தீபாவளி படங்கள் ஒரு பார்வை...

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆன காலம்போய் அரைடஜன், கால்டஜன் என தீபாவளி திரைப்படங்கள் எண்ணிக்கை குறைந்து, தற்போது வருகின்ற தீபாவளிக்கு ஒரு சில திரைப்படங்களே ரிலீஸ் ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கு யார் காரணம்...? என்ன காரணம்...? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஒரு பிரம்மாண்ட தமிழ்படம், தமிழ் பேசி வெளியாக இருக்கும் ஒரு மெகா பட்ஜெட் இந்திபடம் ஆகியவற்றின் டிரையிலரையும், நிறைய தமிழ்படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளாமல் போன காரணத்தையும் பார்ப்போமா...?!


வேலாயுதம்

பிரம்மாண்ட பட அதிபர் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், "ஜெயம்" ராஜா முதன்முதலாக நடிகர் விஜய் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் திரைப்படம் தான் "வேலாயுதம்".

விஜய் படங்களிலேயே அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தபடம் எனும் சாதனையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நாயகியர். இதில் ஜெனி., பெண் பத்திரிக்கை நிருபராக, விஜய்யை விட ஒருபடி தாண்டி பேசப்படும் பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், ஹன்சிகா மோத்வானி முதன்முதலில் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து கலக்கியிருப்பதாகவும் கூறுகிறார் இயக்குநர் ராஜா.

சரண்யா மோகன் விஜய்யின் தங்கை பாத்திரம் ஏற்றிருக்கிறார்.

படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை.

சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை. கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

ப்ரியனின் ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனியின் இசை இரண்டும் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம் படத்தை பக்கா கமர்ஷியல் படமாக தீபாவளி கோதாவில் இறக்கி விட இருக்கின்றனர் என்பது ஹைலைட்!


ரா-1

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் கதை இயக்கத்தில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மொகா பட்ஜெட் படம் தான் "ரா-1".

லண்டனில் செட்டில் ஆன தென் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஷாரூக், தன் குழந்தைக்காக ஹீரோவால் ஜெயிக்க முடியாத ரா-1 எனும் வில்லனை, சாஃப்ட்வேரில் பொம்மையாக உருவாக்குகிறார்.

அது சாஃப்ட்வேர் கம்யூட்டரை எல்லாம் கடந்து வெளியே வந்து, உலகை அழிக்க முயல்கிறது. அதை அழிக்க மென்மையான உள்ளம் கொண்ட ஹீரோ ஷாரூக் ஜி-1 அவதாரம் எடுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது "ரா-1" படத்தின் மொத்த கதையும்.

இந்தி மாதிரியே தமிழிலும் 3டி படமாக ரிலீஸ் ஆகும் "ரா-1" படத்தில் ராவணன், இராமாயணம் போன்ற விஷயங்களையும் கலந்து கட்டி பாத்திரமாக்கியிருக்கும் அனுபவ் சின்ஹாவுக்கு, விடியல் சேகர், நிகோலா, ரசூல் பூக்குட்டி, சாபுசிரில் உள்ளிட்ட தென் மற்றும் வடஇந்திய பிரபலங்கள் டெக்னிக்கலாகவும், கிரியேட்டிவ்வாகவும், பக்கபலமாக இருந்து "ரா-1" படத்தை தமிழிலும் ஹிட் ஆக்க உறுதி பூண்டிருக்கின்றனர். ரா-1 படத்தை தமிழகம் முழுவதும் அபிராமி ராமநாதன் ரிலீஸ் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலாயுதம், ரா-1 படங்களை தவிர ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் "ஏழாம் அறிவு" படமும் ரிலீசாக இருக்கிறது.

வேலாயுதம், ரா-1, ஏழாம் அறிவு தவிர சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன, புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்களும் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள இருந்து கடைசி நேரத்தில் கழண்று கொண்டுவிட்டன.

இதற்கு முக்கிய காரணம் மேற்படி ரிலீசாக இருக்கும் மெகா பட்ஜெட் படங்கள் மற்றும் தியேட்டர் பற்றாக்குறை போன்றவை தான்.

இருந்தாலும் துணிச்சலாக முமைத்கானின் கவர்ச்சியை நம்பி "அவளுக்கு அது புதுசு" எனும் அந்தமாதிரி படமும், புதுமுகங்களின் "காதல் கொண்ட மனசு" எனும் சின்ன பட்ஜெட் படமும் கிடைத்த தியேட்டர்களில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதுதான் இப்போதைய நிலவரம்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...