ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன்! ஐ.சி.சி. அதிரடி!!

உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணிய‌ை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலக‌கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் ஏப்ரல் 2ம்தேதி வரை நடத்துகிறது. இந்த தொடருக்கான தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணி ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்று பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் ஐ.சி.சி.யோ ஆஸ்கார் நாயகனை ஓரம் கட்டிவிட்டு, பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் குழுவிற்கு வழங்கி இசை ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.சி.யின் இந்த முடிவு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ள அதேநேரம், சங்கர், யஹஷான், லாய் ஆகியோரின் ரசிகர்களை உற்சாகத் துள்ளலுக்கு உட்படுத்தியிருக்கிறது.


"தே குமா கே" என்று துவங்கும் அந்த பாடல் இந்தி, வங்காளம் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் இன்று ரசிகர்களின் செவிகளை சென்றடையும் வகையில் வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட்களில் வெளியிடப்படுகிறது. இந்த பாடலின் சர்வதேச ஒளிபரப்பு உரிமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமே (ஐசிசி) இருக்கிறது.


ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? : "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதுகள் வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான், அந்த பெருமை நீங்குவதற்குள்ளாக காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான தீம் பாடலுக்கு இசையமைத்தார்.

சர்ச்சைகளின் மொத்த உருவமாக திகழ்ந்த காமென்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடர்பாடுகள், பிரச்னைகள் வந்ததுடன், தீம் பாடலும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்தது. பாட்டும், இசையும் சரியில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்த அதே நேரத்தில், ரஹ்மான் இசையமைத்த பாடலில் பணியாற்ற முடியாது என்று முன்னணி பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் எதிர்ப்பு ‌தெரிவித்தனர்.

ரசிகர்களின் அதிருப்தி மற்றும் கலைஞர்களின் எதிப்பால் முதலில் உருவான தீம் பாடலம் மாற்றப்பட்டது. இருப்பினும் அது பெரும்பாலான பொதுமக்களை போய்ச் சேரவில்லை. ரூ, 5 கோடியை சமபளமாக ‌பெற்றுக் கொண்டு ரஹ்மான் உருவாக்கிய தீம் பாடல் பிரபலம் ஆகாததாலும், ரஹ்மான் இசையமைக்கும் பாடலில் பணியாற்ற மாட்டோம் என்று சக கலைஞர்கள் போர்க்கொடு தூக்கியதாலுமே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில உலககோப்பை கிரிக்கெட் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அணுகவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உருவாகியிருக்கும் தீம் பாடலுக்கு இசையமைத்திருக்கும் சங்கர், யஹஷான், லாய் குழுவினர்தான் கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்திற்கு இசையமைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

நான்கு லட்சமும், வடிவேலு டார்ச்சரும்!

கோடியாக, கோடியாக சம்பாதித்தாலும் காசு விசயத்தில் மிகவும் கறாராக இருக்கிறார் வடிவேலு. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வடிவேலு தன் மகன் சுப்ரமணியை எப்படியாவது நடிக்க வைத்து முன்னணி ஹீரோவாக ஆக்க துடிக்கிறார். ஆனால் மகனுக்கோ நடிப்பு சுத்தமாக வரவில்லை. இதனையடுத்து தமது மகனை கூத்துபட்டறை ஒன்றில் சேர்த்துள்ளார்.

இதற்காக நான்கு லட்ச ரூபாயை மொத்தமாக கட்டியுள்ளார். ஆனால் மகனோ நான்கு நாள் கூட ஒழுங்காக பயிற்சிக்கு போகவில்லை. அப்பா என்னால் முடியாது என்று வடிவேலுவிடம் கூறிவிட்டாராம்.


இதனையடுத்து அந்த பயிற்சி நிறுவனத்துக்கு போன் செய்த வடிவேலு, என் மகன் நான்கு நாள் கூட பயிற்சிக்கு வரவில்லை, ஆகையால் நான் கட்டிய நான்கு லட்ச ரூபாயை திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

அந்த பயிற்சி நிறுவனமோ அப்படியெல்லாம் பணத்தை தர முடியாது. வேண்டுமானால் உங்கள் மகனை மீண்டும் பயிற்சிக்கு வரச்சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர். ஆனால் வடிவேலு தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் பணத்தை தரச் சொல்லி நச்சரித்து கொண்டு இருக்கிறார்.

நடிகை அசின் - சல்மான்கான் ரகசிய திருமணம்?

