சிவாஜி, கமல் அளவு எனக்கு நடிப்பாற்றல் இல்லை - ரஜினி

சிவாஜி, கமல்ஹாசன் அளவுக்கெல்லாம் எனக்கு நடிப்பாற்றல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த், விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் பரபரப்பாக பேசினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் ஒரு மாதமும், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 மாதங்களும் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார்.

அதன்பிறகு, ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கவில்லை, எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் சினிமா துறையில் 75 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் எஸ்பி.முத்துராமனுக்கு, சங்கர நேத்ராலயா சார்பில் `சங்கர ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார்.

அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும். எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை.

அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன். என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது.

அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன், என்றார்.

மேலும் எனது உடல்நிலை சரியாக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும், எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...