிம்பு தனது பேஸ்புக் பக்கத்தில், "ஒஸ்தி படத்தில் வரும் அந்த முக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். 


ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அந்தப் பாடலை எடுக்கிறோம். படம் தீபாவளி ரிலீஸ்..." என்று கூறியிருக்கிறார்.

மங்காத்தா நடிகருடன் டாப்சி காதல்...?

மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்துக்கும், வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தமிழில் இவர் நடித்து இந்த ஒருபடம் தான் வெளியாகியுள்ளது.

ஆனால் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் இவருக்கும், மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகர் மகத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது.

இவர் நடிகர் சிம்புவின் நண்பர் ஆவார். மேலும் தயாரிப்பாளர் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

சமீபகாலமாக டாப்சியும், மகத்தும் ஒன்றாக ஹோட்டல்களில் கைகோர்த்தப் படி நடந்து செல்வதை காண முடிகிறதாம்.

மேலும் டாப்சி சூட்டிங்கில் பங்கேற்கும்போது அங்கு மகத் வந்து விடுகிறாராம். சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்து டாப்சியை அழைத்து செல்கிறாராம். கூடவே டாப்சிக்கு தமிழ் தெரியாது என்பதால், மகத் தமிழ் கற்று கொடுக்கிறாராம்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் - சிம்பு சேர்ந்து ஒரு படம்

மங்காத்தா படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் வெங்கட் பிரபு, அடுத்தும் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார். கூடவே இந்த படத்தில் அஜித்துடன் சிம்புவும் நடிக்க போகிறாராம். 


தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்த வந்த அஜித்திற்கு, தனது 50வது படமான மங்காத்தா அவருக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். 


அஜித்தின் இந்த வெற்றியால் அவரது மார்க்கெட் பழையபடி உயரத்தொடங்கியுள்ளது. மேலும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அஜித்தை வைத்து இயக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். 


ஆனால் அஜித்தின் இப்போதைய சாய்ஸ் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, விஜய் ஆகி‌ய மூவரும் தான். 


இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இந்தபடத்தை வெங்கட்பிரபுவே இயக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சிம்புவும், இந்தபடத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம். 


மு‌ம்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் இந்தபடத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று ‌கூறப்படுகிறது.

நயன்தாரா தான் எனக்கு முன்னோடி - அமலா பால்

சினிமாவில் நயன்தாரா தான் எனக்கு முன்னோடி என்று நடிகை அமலா பால் பெருமிதம் கொண்டுள்ளார். 


மலையாள வரவான அமலாபால், மைனா, தெய்வத்திருமகள் என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை ரேஞ்ச்க்கு உயர்ந்து வருகிறார். 


இதுதவிர தெலுங்கில் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பாலின் அசத்தலான படங்கள் பிரபல பத்திரிக்கை ஒன்றில் வெளியானது. 


அமலாபாலின் இந்த போட்டோக்களை பார்த்த நயன்தாரா, உங்களுடைய போட்டோ சூப்பராக வந்துள்ளது. அப்படியே இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பினாராம். நயன்தாராவின் இந்த எஸ்.எம்.எஸில் நெகிழ்ந்து போகியுள்ளார் அமலாபால்.


இதுகுறித்து அவர் கூறுகையில், நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. வேறு மாநிலத்திலிருந்து வந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 


அவரிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ் பாராட்டால், நான் பல விருதுகள் பெற்றதாக உணர்கிறேன். சினிமாவில் அவர் தான் எனக்கு முன்னோடி என்று பெருமையாக கூறுகிறார்.

நடிப்பில் மட்டும் நயன்தாராவை முன்னோடியாக வச்சுகோங்க... அமலாபால், மற்ற விஷயத்தில் வேண்டாம்.

ஜெயம் ரவி, அஜித் மோதலா...?

அந்தந்த மொழிகளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது எல்லாம் சாதாரணம் தான். 


அதேநேரம், அதே இரண்டு நடிகர்களின் படங்கள், வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் மோதிக்கொள்வது என்பது சற்று குழப்பான விஷயம் தான். ‌


மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கி, ஜெயம் ரவி, கங்கனா ரனாவத், லட்சுமிராய் உள்ளிட்ட பலர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த தாம் தூம் படம், இப்போது தெலுங்கிலும் ரக்ஷ்கூடு என்ற பெயரில் வெளியாகி சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது. 


இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், ஜெயம் ரவி படம் வெளியான அதேசமயத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 50வது படமான மங்காத்தாவும், தெலுங்கில் ரிலீசாகியுள்ளது. 


அஜித்தை படத்தை காட்டிலும், ஜெம் ரவி படத்திற்கு தான் கூட்டமும், வசூலும் வருகிறதாம். 


இதனால் அஜித்-ஜெயம் ரவி படங்களுக்கு இடையே வர்த்தக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளதாம். 


அதேநேரம் அஜித்தை படத்தை காட்டிலும் தனது படம் நன்றாக வசூலாவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெயம் ரவி. 

கமல்ஹாசனுடன் நடிக்காதே : அனுஷ்காவை தடுத்த ஹீரோ

"விஸ்வரூபம்" படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள்.

அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூபத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது.

அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்திருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கமல் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்றதுமே, வேண்டாம் போகாதே... என்று கூறிவிட்டாராம் நாகார்ஜுனா.

அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்ததே தவிர இன்னும் அக்ரிமென்ட் எதிலும் சைன் பண்ணவில்லையாம் அனுஷ்கா.

இதனிடையே அனுஷ்கா சொதப்பினால் என்ன செய்வது? என்று நினைத்ததால்தானோ என்னவோ முன்கூட்டியே எமி ஜாக்சனிடமும் ஒரு வாய்ப்பு கேட்டிருந்தாராம் கமல்.

அனேகமாக அனுஷ்கா இடத்தை எமி பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

கார்த்திக் மகனுடன் ஜோடி சேரும் ராதாவின் 2வது மகள்

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமுடன், மாஜி நடிகை ராதாவின் 2வது மகள் துளசி ஒரு படத்தில் ஜோடி சேரப்போகிறார். அந்த படத்தை இயக்குபவர் டைரக்டர் மணிரத்னம். டைரக்டர் பாரதிராஜா மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள் நடிகர் கார்த்திக் - நடிகை ராதா ஜோடி.

இருவருக்குள்ளும் காதல், கசமுசா என்றெல்லாம் அப்போதே கிசுகிசுக்கள் கோலிவுட் முழுக்கவும் வலம் வந்தன. ஆனால் அதையெல்லாம் பெரிதுபடுத்தாத அவர்கள், தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தனர்.

நடிகை ராதா திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தனது மூத்த மகளுக்கு கார்த்திகா என பெயரிட்ட ராதா, கார்த்திகாவை "கோ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறக்கி விட்டார்.

எதிர்பார்த்ததை விட கார்த்திகாவின் நடிப்பு இருந்தது. படம் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன.

இந்நிலையில் தனது 2வது மகள் துளசியையும் தமிழ் சினிமாவில் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் ராதா. துளசியை தனது அடுத்த படத்தின் நாயகியாக அறிமுகப்படுத்தும் மணிரத்தனம், அவருக்கு ஜோடியாக கார்த்திக் மகன் கவுதமை தேர்வு செய்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னாள் ஹீரோவின் மகனும் அவரது ஜோடி நடிகையின் மகளும் ஜோடியாக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்! இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.

நடிகை காந்திமதி காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக நடிகை காந்திமதி(65) இன்று காலமானார். கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர்.

கரகாட்டக்காரன், மாணிக்கம், வால்டர் வெற்றிவேல், சின்னதம்பி பெரிய தம்பி, அகல் விளக்கு, ஆணழகன், அமைதிப்படை, அம்மன் கோவில் வாசலிலே, அன்பு தோழி, அத்தைமகள் ரத்தினமே, சிதம்பர ரகசியம், மண்வாசனை, காதல் ஓவியம், கும்பக்கரை தங்கையா, முத்து, ராசைய்யா, சிம்லா ஸ்பெஷல், உயிர் உள்ளவரை உஷா, இது நம்ம பூமி, தவசி, ஐயா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுவதாக அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்

காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்?