நடிகை அசினும், பாலிவுட் நடிகர் சல்மான்கானும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜினி படம் மூலம் இந்தி திரையுலகுக்கு போன அசின், கஜினி ஹிட் ஆனதால், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைய ஆசைப்பட்டார்.

கஜினியைத் தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்த அசினுக்கு பலத்த அடி. படம் ஹிட் ஆகாததால் பாலிவுட்டில் அசின் மார்க்கெட் சரிந்தது.

இந்நிலையில் சல்மான்கான் அடுத்து நடிக்கவிருக்கும் ரெடி படத்தில் கமிட் ஆன அசின், இடையே தமிழில் விஜய்யுடன் காவலன் படத்திலும் நடித்து முடித்து விட்டார்.


ஏற்கனவே லண்டன் ட்ரீம்ஸ் சூட்டிங்கின்போது அசின் சல்மான் இடையே ஏற்பட்ட நட்பு, இப்போது ரெடி படத்தின் சூட்டிங்கில் காதலாக வளர்ந்து விட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் கசியத் தொடங்கின.

இந்நிலையில் அந்த காதல் ஜோடி ரகசிய திருமணமும் செய்து விட்டதாக செய்திகள் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படத்துடன் வெளியாகியுள்ளன.


இதுபற்றி அசின் அளித்துள்ள பேட்டியில், "எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. அந்த ஸ்டில் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது, என்றார்

விளக்கம் கொடுத்தால் விபரீதம் - விக்ரம்

மதராசப்பட்டனம் வெற்றிப்படத்திற்கு பிறகு டைரக்டர் கிரீடம் விஜய் இயக்கவிருக்கும் படத்தில் விக்ரம் நாயகராக நடிக்கிறார்.

மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடிக்கும் இப்படத்தில் அவரது மனைவியாக சிந்துசமவெளி புகழ் அமலா பால் நடிக்கிறார்.

பெரிய அளவிலான வயது வித்தியாசம் இருந்தால் மட்டும் கிசுகிசுக்காமல் இருப்பார்களா என்ன? விக்ரமும், அமலா பாலும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் என்பதில் தொடங்கி, இருவருக்கும் இடையே அது இதுவென்று பலவிதமான வதந்திகள் பறந்தவண்ணம் இருக்கின்றன.

ஏனாம் இந்த வதந்தி? அமலா பாலுக்கு சிபாரிசு செய்ததே விக்ரம் என்பதால்தான்.

ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்தால் என்ன நடக்கும்? என்பது இத்தனை வருடகாலம் சினிமாவில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் விக்ரமிற்கு தெரியாதா என்ன?

இதுபற்றி விளக்கம் கொடுத்தால் கூட அது விபரீதத்தில் முடிந்து விடும் என்பதை கணித்து வைத்திருக்கும் அவர், அமலாபால் விவகாரத்தில் வாய் திறக்காமல் கப்சிப் காத்து வருகிறாராம்.

மீண்டும் செல்வராகவன்-யுவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ளனர்.செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பெரும்பாலான படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இவர்களது கூட்டனியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதலில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்தனர். இதனையடுத்து யுவனுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இசையமைத்தார்.

தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் மறவன் (மாலை நேரத்து மயக்கம்) படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் யுவனும்-செல்வராகவனும் மீண்டும் இணையவுள்ளனர். தனுஷ் நடிப்பில், செல்வராகவன் விரைவில் இயக்கவுள்ள இரண்டாம் உலகம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதனை யுவன் சங்கர் ராஜாவும் உறுதிபடுத்தியுள்ளார். மீண்டும் நாங்கள் இருவரும் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று யுவன் கூறியுள்ளார்.

தலைவன் இருக்கிறான் - கமல் ஜோடியாக அனுஷ்கா

கமல் நடித்த “மன்மதன் அம்பு” படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தில் நடிக்க தயாராகிறார். வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது.

“மன்மதன் அம்பு” படத் துக்கு முன்பே இதனை எடுப்பதாக இருந்தது. சில பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டு இப்போது தயாராகிறது.

படவேலைகள் முழுவீச்சில் துவங்கியுள் ளன.

கமல் ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகின்றனர். இவர் “அருந்ததி” மூலம் தமிழில் அறிமுகமானார்.

