ஆஸ்காரை நழுவ விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது.


கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது.


ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் ‌பகிர்ந்து கொண்டுள்ளனர்.



விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன.


இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது.


இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.



தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது.


இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.

மீனாட்சியை இழிவுபடுத்திய கவுத‌ம் வாசுதேவ் மேனன்

நடுநிசி நாய்கள் படத்தில் தமிழ் கடவுளான மீனாட்சியை இழிவு படுத்திய டைரக்டர் கவுத‌ம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு வாரம் கெடு விதித்திருக்கிறது சிவசேனா கட்சி.


வளர்ப்பு தாயையே தாரமாக்கிக் கொள்ளும் கலாச்சார சீரழிவு கதைதான் நடுநிசி நாய்கள் படத்தின் கதை. இந்த படம் ரீலிஸ் ஆன நாள் முதலே பல்வேறு எதிர்ப்புகளை சம்பாதி்த்து வருகிறது.


அதே நேரம் போட்ட பணத்தை படம் ரீலீஸ் ஆகி இரண்டொரு நாளிலேயே எடுத்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள்.


விளக்குமாற்றுடன் கவுதம் வீடு முற்றுகை, நாய்களுடன் கவுதம் வீடுமுன் போராட்டம் என நடந்து வந்த இந்த போராட்டம், இப்போது கெடுவில் போய் நிற்கிறது.


நடுநிசி நாய்கள் படத்தில் இடம்பெறும் மீனாட்சி என்ற பெயரை ஒரு வாரத்திற்குள் நீக்காவிட்டால் கவுதம் மேனன் வீடு முன் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது சிவசேனா கட்சி.


இதுபற்றி கட்சியின் தமிழ்மாநில தலைவர் மா.திரவிய பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுநிசி நாய்கள் திரைப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது.


படத்தில் வரும் மீனாட்சி என்ற பெண்ணின் பெயரை மேரி என்றோ பாத்திமா என்றோ பெயர் வைக்க வேண்டியதுதானே?


ஏன் தமிழ் கடவுளான மீனாட்சியை இழிவு படுத்த வேண்டும்?. மீனாட்சி என்ற பெயரை படத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் நீக்காவிட்டால் சிவசேனா கட்சி கவுதம்‌ மேனன் வீட்டை முற்றுகையிட்டு, மறியல் போராட்டம் நடத்தப்படும், என்று கூறியுள்ளார்.

குழந்தை பெற்றதாக வதந்தி: அலறுகிறார் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழிலதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப்பற்றிய வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் ஒவ்வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திருமணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், தெலுங்கில் "தீன்மார்" படங்களில் நடித்து வருகிறார். இந்தபடங்கள் விரைவில் ரீலசாக இருக்கிறது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடந்து இருப்பதாக பரவிய வதந்தியால், தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று அச்சப்படுகிறார்.

இந்நிலையில் சூட்டிங்கில் இருந்த திரிஷாவிடம் இதுகுறித்து கேட்ட போது அலறிவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு அரசியல் புள்ளி ஒருவரின் மகனுடன் திருமணம் நடந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பியது.

இப்போது தொழில் அதிபருடன் திருணம் செய்து கொண்‌டதாக வதந்தி. ஆனால் இதனை பலமுறை மறுத்து விட்டேன், ஆனாலும் தொடர்கிறது. அதுகூட பரவாயில்லை எனக்கு குழந்தை இருப்பதாக கூட சிலர் வதந்திகள் பரப்புகின்றனர்.

நான் யாரையும், ரகசிய திருமணம் செய்யவில்லை, அவ்வாறு செய்ய எனக்கு அவசியமும் இல்லை. எனது திருமணத்தை ஊர் அறிய உலகறிய நடத்துவேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்யமாட்டேன் என்று கோபத்துடன் கூறினார்.

நடுநிசி நாய்கள் நவீன கால படம்

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.


வளர்ப்புத் தாயையே தாரமாக்கிக் கொள்ளும் சர்ச்சையான கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் குறித்து, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


நடுநிசி நாய்கள் ஒரு நவீன கால தமிழ்ப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத விதிகளை உடைக்க முயற்சி செய்திருக்கிறேன். இது எனக்கும்கூட ஒரு புது வகையான திரைப்படம்தான்.


