சுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் எழுதி, தயாரித்து, இயக்கி இருக்கும் படம் தான் "ஈசன்". சின்னஅளவில் கிராமத்து அரசியலையும். அடிதடியும் தன் முந்தைய படத்தில் காட்டிய சசிகுமார், இதில் நகரத்து அரசியலையும், அடிதடியையும், அண்டர் கிரவுண்ட் சமாச்சாரங்களையும் படமாக்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் அடாவடி அமைச்சர் ஏ.எல்.அழகப்பன், அவரது ரோமியோ மகன் வைபவ். அப்பாவிற்கு கமிஷன் தர மறுக்கும் தொழிலதிபர் பிரபுராஜனின் மகள், அபர்ணாவுடன் வைபவிற்கு, அப்பாக்களின் முட்டல் மோதல்களுக்கு முன்பே காதல்!
பலகோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சரும், தொழிலதிபரும் ஒற்றை மீட்டிங்கிலேயே சமாதானமாகி சம்பந்தி ஆக திட்டம் போடுகின்றனர். இந்த சமயத்தில் அமைச்சரின் ஒற்றை வாரிசான வைபவ் காணமல் போக, அவரது எஸ்கேப் கேஸை போலீஸ் அதிகாரி சமுத்திரகனி வசம் ஒப்படைக்கிறார் அமைச்சர் அழகப்பனால் கமிஷனர் ஆன காஜாமொய்தின்.
அமைச்சர் அழகப்பனுக்கும், அதிகாரி சமுத்திரகனிக்கும் ஏற்கனவே ஆகாது என்பதால் மகன் காணாமல் போன விஷயத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் விளைவு தனது மகனைத்தேடி தானே தனது அடிப்பொடிகளுடன் களத்தில் இறங்குகிறார் அமைச்சர்!
ஆனாலும் கடமை உணர்வுடன் களத்தில் இறங்கிதேடுகிறார் சமுத்திரகனி. வைபவின் காதல் என்னஆனது...? காணமால்போக யார் காரணம்...? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு வி்த்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது "ஈசன்" படத்தின் மீதிக்கதை!
போலீஸ் அதிகாரி சங்கையாவாக வரும் சமுத்திரகனி நடிப்பில் சக்கைபோடு போட்டிருக்கிறார். இந்த யூனிஃபார்மை நான் எவ்ளோ லவ் பண்ணி போடுகிறேன் தெரியுமா... என்று கமிஷ்னரிடம் அவர் மல்லுகட்டும் இடங்களிலும், கடமை எனும் பெயரில் அடாவடி அமைச்சர்களுக்கு அவர் அடிபணிந்து போகவேண்டிய சூழலிலும் காட்டும் நடிப்பு மிரள வைக்கிறது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து க்ளைமாக்ஸில் அமைச்சரையும், அவரது கையாள் நமோ நாரயணனையும் போட்டுத்தள்ளும் போது நிஜத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் காலரை தூக்கி விட்டுக்கொள்வார்கள்.
செழியன் எனும் பெயரில் இரவு-பகல் என்று பாராமல் முழுநேர ரோமியோவாக வலம் வரும் வைபவ், தனது முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பாவம் க்ளைமாக்ஸில் அவருக்கு ஏற்படும் நிலைதான் பரிதாபம்.
அப்பாவின் எதிரிகள் அல்ல... வைபவ் படிக்கும் காலத்தில் செய்த ரோமியோ தனம் தான் அவர் காணாமல் போக காரணம் என்பது எதிர்பாராத திருப்பம். அமைச்சரின் கையாள், கோபாலாக வரும் நமோ நாரயணனின் நடிப்பு நச் என்று இருக்கிறது.
ஏ.எல்.அழகப்பன் கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்து எம்.எல்.ஏ., அமைச்சர் என ஆகும்போது, சில அரசியல்வாதிகளை பிரதிபலித்திருந்தாலும், அவரது டப்பிங் வாய்ஸ் படத்தில் அவருக்கு பெரிய மைனஸ்.
வாய்பேச முடியாத பூரணி கேரக்டரில் வரும் அபினயா, ரேஷ்மாகவாக, வைபவின் காதலியா வரும் அபர்ணா, ஆர்த்தொடக்ஸ் ஃபேமிலி பெண்ணாக வரும் சியமளா எனும் ப்ரியா, அம்மா கேரக்டரில் வரும் துளசி என சகலரும் தங்கள் பங்கை சரியாவே செய்திருக்கின்றனர்.
அதிலும் வாய்பேச முடியாத பூரணிக்கு நிகழும் கொடூரமும், அதனால் அவரது குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் விதமும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனாலும் அவரது தம்பி சிவன் கேரக்டரில் பள்ளி சிறுவனாக வரும் துஷ்யந்த், வைபவ் அவரது நண்பர் வினோத் உள்ளிட்டவர்களை தீர்த்து கட்டும் விதம் நம்பமுடியாதது.
அதேமாதிரி அபினயாவின் அப்பா கேரக்டருக்கு காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்திருக்கும் டப்பிங் தனியாக தெரிவது மைனஸ்.
ஜேம்ஸ்வசந்தனின் இசையில், தஞ்சை செல்வியின் குரலில் ஒளிக்கும் ஜில்லா விட்டு... பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் பேசும்படி இல்லாதது குறை. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்!
இயக்குநர் சசிகுமார் தனது களமான கிராமங்களைவிட்டு நகரத்திற்கு வந்ததாலோ என்னவோ, சிட்டி பேஷன் களை குறைகூறும் "ஈசன்" பெரியளவில் "பேசுவான்" என்று சொல்ல முடியவி்ல்லை.
2 comments:
உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது.
"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
Post a Comment