சூர்யாவுடன் “சிங்கம்” படத்திலும் விஜய்யுடன் “வேட்டைக்காரன்” படத்திலும் அனுஷ்கா நடித்துள்ளார். தற்போது “வானம்” படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார்

மீண்டும் காதலில் விழுந்தார் செல்வராகவன்

டைரக்டர் செல்வராகவன் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் அவரையே திருமணமும் செய்யவுள்ளார்.

டைரக்டர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவும், செல்வராகவனும் காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்யவுள்ளனர் என்று செய்தி வந்தது. இந்நிலையில் மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளார் செல்வராகவன். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இப்போது 33வயது ஆகிறது. இந்த வயதில் ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை நான் உணர்வேன். ஆனால் நான் இப்போது, ஒரு 21வயது வாலிபன் செய்யும் வேலையை செய்து கொண்டு வருகிறேன்.

ஆம், நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அந்த பெண்ணும் என்னை மிகவும் நேசிக்கிறாள். காதலுக்காக தினமும் இரண்டு மணி நேரம் அந்த பெண்ணுடன் செலவிடுகிறேன். வாழ்க்‌கையில் நிறைய விஷயங்கள் இழந்துவிட்டதை இப்போதுதான் உணர்கிறேன்.

ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். விரைவில் அந்த பெண்ணையே திருமணம் செய்ய இருக்கிறேன். அந்த பெண்ணின் பெயரை தற்போது குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அந்த பெண் நடிகையல்ல, சொல்லப்போனால் சினிமா துறையை சார்ந்த பெண்ணே அல்ல என்று கூறினார்.

அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல் - பின்னணி

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற செய்தி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை ‌நம்பத்தகுந்த ‌செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.


அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள். இதனை வலியுறுத்தும் வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள் அறிவித்திருந்தனர்.

இதுபற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும் ‌ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு அரசியல் பிடிக்காது ; நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது.

அவர்களுடன் செலவிடவே நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது ரசிகர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தார். அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நான் எனது 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவு - பகலாக மும்முரமாக ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள், என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக, ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நான் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள்.

இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால், என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார். அஜித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

மன்மதன் அம்பு - விமர்சனம்

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் தான் மன்மதன்அம்பு.

மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக்கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதிஸ்டாலின் தயாரிக்கிறார்.

கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் சிறப்பம்சங்கள்:-

பாரீஸ் நகரில் தொடங்கி சூட்டிங் பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கிய துறைமுகநகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலிய பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில்,கொடைக்கானல், சென்னை உள்ளிட்டஇடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிகட்ட காட்சிகள் சென்னையில்படமாக்கியுள்ளனர்.

மத்திய தரக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது.நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. நாயகன் கமல்ஹாசன் மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார். நட்புக்கும் -காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்கு.

கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது ‌சொந்த குரலில்பேசியுள்ளார். அம்பு ஜாக்ஷி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை ப்ரியாராக இருப்பதுடன்,கவிதைகளையும் வாசித்திருப்பது ஹைலைட். மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்றகேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார்.

இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷாஉதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். களவாணி ஓவியா கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும்ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பலபாடல்களை உள்ளடக்கியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும்பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி.

சண்டைக்காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாகபிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன்சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.

இந்த படத்தின்மூலம் கேமராமேனாக அறிமுகமாகும் மனுஷ் நந்தன், அனைத்துகாட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவைபயன்படுத்தியிருக்கிறார்.

உதவி இயக்குனர்களிடம் ரூ. 5 லட்சம் கேட்கும்‌ டைரக்டர்

தமிழ் சினிமாவில் சில வெற்றிப்படங்களை இயக்கிய, ஆட்டோகிராப் நடிகர் தன்னிடம் உதவி இயக்குனர்களாக சேருபவர்களிடம் ரூ. 5 லட்சம் கேட்கிறாராம்.

முற்போக்கு சிந்தனையுடன் படம் எடுக்கும் அந்த இயக்குனரிடம் உதவியாளராக சேருபவர்கள் ஒரே படத்துடன் ஓட்டம் பிடித்து விடுகிறார்களாம்.

இதனால் அவர்களை தன்னிடம் ‌தக்க வைப்பதற்கான முயற்சியாகத்தான் இப்படி வசூலில் இறங்கியிருப்பதாக ‌தகவல்கள் வெளியாகின. அதாகப்பட்டது... இவரிடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும்.