இருண்ட உண்மைகளும் மனதை பாதிக்கும் விஷயங்களும் கொண்ட படம் என்ற முறையில் இது ஒரு பரிசோதனை. எல்லா வகையிலும் என்னுடைய முந்தைய படங்களிலிருந்து நடுநிசி நாய்கள் வேறுபட்டது. நான் என்னுடையது என்று அறியப்பட்ட பாணியிலிருந்து விலகி மாற்று பாணிகளை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.


புதிய பாணிகளை எனதாக்கி கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் இத்திரைப்படம். எந்த ஒரு பரிசோதனை முயற்சிக்கும் போற்றுதலும், தூற்றுதலும் இருக்கும் என்பது இன்று தமிழ் சினிமாவில் நான் இருக்கும் இடத்தில் நான் நன்கு அறிந்ததே.


முழு மனதிண்மையோடு நான் நடுநிசி நாய்களின் பக்கம் நிற்கிறேன். இந்த வகைப்படங்கள் பார்த்து பழகாதவர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூற முடியாத ஒரு படம்தான் இது. இது ஒரு அனுபவம், அவ்வளவே.


இறுதியில் என்னுடைய இயக்குநர் கார்டு வரும் முன்பு வரும் இறுதிகாட்சி உங்களுக்கு விளக்கும் இத்திரைப்படத்தை எடுக்க நான் ஏன் முடிவு செய்தேன் என்று. உங்களுடைய ஆதரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாணியும் பல புதிய தலைமுறை இயக்குநர்களையும் தோற்றுவிக்க வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தம்பிக்கோட்டை - சினிமா விமர்சனம்

வில்லன்கள் தடையை மீறி கிராமத்தில் பாலம் கட்டும் இளைஞன் கதை...கல்லூரி மாணவர் நரேன். இவர் அக்கா மீனா. அதே காலேஜில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

நரேனும் சக மாணவர்களும் தம்பிக்கோட்டைக்கு என்.எஸ்.எஸ். முகாம் செல்கின்றனர். அங்கு நான் கடவுள் ராஜேந்திரன் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார்.

பழுதான பாலத்தை கட்ட வரும் என்ஜினீயர்களையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறார். அவர் மகள் பூனம் பாஜ்வாவும் நரேனும் காதல் வயப்படுகின்றனர். விஷயம் தெரிந்ததும் நரேனை வெட்டி சாய்க்கின்றனர்.

குற்றுயிர் குலையியராய் பட்டிணம் ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்து பிழைக்க வைக்கின்றனர். தம்பி நிலை கண்டு வெகுண்டெழும் மீனா பிளாஷ்பேக் கதை சொல்கிறார்.

அதே தம்பிக்கோட்டையில் தனியார் பஸ் டிரைவராக இருந்த பிரபுதான் தங்கள் தந்தை என்றும், அவரை கொன்று அங்குள்ள பாலத்தை நான் கடவுள் ராஜேந்திரன் கோஷ்டி தகர்த்துவிட்டனர் என்றும் விவரிக்கிறார். கிராமத்தில் மீண்டும் பாலம் கட்ட தூண்டுகிறார்.

அக்காள் வாக்குப்படி தம்பிக்கோட்டை செல்லும் நரேன் பாலம் கட்டினாரா? என்பது கிளைமாக்ஸ்.

நரேன்- மீனா பாசக்கார அக்காள் தம்பியாக வாழ்கிறார்கள். மீனாவை கேலி செய்யும் ரவுடி மாணவன் அண்ணனை நொறுக்கி தம்பியை மன்னிப்பு கேட்க செய்யும் ஆரம்பமே ஆரவாரம். தம்பிக்கோட்டை பயணமானதும் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறுகிறது.

உள்ளூர் தாதா மகளுடன் காதல் வயப்பட்டதும் என்ன ஆகுமோ என பதட்டப்பட வைக்கின்றன. ரவுடிகளுடன் சண்டையிடுவதில் வேகம்.

மீனா அழகான அக்காள்... நரேன் அடிபட்டு கிடப்பது கண்டு துடிப்பது, பாலம் கட்டும் கடமையை உணர்த்தி ஆவேசமாவது அழுத்தமானவை. பூனம்பாஜ்வா காதலுக்கு பயன்பட்டுள்ளார். பட்டணத்து பெண் தாதாவாக வரும் சங்கீதா மிரட்டல் வில்லி. தொண்டை வலிக்க கத்தி பேசுவது ஓவர்.

