நடிகர் கார்த்திக்கிடமும் தயாரிப்பாளர் சங்கத்தினர் கைவரிசை

நடிகர் கார்த்திக்கிடமும் தயாரிப்பாளர் சங்கத்தினர், சிலர் மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவி விகித்த ராமநாரயணன் உள்ளிட்ட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து புதிய தற்காலிக தலைவராக, நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பொறுப்பேற்றார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர் குரல் கொடுத்தனர்.

இதனையடுத்து வருகிற அக்.9ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, தற்போது தேர்தலுக்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வருகிறது.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான ஒரு அணியினரும், கேயார் தலைமையிலான ஒரு அணியினரும் தேர்தலில் மோத உள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர். இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.

இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன், "தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வெற்றி பெற்றால் நிச்சயம் அந்த தொகை‌ மீட்கப்படும். டி.வி. நிகழ்ச்சிகளில் விளம்பர கட்டுபாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எவ்வளவோ முறைகேடுகள் நடந்துள்ளன. அதிலும் சினிமாவில் உள்ள சக நடிகரிடம் கூட மோசடி செய்துள்ளனர். சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில், நடிகர் கார்த்திக் பல்வேறு படங்களில் நடிப்பதாக கூறி பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களின் படங்களில் நடிக்கவில்லை.

இதுதொடர்பான புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் பேசி, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடைசியாக கார்த்தி நடித்த மூன்று படங்களில் இருந்து தலா ரூ.5லட்சம் வீதம் ரூ.15லட்சம் வசூல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு ரூ.8 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி, ரூ.7லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர் சங்கத்தினர். முன்னணி நடிகராக இருந்த ஒருவரிடமே இப்படி மோசடி செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை. இதுபோன்று இன்னும் எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...