அதோடு தொடர்ச்சியா 3 படங்களில் வேலை பார்க்கணும். 3 படங்கள் முடிந்த பிறகு ‌கான்‌டாக்ட் சர்டிபிகேட்டுடன் ரூ.5 லட்சம் பணத்தை திருப்பிக் கொடு்ப்பது என முடிவு ‌எடுத்திருக்கிறார் அவர்.

இயக்குனரின் இந்த முடிவு சினிமாவுக்காக ஊரை விட்டு, வேலையை விட்டு சென்னைக்கு ஓடி வந்து, ஒரு ‌வேளை சாப்பாட்டுக்கும், ரூம் வாடகைக்கும் அல்லாடிக் கொண்டு, இயக்குனர் கனவுடன் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இளைஞர்களை அதிர்ச்‌சியடைய வைத்திருக்கிறது.

ஈசன் - விமர்சனம்

சுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் எழுதி, தயாரித்து, இயக்கி இருக்கும் படம் தான் "ஈசன்". சின்னஅளவில் கிராமத்து அரசியலையும். அடிதடியும் தன் முந்தைய படத்தில் காட்டிய சசிகுமார், இதில் நகரத்து அரசியலையும், அடிதடியையும், அண்டர் கிரவுண்ட் சமாச்சாரங்களையும் படமாக்கியுள்ளார்.


ஆளுங்கட்சியின் அடாவடி அமைச்சர் ஏ.எல்.அழகப்பன், அவரது ரோமியோ மகன் வைபவ். அப்பாவிற்கு கமிஷன் தர மறுக்கும் தொழிலதிபர் பிரபுராஜனின் மகள், அபர்ணாவுடன் வைபவிற்கு, அப்பாக்களின் முட்டல் மோதல்களுக்கு முன்பே காதல்!

பலகோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சரும், தொழிலதிபரும் ஒற்றை மீட்டிங்கிலேயே சமாதானமாகி சம்பந்தி ஆக திட்டம் போடுகின்றனர். இந்த சமயத்தில் அமைச்சரின் ஒற்றை வாரிசான வைபவ் காணமல் போக, அவரது எஸ்கேப் கேஸை போலீஸ் அதிகாரி சமுத்திரகனி வசம் ஒப்படைக்கிறார் அமைச்சர் அழகப்பனால் கமிஷனர் ஆன காஜாமொய்தின்.


அமைச்சர் அழகப்பனுக்கும், அதிகாரி சமுத்திரகனிக்கும் ஏற்கனவே ஆகாது என்பதால் மகன் காணாமல் போன விஷயத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் விளைவு தனது மகனைத்தேடி தானே தனது அடிப்பொடிகளுடன் களத்தில் இறங்குகிறார் அமைச்சர்!

ஆனாலும் கடமை உணர்வுடன் களத்தில் இறங்கிதேடுகிறார் சமுத்திரகனி. வைபவின் காதல் என்னஆனது...? காணமால்போக யார் காரணம்...? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு வி்த்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது "ஈசன்" படத்தின் மீதிக்கதை!


போலீஸ் அதிகாரி சங்கையாவாக வரும் சமுத்திரகனி நடிப்பில் சக்கைபோடு போட்டிருக்கிறார். இந்த யூனிஃபார்மை நான் எவ்ளோ லவ் பண்ணி போடுகிறேன் தெரியுமா... என்று கமிஷ்னரிடம் அவர் மல்லுகட்டும் இடங்களிலும், கடமை எனும் பெயரில் அடாவடி அமைச்சர்களுக்கு அவர் அடிபணிந்து போகவேண்டிய சூழலிலும் காட்டும் நடிப்பு மிரள வைக்கிறது.

எல்லாவற்றுக்கும் சேர்த்து க்ளைமாக்ஸில் அமைச்சரையும், அவரது கையாள் நமோ நாரயணனையும் போட்டுத்தள்ளும் போது நிஜத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கா‌லரை தூக்கி விட்டுக்‌கொள்வார்கள்.


செழியன் எனும் பெயரில் இரவு-பகல் என்று பாராமல் முழுநேர ரோமியோவாக வலம் வரும் வைபவ், தனது முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பாவம் க்ளைமாக்ஸில் அவருக்கு ஏற்படும் நி‌லைதான் பரிதாபம்.