பேராசிரியராக வரும் எம்.எஸ். பாஸ்கர், சந்தானம் சிரிக்க வைக்கின்றனர். பிரபு சிறிது நேரம் வந்தாலும் கம்பீரம். குடும்பபாங்கான கதையை பாசம், ஆக்ஷன் ரூட்டில் கலகலப்பும் விறு விறுப்புமாய் நகர்த்தியுள்ளார் இயக்குனர் அம்மு ரமேஷ்.

நரேன்- பூனம் பாஜ்வாவிடம் காதல் பற்றிக் கொள்வதில் ஈர்ப்பு இல்லை. இமான் இசையில் பாடல்கள் தரமானவை.

விஜய்யின் தேர்தல் நேர ட்ரிப்! புது தகவல்

தேர்தல் நெருங்கி விட்டாலே முன்னணி நடிகர்களின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகத்தான் இருக்கும். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார், எந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்? என யூகங்களின் அடிப்படையில் மீடிக்களில் ‌பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

சாதாரண நடிகரின் நிலையே இப்படியென்றால், அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று அவ்வப்போது சொல்லி தனது ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நிலை எப்படியிருக்கும்?


காவலன் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அரசியல்வாதிகள் தடுத்தார்கள்; ஆளும்கட்சி பிரமுகர்கள் தியேட்டர் அதிபர்களை மிரட்டினார்கள் என்றெல்லாம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய விஜய், காவலன் ஹிட் ஆகி விட்ட மகிழ்ச்சியை சைலண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்.


விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரோ, காவலன் பஞ்சாயத்து நடந்தபோது ஒருமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இப்போது மீண்டும் ஒருமுறை போயஸ் கார்டன் சென்றிருக்கிறார்.


இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் விஜய், அதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் களம் இறங்குவார் என்று பலரும் யூகித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஆனால் விஜய்யின் எண்ணம் வேறாக இருக்கிறது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டார தகவல். தேர்தல் நேரத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப்போவதில்லையாம். ‌அந்த நேரத்தில் வெளிநாடு ட்ரிப் அடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் அவர்.


அரசியல் விவகாரத்தில் விஜய்யின் எண்ணமும், அப்பா சந்திரசேகரின் எண்ணமும் வேறு‌ வேறாக இருப்பதாக சொல்கிறது விவரமறிந்த வட்டாரம்!

டி.ராஜேந்தரின் ஒரு தலை காதல்

தமிழ் சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று கூறப்படும் விஜய.டி.ராஜேந்தர் தன்னுடைய ஒரு தலைக் காதல் பட வேலையை ஆரம்பித்து விட்டார்.

ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் விஜய.டி.ராஜேந்தர்.

தனக்கென்று சினிமாவில் ஒரு பாணியை வைத்துக் கொண்ட டி.ராஜேந்தர், நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு என்று படத்தின் பெரும்பாலான பணிகளை இவர் ஒருவரே செய்துவிடுவார்.

30ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வரும் விஜய.டி.ராஜேந்தர், இப்போதும், இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு தன்னால் சினிமா இயக்க முடியும் என்ற நம்பிக்கையில் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை.

இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்கி கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக இவர் வீராசாமி என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் நடித்து இயக்கும் படம் "ஒரு தலைக் காதல்". குறள் டிவி மற்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

இந்தபடத்திலும் தன்னுடைய வழக்கமான பணிகளான நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என அனைத்தையும் இவரே ஏற்றுள்ளார்.

பிப்.16ம் தேதி முதல் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ளார். படத்தில் நாயகிகளாக முதுமுகங்கள் இரண்டு பேர் நடிக்கின்றனர்.

லாரா தத்தா-மகேஷ் பூபதி ரகசிய திருமணம்

நடிகை லாரா தத்தா-மகேஷ் பூபதி இடையே ரகசியமாக பதிவு திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டாரது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, மாடல் அழகி ஸ்வேதா மேனனை திருமணம் செய்தார். இவர்களுக்குள் ‌ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனையடுத்து லாரா தத்தாவை காதலித்து வந்தார் மகேஷ் பூபதி.

இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மகேஷ் பூபதிக்கும், லாரா தத்தாவுக்கும் திடீரென பதிவு திருமணம் நடந்தது.

பந்த்ராவில் உள்ள மகேஷ் பூபதி வீட்டில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டாரது குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து புது ஜோடிகள் இரவு கோவா புறப்பட்டு சென்றனர். வருகிற 19ம் தேதி, தாஜ் அகுடாவில் உள்ள சன்செட் அவென்யூவில் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து இருதினங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிகிறது.