முன்னாள் காதலன் நடிகர் சிம்புவை, நடிகை நயன்தாரா கழற்றி விட்டதற்கான காரணம் என்று ஒரு புதிய கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் கேரள மக்கள்.

அதோடு நயனுக்கும், கேரளாவின் முன்னணி நடிகர் ஒருவருக்கும் இடையே முன்பு காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை...

தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் நயன்தாராவுக்கு, ஆரத்தி எடுக்க கோடம்பாக்கம் தயாராகி வருகிறது.

பிரபுதேவா & நயன்தாரா திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் ஒருவருக்கொருவர் காதுகளில் சிலபல தகவல்களை கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவற்றில் முக்கியமானது, சினிமாத் தொழிலுக்கு வந்த புதிதில் பிரபல மலையாள லால் நடிகருக்கும், நயனுக்கும் இடையே முன்பு காதல் இருந்தது என்பதுதான்.

நாளாக நாளாக லால் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், தொடர்பை விலக்கிக் கொண்ட நயன், உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன், என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.

தமிழக்கு வந்ததும், முன்னணி நடிகர் ஆகும் அத்தனை தகுதியும் சிம்புக்கு இருப்பதாக கருதி, அவரை காதலிக்கத் தொடங்கிய நயன், பின்னர் சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறார்கள் திருவில்லா பகுதி மக்கள்.

விஜய் - சீமான் மீண்டும் சந்திப்பு

நடிகர் விஜய்யும், டைரக்டர் சீமானும் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் மீண்டும் கோபம் களைகட்டும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு வந்தார் விஜய்.

கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது தேர்தல் பிரசாரத்தில் பிஸியாகி விட்டார்.

தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் கோபம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் படம் ட்ராப் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமானை அழைத்திருக்கிறார் விஜய்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்த சீமான், சுமார் மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பு எதற்காக நடந்தது? என்ன முடிவு எடுக்கப்பட்டது? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், மீண்டும் கோபம் களைகட்ட வாய்ப்பு இருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அஜித்தின் ரசிகை ஆன நடிகை

அஜித்தின் நடிப்பில் மயங்கிய நடிகை பியா, அஜித்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார். இதுவரை சல்மான் கானின் ரசிகையாக இருந்த அவர், இப்போது அஜித் ரசிகை ஆகி விட்டாராம்.

அஜித்துடன் ஏகன் படத்தில் 2வது நாயகியாக நடித்திருப்பவர் நடிகை பியா. கோவா படத்திலும் 2வது நாயகியாக வந்து, தனது கலகலப்பான மற்றும் உருக்கமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இதுவரை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சல்மான் கான்தான் என்று சொல்லி வந்த பியா, சமீப காலமாக அஜித் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணி விட்டார் என்று கூறி வருகிறார்.

எப்படியாவது அஜித்துடன் மீண்டும் ஒருபடத்தில் நடித்து விட வேண்டும் எனத் துடிக்கும் நடிகைகள் பலரும் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள்.

அந்த வரிசையில் நீங்களும் அஜித்தை புகழ்ந்து தள்ளுகிறீர்களா? என்று கேட்டால், ஐயயோ... அப்படியெல்லாம் இல்லை. மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு.

அப்படியே உருகிப் போய் விட்டேன். அதனால்தான் அவரை உண்மையான சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன், என பதில் வருகிறது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கும் பியா, ஸாரி சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

அப்போ சரி!

முதல்வர் பதவிக்கு பொறுத்தமானவரா த்ரிஷா?

தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படமொன்றில் நடிகை த்ரிஷா முதல்வர் வேடத்தில் நடிக்கவுள்ளார். அந்த வேடத்திற்கு த்ரிஷா பொருத்தமானவரா? இல்லையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னட திரையுலக பிரமுகர்கள்.

சி.எம். என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் முதல்வர் வேடத்தில் த்ரிஷா நடிக்கப் போகிறார் என்பதால் பரபரப்பு கூடியிருக்கிறது.

கன்னடத்திலும், தமிழிலும் உருவாகும் இப்படத்தில், முதல்வர் வேடத்தில் முதலில் நடிப்பதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் அணுகியது அனுஷ்காவைத்தான்.