அப்பாவின் எதிரிகள் அல்ல... வைபவ் படிக்கும் காலத்தில் செய்த ரோமியோ தனம் தான் அவர் காணாமல் போக காரணம் என்பது எதிர்பாராத திருப்பம். அமைச்சரின் கையாள், ‌கோபாலாக வரும் நமோ நாரயணனின் நடிப்பு நச் என்று இருக்கிறது.


ஏ.எல்.அழகப்பன் கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்து எம்.எல்.ஏ., அமைச்சர் என ஆகும்போது, சில அரசியல்வாதிகளை பிரதிபலித்திருந்தாலும், அவரது டப்பிங் வாய்ஸ் படத்தில் அவருக்கு பெரிய மைனஸ்.


வாய்பேச முடியாத பூரணி கேரக்டரில் வரும் அபினயா, ரேஷ்மாகவாக, வைபவின் காதலியா வரும் அபர்ணா, ஆர்த்தொடக்ஸ் ஃபேமிலி பெண்ணாக வரும் சியமளா எனும் ப்ரியா, அம்மா கேரக்டரில் வரும் துளசி என சகலரும் தங்கள் பங்கை சரியாவே செய்திருக்கின்றனர்.

அதிலும் வாய்பேச முடியாத பூரணிக்கு நிகழும் கொடூரமும், அதனால் அவரது குடும்பமே தற்‌கொலை செய்து கொள்ளும் விதமும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனாலும் அவரது தம்பி சிவன் கேரக்டரில் பள்ளி சிறுவனாக வரும் துஷ்யந்த், வைபவ் அவரது நண்பர் வினோத் உள்ளிட்டவர்களை தீர்த்து கட்டும் விதம் நம்பமுடியாதது.

அதேமாதிரி அபினயாவின் அப்பா கேரக்டருக்கு காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்திருக்கும் டப்பிங் தனியாக தெரிவது மைனஸ்.


ஜேம்ஸ்வசந்தனின் இசையில், தஞ்சை செல்வியின் குரலில் ஒளிக்கும் ஜில்லா விட்டு... பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் பேசும்படி இல்லாதது குறை. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்!


இயக்குநர் சசிகுமார் தனது களமான கிராமங்களைவிட்டு நகரத்திற்கு வந்ததாலோ என்னவோ, சிட்டி பேஷன் களை குறைகூறும் "ஈசன்" பெரியளவில் "பேசுவான்" என்று சொல்ல முடியவி்ல்லை.

மன்மதன் அம்பு படத்தில் ஆபாச பாடல் நீக்கம்

மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ஆபாச பாடல் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு.

அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது.


பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்த பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார்.

கமல்ஹாசனின் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு... பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அதேநேரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், மன்மதன் அம்புக்கு யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன.

ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அந்தபாடலை நீக்க கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியிடப்படும் என்று தெரிகிறது

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் வாய்ப்பு

கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, இந்த ஆண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அளவில் பிரபலமானார்.

இதுதவிர அதேபடத்திற்காக அந்தாண்டு கோல்டன் குளாப் விருதும் பெற்றார். இந்நிலையில் இந்தாண்டும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது. "127 ஹவர்ஸ் " என்ற படத்தில் இசையமைத்தற்காக இவ்விருது பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தை இயக்கிய டேனி போயல் இந்தபடத்தையும் இயக்கியுள்ளார்.

படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உலக நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆகையால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தாண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு 2011ம் ஆண்டு ஜன-6ம் தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே இந்தாண்டு கோல்டன் குளோப் விருது பட்டியலிலும், ஏ.ஆர்., பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

விஜயகாந்தின் அடுத்த படத்தின் டைரக்டரும் அவரே

"விருதகிரி" படத்தை தொடர்ந்து தம்முடைய அடுத்த படத்தையும், விஜயகாந்தே டைரக்ட் செய்யவுள்ளார்.


கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், விஜயகாந்த்தின் மச்சான் எல்‌.கே.சுதீஸ் தயாரிப்பில், கேப்டன் முதன்முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் "விருதகிரி".


இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. முதல்படத்திலேயே தமது முத்திரையை பதித்த கேப்டன் ஏக குஷியில் இருக்கிறார்.


இதனைத்தொடர்ந்து, தம்முடைய அடுத்த படத்தையும், அவரே டைரக்ட் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்.


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமது கட்சியினருடன் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள கேப்டன், விரைவில் தமது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார்.


இந்தபடமும் அவரது முந்தைய படங்களை போன்று ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் படமாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...