இரட்டை விரலை காட்டப்போகிறார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா இனிமேல் தன்னிடம் கால்ஷீட் கேட்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் இரட்டை விரலை காட்ட முடிவு செய்திருக்கிறாராம்.

ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அனுஷ்கா அப்பொதெல்லாம் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. அருந்ததீ படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டாபோட்டு குடியேறத் தொடங்கி விட்டது இந்த ஆறடி உயர அல்வா துண்டு.

இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையும் இவர்தான். இரவு பகலாக சூட்டிங்கில் பங்கேற்று பிஸியாக இருக்கும் அம்மணியைத் ‌தேடி தினம் தினம் புதுப்புது படங்கள் வந்து கொண்‌டே இருக்கின்றன.

சில தயாரிப்பாளர்கள் தினமும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தொந்தரவு தயாரிப்பாளர்களை விரட்டியடிக்க வழக்கமாக முன்னணி நடிகைகள் செய்யும் சம்பள உயர்வு வித்தையையும் செய்திருக்கிறார் அனுஷ்.

அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறதாம். ஆம்! அம்மணி சம்பளமாக 2 கோடி வேண்டும் என்று கேட்க சில தயாரிப்பாளர்கள் அம்மாடியோவ்... என்று அலறியடித்து ஓட்டம் பிடித்து விட்டார்கள்.

இதனால் இனிமேல் தன்னை அணுகுபவர்களிடம் இரட்டை விரலையே காட்ட திட்டமிட்டிருக்கிறாம் அனுஷ்.

கமல்ஹாசனுடன் ஜோடி சேரப்போகும் புதிய படத்தில் அனுஷ்காவுக்கு 2 சி சம்பளமாம். எத்தனை சி, சொன்னாலும் தர ரெடி என்று சொல்லிக் கொண்டும் கோடம்பாக்கத்தில் சில தயாரிப்புகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்பது அம்மணிக்கு தெரியாதா என்ன?

தமன்னாவுக்கு கலைமாமணி விருது

நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட 76 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்கினார்.


ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதேபோன்று 2007,2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.


இதைத்தொடர்ந்து, கலைமாமணி மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி பேசினார். மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


விழாவில், பாரதி விருதை எழுத்தாளர் ஜெயகாந்தனும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை இசையமைப்பாளர் இளையராஜாவும், பாலசரசுவதி விருதுதை பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்ரமணியமும் பெற்றுக் கொண்டனர்.


2008ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர் கருணாஸ், ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் திருமுருகன் உள்பட 27 பேருக்கும், 2009ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த், குணச்சித்திர நடிகைகள் ரோகிணி, சரண்யா, நடிகைகள் மாளவிகா, ரேவதி சங்கரன், நாட்டுப்புற பாடகி தஞ்சை சின்னப்பொன்னு உள்பட 23 பேருக்கும் வழங்கப்பட்டது.


2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட 26 பேர் பெற்றனர். விருது பெற்ற அனைவரையும் முதல்வர் கருணாநிதி பாராட்டி பேசினார்.

ரஜினியின் அடுத்த படத்தில் தீபிகா

ராணா' படத்தில் ரஜினியின் ஜோடியாகிறார் தீபிகா படுகோனே. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்கள் ஏற்கிறார்.

"எந்திரன்' படத்தை தயாரிப்பதாக இருந்த இ-ராஸ் நிறுவனத்துடன், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆக்கர் ஸ்டுடியோ இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மார்ச் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் கட்டமாக பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்ட படப்பிடிப்பில் பாடல்கள் படமாக்கப்படுகின்றன. இந்நிலையில் ரஜினியின் ஜோடியாக நடிப்பது யார்? என்பதில் தீவிர குழப்பம் இருந்து வந்தது.

திரிஷா, அனுஷ்கா என பலர் பேச்சுவார்த்தையில் இருந்த போதிலும், பாலிவுட்டை சேர்ந்த திபீகா படுகோனேவை நாயகியாக்க பேச்சு நடந்து வந்தது.

முதலில் கால்ஷீட் பிரச்னையால் "ராணா' பட வாய்ப்பை ஏற்க மறுத்த திபீகா, பின் சில பாலிவுட் பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு "ராணா'வுக்கு கால்ஷீட் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

யுத்தம் செய் - விமர்சனம்

மர்ம கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி கதை. மிஷ்கினும் சேரனும் கைகோர்த்துள்ளதால் “கிக்”காகவே வந்துள்ளது. கல்லூரி மாணவிகள், அடியாட்கள், ஆட்டோக்காரர் என பல தரப்பினர் காணாமல் போகின்றனர்.