அவரது உயரமும், வசீகரமான முகமும் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அம்மணியிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால் அவருக்கு டேட்ஸ் பிரச்சினை இருந்ததால், அனுஷ்காவை புக் செய்ய முடியாமல் போய் விட்டதாம்.

இதையடுத்து அந்த முதல்வர் கேரக்டரில் நடிக்கும்படி த்ரிஷாவை அணுகியிருக்கிறது சி.எம். படக்குழு. உடனடியாக க்ரீன் சிக்னல் கொடுக்காத த்ரிஷா, கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்;

அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று கூறியிருக்கிறார். சம்பளத்தை கூட்டிக் கொடுத்தாவது த்ரிஷாவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று த்ரிஷாவின் போன் காலுக்காக காத்திருக்கிறது படக்குழு.

சி.எம். படம் குறித்து அதன் இயக்குனர் ரகுராம் அளித்துள்ள பேட்டியில், படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள். கன்னடப் பதிப்பில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ்ப் பதிப்புக்கு அர்ஜூன். இப்படத்தின் தலைப்புதான் சி.எம். மற்றபடி இதில் அரசியல் ஏதும் இல்லை. இரு முதல்வர்களுக்கிடையே ஏற்படும் காதலை இப்படத்தில் கதையாக்கியுள்ளோம், என்று கூறியுள்ளார்.

புலிவேசம் - ஆர்.‌கே.யின் புதிய அவதாரம்

பிஸினஸ்மேன், ஹீரோ, வில்லன் என் பன்முகங்கொண்ட ஆர்.‌கே.யின் புதிய அவதாரம் தான் ‌"புலிவேசம்"!

வயித்துக்கு சோறு போட்டு, கைநிறைய காசு கொடுத்து, யாரை கூறு ‌போட சொன்னாலும் மறு பேச்சே இல்லாமல் வேலையை முடிக்கும் கேரக்டர் முனியனுடையது. முனியனாக ஹீரோ ஆர்.கே., அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறார்? ஏது செய்கிறார்...? என்பதை ஒருபக்கம் தீவிரமாக ஆராயும் நேர்மையான போலீஸ் ஆபிஸர் கார்த்திக், மற்றொரு பக்கம் தன் போலீஸ் நண்பனை போட்டு தள்ளியவர்களை தீர்த்துகட்டி திருப்திபட்டுக்கொள்ளும், முனியன் எனும் ஆர்.கே.யை பயன்படுத்தி கொண்டு அதிரடி பண்ணுகிறார்.

முனியன் ஒரு கவளம் சோற்றுக்காகவும், காசுக்காவும் எதையும் செய்ய காரணம் என்ன? அவ்வாறு கிடைக்கும் காசு பணத்தை என்ன செய்கிறார் ஆர்.கே...? எனும் வினாக்களுக்கான விடைகளும், இன்னும் பல வித்தியாசமான விகாரங்களையும், விவகாரங்களையும் கலந்துகட்டி விறுவிறுப்பாக சொல்கிறது "புலிவேசம்" படத்தின் மீதிக்கதை!

முனியனாக ஹீரோவாக ஆர்.கே., பிற்பாதியில் வரும் கிராமத்தான் பாத்திரத்தில் பக்காவாக நூற்றுக்கு நூறு பொருந்துகிறார். முற்பாதி சிட்டி சப்ஜெக்டில் ஐம்பது சதவிகிதமே அசத்துகிறார். அவரைவிட அவரது குரல், எதையும் காசுக்காக செய்யத்துணியும் கேரக்டருக்கு எதிராய் செயல்படுவது பலவீனம்!

சின்சியர் போலீஸ் ஆபிஸராக கார்த்திக், ரொம்ப நாளைக்கப்புறம் கதாநாயகன் லுக்கில் கலக்கி இருக்கிறார். "புலிவேசம்" படத்தின் பெரியபலம் கார்த்திக்தான். கிரிக்‌கெட் பேட்டும் கையுமாக, இளம் பெண்களை கடத்துவதை குலத்தொழிலாக கொண்ட மன்சூரலிகான் செம கலக்கல். யார், யாரோ பேசுறாங்க, 20 வருஷமா நிலைத்து நிற்கும் நான் பன்ச் டயலாக் பேசக்கூடாத என பிய்த்து பெடலெடுக்கும் அவர் பேச்சில் செம நக்கல்! கார்த்திக் மாதிரியே, கலகலக்கலாக படம்முழுக்க புலிவேசத்தை காப்பாற்றியிருக்கிறார் மன்சூர், என்றால் மிகையல்ல.

