பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமண குட்டன்

பில்லா-2வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்த ஹியூமா குரேஷி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற பார்வதி ஓமணக்குட்டின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மங்காத்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் பில்லா-2. இது ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தின் 2ம் பாகம் ஆகும். இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பில்லா-2 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரபல மாடல் அழகி ஹியூமா குரேஷி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க முடியாது என்று விலகிவிட்டார்.

இதனையடுத்து அஜித் ஜோடியாக, கடந்த 2008ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டமும், உலக அழகி போட்டியில் இரண்டாவது இடமும் பிடித்த பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பார்வதி ஓமணக்குட்டன், தமிழில் நடிக்கும் முதல் படம் இது. அதுமட்டுமின்றி முதல்படத்திலேயே அஜித்துடன் சேர்ந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறேன் என நினைக்கும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தற்போது பில்லா-2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் பார்வதி ஓமணக்குட்டனுடன், பிரேசில் மாடல் அழகி புருணா அப்துல்லாவும் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...