ஆட்கள் கூடும் இடங்களில் அட்டைப்பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட கைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. நகரமே அல்லோலப்படுகிறது. கொலையாளிகளை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி சேரன் தலைமையில் குழு புறப்படுகிறது.

அவர்கள் துப்பு துலக்கையில் திகில் முடிச்சுகள் அவிழ்வதும் கொலையாளிகள் யார் என்று அறியப்படுவதும் உலுக்கும் கதையோட்டம்...

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கெட்டப்பில் சேரன் கன கச்சிதம். தங்கை மாயமான சோகத்தை முகத்தில் இறுக்கமாக்கி கடத்தல் கும்பலை தேடி அலைவதில் வீரியம் காட்டுகிறார். அரிவாள்களுடன் பாயும் ரவுடிகளை சின்ன கத்தியுடன் மோதி வீழ்த்தும் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது.

காதல் மென்மையில் இருந்து விலகி ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிரூபித்துள்ளார். தங்கையை மீட்க கொலைகாரனை விடச்சொல்லி மேலதிகாரியிடம் கெஞ்சி அழுவதில் போலீஸ் மிடுக்கு அடிபடுகிறது.

வில்லன் கோஷ்டிக்கு ஏவல் செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் செல்வா மிரட்டுகிறார்.

ஒய்.ஜி. மகேந்திரனும் அவர் மனைவி, மகனும் திருப்பமான கேரக்டர்கள். மகள் சாவுக்கு காரணமானவர்களை பழி தீர்க்க அவர்கள் செய்யும் சைக்கோ பழி வாங்கல்கள் திகில்படுத்துகின்றன. கிளைமாக்சில் குண்டுகளை நெஞ்சில் தாங்கி விறைப்பாக எதிரிகளை தாக்க நடந்து வருதல் உதறல்...

பிணக்கிடங்கு டாக்டர் ஜெயப்பிரகாஷ், ஜவுளிக்கடையில் உடை மாற்றும் பெண்களை ரசிக்கும் சபலக்கார வில்லன் மாணிக்க விநாயகம், போலீஸ் டி.எஸ்.பி. நரேன், யுகேந்திரன், பெண் போலீஸ் தீபாஷா கேரக்டர்களும் வலுவாக செதுக்கப்பட்டுள்ளன.

கடத்தல், கொலைகள், துப்புறிதல் கதையை இதுவரை பார்க்காத வித்தியாசமான கோணத்தில் விறுவிறுவென நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

ஆரம்பக்கட்ட விசாரணைகள் பிடிபடாமல் நகர்வது சலிப்பு. கே-வின் பின்னணி இசை பெரிய பலம். “கன்னித்தீவு பொண்ணா” பாடல் தாளம் போட வைக்கிறது. சத்யாவின் கேமிரா இரவு பயங்கரங்களை கண்களில் பதிக்கிறது.

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்

வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே உருகுதே..., மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்..., பையாவில் இடம்பெற்ற அடடா மழைடா அடைமழைடா உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.


கோடம்பாக்கத்தின் ஹாட் அண்ட் ஹிட் பாடலாசிரியர் என்று மூத்த பாடலாசிரியர்களே புகழும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ந.முத்துக்குமார். பதவியும், புகழும் கிடைத்தால் தானாகவே தலைக்கேறும் தலைக்கணத்துக்கு இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?


சமீபத்தில் ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என் அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.


விஷயம் ஏவி.எம். சரவணன் காதுகளுக்கு எட்ட..., அவர் எழுதும் பாட்டே நமக்கு வேண்டாம். நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதுடன், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம். டி.இமான் இசையில் குமரன் நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவி.எம் வளாகத்திற்குள்.


மூத்த நடிகர்களும், முன்னணி பாடலாசிரியர்களும் மிகவும் மதிக்கும் நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் ஏவி.எம். அழைப்புக்கு செவி சாய்க்காமல் மறுஅழைப்பு விடுத்த முத்துக்குமாரின் கதை தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட கதையாகி விட்டது என்று கதைக்கிறது கோடம்பாக்கம்!


இப்படியொரு தலைக்கணத்தாலும், மறுப்பாலும் நஷ்டம் என்னவோ தனக்குத்தான் என்பதையும், எத்தனை உயரத்துக்குப் போனாலும் தன்னடக்கம் தேவை என்பதையும் முத்துக்குமார் புரிந்து கொண்டால் சரிதான்!

