அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கதைகளில் கூட அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர், அஜீத்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்படி வெளிவந்திருக்கும் படம்தான் பில்லா 2.
தடுக்கி விழுந்தாலும் தமிழனாய் விழுவோம் தவறி எழுந்தாலும் தமிழனாய் எழுவோம்... என்றெல்லாம் பக்கம் பக்கமாய் டயலாக் பேசி சென்டிமெண்ட் டச் பண்ணும் மற்ற தமிழ் ஹீரோக்கள் கூட செய்யத் தயங்கும் இலங்கை அகதி கேரக்டரில் இதில் எண்டரி ஆகும் அஜீத்துக்குத்தான் என்ன துணிச்சல்.?!
வாவ்., கள்ளத்தோணி மூலம் கடல் கடந்து இலங்கை அகதியாக இந்தியாவிற்கு எண்ட்ரி ஆகி., இராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்குள் எண்ட்ரி போட்டுவிட்டு "எஸ்" ஆகும் அஜீத், அதன்பிறகு எடுக்கும் அவதாரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக அவரை எங்கெங்கோ எடுத்து செல்வது தான் ஆச்சர்யம்! அதிசயம்!! லாரியில் மீனும், மீனுக்குள் வைரங்களையும் கடத்தும் அஜீத்., அடுத்து போதை பொருட்கள், அதற்கடுத்து ஆயுதங்கள் என கடத்தி இந்தியாவில் இருந்து இண்டர்நேஷனல் வரை எதிராளிகள் எல்லோரையும் தீர்த்துக்கட்டி குறுகிய காலத்திலேயே பெரிய டானாக., "டர்ன்" ஆவதுடன் தனது அக்கா மகள் ஜாஸ்மினாக வரும் பார்வதி ஓமனக் குட்டனை வில்லன்களிடத்தில் பறி கொடுத்து, பலி கொடுத்துவிட்டு, வில்லி சமீரா எனும் புருணா அப்துல்லாவை நல்லவர் என்று நம்பி மோசம் போய் பின்பு புத்திசாலித்தனமாக அவரைத் தீர்த்துகட்டி, மெயின் வில்லன் திமித்ரி எனும் வித்யாத்ஜாம்வெல்லையும் தீர்த்து கட்டுவதும் தான் பில்லா 2 படத்தின் மொத்த கதையும்!
அகதியாக, அமைதியாக எண்டரியாகும் அஜீத் அதற்கு முந்தைய காட்சியிலேயே அதாவது டைட்டிலுக்கு முந்தைய ஒரு ரீலிலேயே ஏழெட்டு வில்லன்களை எக்குத்தப்பாய் கத்தி, கை துப்பாக்கி உதவியுடன் தீர்த்து கட்டிவிட்டு "என் வாழ்க்கையை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு நொடியும் நானா திட்டமிட்டடு செதுக்கினது டா... என்னை யாரும் அவ்வளவு எளிதில் தீர்த்துகட்டிட முடியாது..." என கர்ஜிப்பதில் தொடங்கி "எனக்கு நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம்.
ஆனால் எதிரியா இருக்க நிறைய தகுதிகள் வேண்டும்... அது உன்கிட்டே இல்லை..." என ஒவ்வொருவராய் தீர்த்துகட்டுவது வரை ஒவ்வொரு சீனிலும் ஒரு பெரும் கடத்தல் மன்னனாகவே வழ்ந்திருக்கிறார் பலே!
அதே சமயம் இலங்கை அகதியாக அறிமுகமாகும் அஜித்., அந்த ஈழத்தமிழர்களுக்காக ஏதேதோ செய்யத்தான் "டான்" ஆகிறார் எனப் பார்த்தால், அடுத்தடுத்து அதை கடத்துவது, இதை கடத்துவது, அவரை போட்டு தள்ளுவது, இவரை தீர்த்துக் கட்டுவது... என கிரிமினல் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறாரே ஒழிய, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாதது ஏமாற்றத்தையே தருகிறது.
மற்றபடி "இது ஆசை இல்ல பசி என்பதும், போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்வதும், "இதுவரை காட்டி கொடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க..." தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் பார்க்கும் போது., ஏதோ எடுக்க நினைத்து அது சென்சாரில் ஏதேதோ ஆகியிருப்பது புரிகிறது! அப்பட்டமாகவும் தெரிகிறது.
சீன் பை சீன் எதிர்படுபவர்களை எல்லாம் துப்பாக்கியும் கையுமாக போட்டுத்தள்ளும் அஜீத் போன்றே பார்வதி ஓமனக்குட்டன், புருனா அப்துல்லா, மனோஜ் கே. ஜெயன், அப்பாசியாக வரும் சுதான்ஷூ பாண்டே, திமித்ரி-வித்யாத், செல்வராஜ்-இளவரசு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
அதிலும் படமுழுக்க பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி கவர்ச்சி உடையில் வரும் இளம் பெண்கள் படத்தின் பெரும்பலம். ஒரு "ஏ" சர்டிபிகேட் படத்திற்கு இதைவிட வேறென்ன பெரும் பலமாக இருக்க முடியும்.?!
அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் காட்டிலும் ஆர்.டி.ராஜசேகரின் அழகிய ஒளிப்பதிவும், யுவன் சங்கரராஜாவின் இனிய இசையும், சக்ரி டோலட்டியின் 1980களை காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்து இயக்கமும் இரா. முருகன், முகம்மது ஜாபரின் நச் டச் வசனங்களும் படத்தை பல மடங்கு பிரமாண்டபடுத்தி காட்டியிருக்கின்றன என்றால் மிகையில்லை!
80களில் செல்போனே இல்லாத காலத்தில் வில்லன் திமித்ரி தன் பிஸினஸ் பார்ட்னர்களுக்கு லைவ்ஸ்கிரீனில் தன் ஆயுத ஆலையை காண்பிப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் "பில்லா-2", இல்ல, "நல்லா" என்று ரசிகர்களை கதற விடாத அளவில் இருப்பது ஆறுதல்!
ஆகமொத்தத்தில் “பில்லா இருக்கு நல்லா.?! அப்பாடா!!