உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணியை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் ஏப்ரல் 2ம்தேதி வரை நடத்துகிறது. இந்த தொடருக்கான தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணி ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்று பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஐ.சி.சி.யோ ஆஸ்கார் நாயகனை ஓரம் கட்டிவிட்டு, பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் குழுவிற்கு வழங்கி இசை ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.சி.யின் இந்த முடிவு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ள அதேநேரம், சங்கர், யஹஷான், லாய் ஆகியோரின் ரசிகர்களை உற்சாகத் துள்ளலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
"தே குமா கே" என்று துவங்கும் அந்த பாடல் இந்தி, வங்காளம் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் இன்று ரசிகர்களின் செவிகளை சென்றடையும் வகையில் வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட்களில் வெளியிடப்படுகிறது. இந்த பாடலின் சர்வதேச ஒளிபரப்பு உரிமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமே (ஐசிசி) இருக்கிறது.
ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? : "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதுகள் வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான், அந்த பெருமை நீங்குவதற்குள்ளாக காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான தீம் பாடலுக்கு இசையமைத்தார்.
சர்ச்சைகளின் மொத்த உருவமாக திகழ்ந்த காமென்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடர்பாடுகள், பிரச்னைகள் வந்ததுடன், தீம் பாடலும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்தது. பாட்டும், இசையும் சரியில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்த அதே நேரத்தில், ரஹ்மான் இசையமைத்த பாடலில் பணியாற்ற முடியாது என்று முன்னணி பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரசிகர்களின் அதிருப்தி மற்றும் கலைஞர்களின் எதிப்பால் முதலில் உருவான தீம் பாடலம் மாற்றப்பட்டது. இருப்பினும் அது பெரும்பாலான பொதுமக்களை போய்ச் சேரவில்லை. ரூ, 5 கோடியை சமபளமாக பெற்றுக் கொண்டு ரஹ்மான் உருவாக்கிய தீம் பாடல் பிரபலம் ஆகாததாலும், ரஹ்மான் இசையமைக்கும் பாடலில் பணியாற்ற மாட்டோம் என்று சக கலைஞர்கள் போர்க்கொடு தூக்கியதாலுமே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில உலககோப்பை கிரிக்கெட் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அணுகவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உருவாகியிருக்கும் தீம் பாடலுக்கு இசையமைத்திருக்கும் சங்கர், யஹஷான், லாய் குழுவினர்தான் கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்திற்கு இசையமைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.