9 வருடமாக ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - த்ரிஷா

நான் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருப்பதால் என் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று நடிகை த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார். அடிக்கடி வதந்திகளிலும், கிசுகிசுக்களிலும் சிக்கி வரும் த்ரிஷா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி...


இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்திதான். வழக்கம்போலவே இந்த செய்தியையும் த்ரிஷா மறுத்து விட்டார். அவர் அளி்ததுள்ள பேட்டியில், நான் பவன் கல்யாணுடன் `பீம் ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.


அந்த படத்தில் அவருடன் எனக்கு திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜமான ஒரு திருமண மண்டபத்தை தேர்வு செய்து, தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறுவது போல் மிக தத்ரூபமாக அந்த காட்சியை படமாக்கினார்கள்.


ஒருவேளை அதை யாராவது பார்த்து, இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்களோ, என்னவோ? நெருப்பே இல்லாமல் இந்த வதந்தி புகைந்து இருக்கிறது, என்று கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது என்று கூறும் த்ரிஷா, பெரிய பெரிய கதாநாயகிகள் கூட அதிகபட்சமாக 5 ஆண்டுகள்தான் சினிமாவில் இருந்திருக்கிறார்.


நான் ஒய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே என் மீது பொறாமைப்படுகிறார்கள். அவர்கள்தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.


திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நான் திருமணம் செய்துகொள்பவரை பற்றி எனக்கு தெரிய வேண்டும். அவருடைய குணம், சுபாவம், நடத்தை எல்லாம் தெரிய வேண்டும். எனக்கு பிடித்த மாதிரி, என் பெற்றோர்களுக்கும் அவரை பிடிக்க வேண்டும்.


நான் காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு, என் குடும்பத்தினர் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்பார்கள். எனது வருங்கால கணவர், சினிமாவை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சேராதவராகவும் இருக்கலாம். அதற்காக, நான் திட்டமிடவில்லை. இந்த விஷயத்தில், நான் சாதி-மத வேறுபாடு பார்க்க மாட்டேன். என்னை திருமணம் செய்துகொள்பவர் நிச்சயமாக ஒரு ஆணழகனாக இருக்க வேண்டும்.


அவரை எனக்கு பிடிக்க வேண்டும். அவருடன் நான் நீண்ட காலம் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் அமைந்தால், அவரை நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். இந்த வருடம் நிச்சயமாக என் திருமணம் நடைபெறாது. தமிழில், `மங்காத்தா படம் இருக்கிறது. இன்னொரு படம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


தெலுங்கில், `பீம் ஆர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதுபோக மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த ஐந்து படங்களிலேயே வருடம் ஓடிவிடும். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்களே என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது. நிதானமாக திருமணம் செய்துகொள்ளலாம், என்று த்ரிஷா கூறியுள்ளார்.

அரசியல் வாரிசுக்கு காதல் வலை வீசிய தமன நடிகை

ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.

தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது.

அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது.

ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.

இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

பதினாறு - விமர்சனம்

வழக்கமான காதல், கண்ணாமூச்சி கதைதான் பதினாறு. ஆனால் அதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதம்தான் தொன்னுற்று ஆறையும் ரசிக்க வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல!

சிவாவும், மதுசாலினியும் கல்லூரி காதல் ஜோடி! மதுவின் வசதியான தந்தை அபி‌ஷேக்கும், அவரது மனைவியும் இந்த காதலுக்கு எல்லா வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க, மதுவோ ஏழை இளைஞனான சிவாவை விடாமல் காதலிக்கிறார். அவர்களது காதலை பிரிக்க கடைசி அஸ்திரமாக பதினாறு எனும் நாவலை படிக்க கொடுக்கிறார் அபிஷேக்கின் மனைவி.

காதல் நாவலான பதினாறு, அதன் பின் திரையில் ஓட., அதில் கிராமத்து வசதியற்ற மாணவனுக்கும், வசதியான பள்ளி மாணவிக்குமிடையேயான காதல், கைகூடாமல் போன கதை சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கதையை படித்த பின்பும் மனம் மாறாத சிவா, அந்த கதையில் இடம்பெற்ற பாத்திரங்களைத் தேடிப் புறப்படுகிறார்.