இளவரசு, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஓ.கே.சுந்தர் என இயக்குநர் பி.வாசு, பெரிய ஸ்டார் காஸ்ட் கொடுத்திருக்கிறார்.

சதா, திவ்ய பத்மினி என இரண்டு நாயகியர். கார்த்திக் சொல்லி ஆர்.கே.,வை துப்பறியும் சதாவைக் காட்டிலும், ஆர்.கே.வை அண்ணனாக ஏற்றுக்கொண்டு பாசமழை பொழியும் திவ்ய பத்மினி நடிப்பில் மிளிர்கிறார்.

ஸ்ரீகாந்த்தேவாவின் இதமான, யதார்த்தமான இசை, கருணாமூர்த்தியின் ஓவியம் போன்ற ஒளிரும் ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் இயக்குநர் பி.வாசு, "சின்னத்தம்பி"யில் தொடங்கி "சந்திரமுகி" வரை, இன்னமும் தன் படங்களை மறக்காமல், ஆங்காங்கே புலிவேசம் க(கா)ட்டியிருப்பது, பாய்ச்சலிலும் பாதகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மற்றபடி "புலிவேசம்", ஆர்.கே.யின் "ஆவேசம்!"

இனி ஜாக்பாட் நிகழ்ச்சி சிம்ரன் கையில்

ஜெயா டி.வி., நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஜாக்பாட் நிகழ்ச்சியை, இனிமேல் சிம்ரன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். ஜெயா டி.வி., நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானாவை ஞாயிற்றுகிழமை ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகை குஷ்பு நடத்தி வந்தார். மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் நிகழ்ச்சியை காட்டிலும், குஷ்பு அணிந்து வந்த விதவிதமான புடவைகள் மற்றும் ஜாக்கெட் போன்றவை தான்.

ஜாக்பாட் நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டு இருக்கையில், குஷ்பு தி.மு.க.,வில் சேர்ந்தார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டார்.

குஷ்புக்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடிகை நதியா ஏற்று நடத்த ஆரம்பித்தார். ஆனால் குஷ்பு ரேஞ்சுக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாக அமையவில்லை. இருந்தும் நதியா‌வே நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இடையில் நமீதாவை வைத்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் கடைசியில் சிலபல பிரச்சனைகளால் அவர் விலகி கொண்டார்.

இந்நிலையில் தொடர்ந்து ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்த நதியாவுக்கு, மும்பைக்கும் சென்னைக்கும் வந்து போக சிரமம் ஏற்படுள்ளதாம், இதனையடுத்து நதியாவும் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு இப்போது, ரசிகர்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற சிம்ரன் வந்துள்ளார்.

இதனை ஜெயா டி.வி., உறுதிபட அறிவித்து உள்ளது. சமீபத்தில் தன்னுடைய 2வது மகன் ஆதித் பிறந்த பிறகு சற்று எடை போட்டு இருப்பதாக கூறும் சிம்ரன், இனி ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக எடையை குறைக்க போவதாகவும், மீண்டும் ஜெயா டி.வி.,யின் மூலம் ரசிகர்களை சந்திக்க போவதாகவும் மகிழ்ச்சி பட கூறுகிறார்.

மேலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தவும், சில நிகழ்ச்சிகளை மதன், யூகிசேது, அனுஹாசன் ஆகியோரும் நடத்த உள்ளனர்.

பெண்களை கவரும் வகையில் சமையல் வல்லுநர்கள் நடத்த உள்ள சமையல் சாம்பியன் நிகழ்ச்சி உள்ளிட்ட பல புதுமைகளை ஜெயா டி.வி., நடத்த திட்டமிட்டுள்ளது.

திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கிறார் கமல்

மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது.

இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம்.

அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும். வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...