மெளன குரு - சினிமா விமர்சனம்

அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!


எந்த தப்புமே செய்யாதே ஹீரோ அருள்நிதி, போலீஸ் செய்யும் ‌‌தொடர் தவறுகளால் அதோகதி ஆகிறார்! அதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுத்து போலீஸை, அருள்நிதி அடித்து துவம்சம் பண்ணுகிறார்... இதுதானே மெளனகுரு கதை... என நீங்கள் யூகித்தால் அதுதான் இல்லை!


பொல்லாத போலீஸை பொறுப்புள்ள பெண் போலீஸ் ஒருவரே பார்த்து கொள்கிறார். அருள்நிதி, காதல், கல்லூரி, என மவுனமாக தன் கடமையை செய்வதோடு சரி! இதுதான் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்குமோ? என எதிர்பார்ப்பை கூட்டி விடும் மெளன குரு படத்தின் பெரிய ப்ளஸ்!


பன்ச் டயலாக், வாயில் சதா சர்வ காலமும் புகையும் சிகரெட், சரக்கு, சைடீஸ், சப்போர்ட்டுக்கு சுற்றிலும் நான்கு காமெடி பீஸ் என ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாமல் மெளனமாகவே படம் முழுக்க நடித்து ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி!


ஹீரோயின் இனியாவும், தன் பங்கிற்கு இயல்பாக நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆனாலும் மருத்துவக்கல்லூரி மாணவி தன் வருங்கால மணாளனுக்கு என்ன விதமான இன்ஜக்ஷ்ன் ‌போடப்படுகிறது? எதுமாதிரி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது? என்று கூட காலி இன்ஜக்ஷன் குப்பியை எடுத்து பார்க்காமலும், திடீரென மனநோயாளியாக மாற்றப்படும் ஹீரோ அருள்நிதிக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏரெடுத்துப் பார்க்காமலும் இருப்பது சுத்த போர்! இதை யதார்த்தமாக கதை சொன்ன இயக்குநர், நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


ஃபோர்ஜரி போலீஸ்கள் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி மூவரும் மிரட்டலாக நடித்திருக்கின்றனர் என்றால், வாயும் வயிறுமாக நேர்மையான பிள்ளைதாச்சி பெண் போலீஸாக வரும் உமா ரியாஸ்கான் அவர்களைக் காட்டிலும் மிரட்டலாக நடித்து படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்.


அம்மா சுஜாதா, மது, மென்ட்டல் ஆஸ்பத்திரியில் வரும் நண்பன் முருகதாஸ், ஹரிஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!


எஸ்.தமனின் இனிய இசை, மகேஷ் முத்துச்சாமியின் யதார்த்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் பல ப்ளஸ் பாயிண்டுகளுடன் சாந்தகுமாரின் சறுக்காத எழுத்து இயக்கத்தில் "மெளனகுரு"விற்கு சுத்தமான, சத்தமான வெற்றி நிச்சயம்! மெளனகுரு - "மிரட்டல் குரு"

1 comments:

மதுரை சரவணன் said...

nalla vimarsanam...vaaltthukkal

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...