அவ்வாறு புறப்பட்ட சிவாவிற்கு கிடைத்த விடை என்ன? எத்தனையோ காதல் கதைகள் இருந்தும் பதினாறு கதையை அபிஷேக்கின் மனைவி மதுசாலினி - சிவா ஜோடியிடம் கொடுக்க காரணம் என்ன? சிவா - மது காதல் கடைசியில் கைகூடியாதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இனிமையாகவும், இளமையாகவும் விடையளிக்கிறது பதினாறு படத்தின் மீதிக்கதை!

சென்னை 28, தமிழ்ப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரா இது? எனக் கேட்கும் அளவுக்கு வித்தியாசமாக நடித்திருக்கிறார் சிவா. ஆங்காங்கே அவருக்கே உரித்தான நையாண்டித்தனமும், நக்கலும் வெளிப்பட்டாலும் படத்தின் இயல்பு மாறாமல் நகரத்து காதலராக நச்சென்று நடித்திருக்கிறார் மனிதர். பேஷ்..! பேஷ்..!!

சிவாவை விட, சின்ன வயது அபிஷேக்காக கிராமத்து காதலர் கிஷோருக்கு நடிக்க நிறையவே வாய்ப்பு. அத்தனை வாய்ப்புகளையும் அழகாக பூர்த்தி செய்து ஜொலித்திருக்கிறார் புதுமுகம் கிஷோரும். சில இடங்களில் சிவா - மதுவின் கிராமத்து காதலைவிட, பதினாறு கதையாக சொல்லப்படும் கிஷோர் - வினிதாவின் கிராமத்து காதல் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறது என்றால் அது பொய்யல்ல!

சிவா - கிஷோர் மாதிரியேல நகரத்து காதலி மது, ிராமத்து காதலி வினிதா இருவரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு! அதிலும் புதுமுகம் வினிதா பிரமாதம்! அப்பா விட்ட சவாலுக்கு பதிலடியாக கோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு உடுத்தியிருக்கும் துணிமணிகளை அவிழ்த்து எறிந்து விட்டு, கோபி நீ உழைச்சி ஒரு முழம் துணியாவது வாங்கி வா... எனும் இடத்தில் நம்மை அதிர வைப்பதோடு, இவர்களது காதல் எப்படியாவது சேர்ந்து விடாதா...? என அழவும் வைப்பது வினிதாவின் நடிப்பிற்கு கிடைத்த வெமாணமாகும்.

சின்ன வயதில் கிஷோராகவும், பெரிய வயதில் அபிஷேக்காகவும் வரும் கோபால கிருஷ்ணன் கதாபாத்திரம் நச் என்றால் இளவரசி - கோபி என முதல் ஆங்கி எழுத்துக்களைச் சேர்ந்து 16 என காடு மேடெல்லாம் எழுதி வைக்கும் அவரது காதல் கவிதை டச்.

இவர்கள் எல்லோரையும் விட இளவரசி எனும் வினிதாவின் கிராமத்து அப்பா கேரக்டரில் வரும் குணா உருக்கம்! மனிதர், மகளின் மீதிருக்கும் அன்பால் அவள் பண்ணும் காதல் அடாவடிகளை பொறுத்துக் கொண்டு, தங்கையின் காலில் விழுந்து கதறும் இடத்தில் பெண்ணைப் பெற்றவர்களின் கண்ணீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக கைத்தட்டலாக பெற்று தியேட்டரை அதிர வைக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நகரத்து காதலுக்கு பாடல்கள் ஓ.கே.! அப்பா இசைஞானியிடம் அட்லீஸ்ட் ஐடியாவாவது கேட்டிருக்கலாம் யுவன்! அருள்தாஸின் ஒளிப்பதிவு நகரம் - கிராமம் இரண்டிலும் இளமையாகவும், இனிமையாகவும் இருப்பது பலம்! அதேமாதிரி ஆர்.கே.மகாலிங்கத்திவ் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வசனங்களும் படத்தின் பெரும்பலம்.

டி,சபாபதியின் இயக்கத்தில் பதினாறு., இருபத்தாறு, முப்பத்தாறு, நாற்பத்தாறு, ஐம்பத்தாறு, அறுபத்தாறு, எழுபத்தாறு, எண்பத்தாறுல தொன்னுத்தாறு உள்ளிட்டா எல்லாரும் ரசிக்கும் படம்.


பதினாறு - காதல் தேனாறு; பாலாறு.

த்ரிஷாவுக்கு கல்யாணம்

நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.


பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார்.


தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த‌ ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.


திருமணத்திற்காக மாப்பிள்ளை வேட்டையில் த்ரிஷாவின் பெற்றோர் இறங்கியிருக்கும் அதே வேளையில் அம்மணி, பிராணிகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். பிராணிகள் மேல் அதிக பிரியம் உள்ளவர் நடிக‌ை த்ரிஷா.


பெங்களூரில் சாலையில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்ந்து வரும் த்ரிஷா, பிராணிகள் நல அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். ஆதரவில்லாமல் பிராணிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் தொடங்க முடிவு செய்திருக்கிறார்.


இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் நிறைய பிராணிகள் உதவியின்றி இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்த அளவு அவைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

ஆளும்கட்சியினரால் எனக்கு ஆபத்து - விஜய்

என் காவலன் படத்துக்கு எதிராக ‌செயல்பட்ட ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து வரலாம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு ரீலிஸ் ஆன காவலனுக்கு எதிராக பல்வேறு பிரச்‌னைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அடுத்தடுத்து போடப்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தகர்த்தெறிந்து பொங்கல் ரீலிஸில் வெற்றிகரமாக ஓடும் படமாக உருவெடுத்திருக்கிறது காவலன்.

படத்தின் ரீலிஸை தனது பிரஸ்டீஜாக கருதிய விஜய், பட வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்நிலையில் ஆளும்கட்சியிரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் அளி்த்துள்ள பேட்டியில், இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம்.

ஆனா, காவலன் படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையை தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்கு பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையை சொல்ல முடியாது.

காவலன் படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு தெளிவாக திட்டம் போடுறதை புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க.

அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!

வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. காவலன் படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லா தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் காவலன் வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்

சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன்.

அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே? இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, என்று கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சு தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை என்றும் விஜய் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கார்த்தியா, சிம்புவா, ஜீவாவா?

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் வெற்றி மாறன். இதனையடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் வெற்றிமாறன். இதற்காக அவர் மூன்று நடிகர்களை தேர்வு செய்துள்ளார். கார்த்தி, ஜீவா, சிம்பு ஆகியோர் அந்த மூவர்.

இந்த மூன்று நடிகர்களும் தற்போது தமிழில் முன்னணி நடிகர்கள். கார்த்தி நடித்த பருத்திவீரன் முதல் கடைசியாக நடித்த சிறுத்தை வரை அனைத்தும் படங்களுமே ஹிட் தான்.

அதே‌போல் நடிகர் சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாம் ஹிட்டான படம்தான்.

தவிர விரைவில் வெளிவர இருக்கும் சிம்புவின் வானம் படமும், ஜீவாவின் கோ படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆகையால் இந்த மூன்று நடிகர்களில் யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் வெற்றிமாறன்.

ஆனால் ஒன்று, இந்த மூவரில் ஒருவர் தான் வெற்றிமாறனின் அடுத்தபடத்தின் கதாநாயகன் என்பது மட்டும் உறுதி.

விக்ரமுடன் ஜோடிபோடும் தீக்ஷா செத்

"வெண்ணிலா கபடிக்குழு", "நான் மகான் அல்ல" ‌போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் சுசீந்திரன். இதற்கு அடுத்தபடியாக "அழகர்சாமியின் குதிரை" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தை திரையிடுவதற்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து விக்ரம் வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். இன்னும் பெயர் இடப்படாத இப்படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு நாயகியை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

அமலா பாலை தன்னுடன் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார் விக்ரம். காரணம் "மைனா" படத்தில் அமலா பாலின் நடிப்பை பார்த்து தன்னுடைய "தெய்வமகன்" படத்தில் அவரை சிபாரிசு செய்துள்ளார்.

அதேபோல் இந்தபடத்திலும் அவரை நடிக்க வைக்க எண்ணியிருந்தார். ஆனால் டைரக்டர் சுசீந்திரனோ, அமலா பால் வேண்டாம், தீக்ஷா செத் தான் சரியானவர் என்று அ‌வ‌ரையே ஓ.கே.பண்ணிவிட்டார். படத்தில் இன்‌னொரு நாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.

தீக்ஷா செத் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தெலுங்கில் "வேதம்" படத்தில் அல்லு அர்ஜூனாவுடனும், ரவி தேஜாவுடன் "மிராபிகே" படத்திலும், கோபி சந்த் உடன் "வான்டட்" படத்திலும் நடித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...