தம்பிக்கோட்டை - சினிமா விமர்சனம்

வில்லன்கள் தடையை மீறி கிராமத்தில் பாலம் கட்டும் இளைஞன் கதை...கல்லூரி மாணவர் நரேன். இவர் அக்கா மீனா. அதே காலேஜில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

நரேனும் சக மாணவர்களும் தம்பிக்கோட்டைக்கு என்.எஸ்.எஸ். முகாம் செல்கின்றனர். அங்கு நான் கடவுள் ராஜேந்திரன் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார்.

பழுதான பாலத்தை கட்ட வரும் என்ஜினீயர்களையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறார். அவர் மகள் பூனம் பாஜ்வாவும் நரேனும் காதல் வயப்படுகின்றனர். விஷயம் தெரிந்ததும் நரேனை வெட்டி சாய்க்கின்றனர்.

குற்றுயிர் குலையியராய் பட்டிணம் ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்து பிழைக்க வைக்கின்றனர். தம்பி நிலை கண்டு வெகுண்டெழும் மீனா பிளாஷ்பேக் கதை சொல்கிறார்.

அதே தம்பிக்கோட்டையில் தனியார் பஸ் டிரைவராக இருந்த பிரபுதான் தங்கள் தந்தை என்றும், அவரை கொன்று அங்குள்ள பாலத்தை நான் கடவுள் ராஜேந்திரன் கோஷ்டி தகர்த்துவிட்டனர் என்றும் விவரிக்கிறார். கிராமத்தில் மீண்டும் பாலம் கட்ட தூண்டுகிறார்.

அக்காள் வாக்குப்படி தம்பிக்கோட்டை செல்லும் நரேன் பாலம் கட்டினாரா? என்பது கிளைமாக்ஸ்.

நரேன்- மீனா பாசக்கார அக்காள் தம்பியாக வாழ்கிறார்கள். மீனாவை கேலி செய்யும் ரவுடி மாணவன் அண்ணனை நொறுக்கி தம்பியை மன்னிப்பு கேட்க செய்யும் ஆரம்பமே ஆரவாரம். தம்பிக்கோட்டை பயணமானதும் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறுகிறது.

உள்ளூர் தாதா மகளுடன் காதல் வயப்பட்டதும் என்ன ஆகுமோ என பதட்டப்பட வைக்கின்றன. ரவுடிகளுடன் சண்டையிடுவதில் வேகம்.

மீனா அழகான அக்காள்... நரேன் அடிபட்டு கிடப்பது கண்டு துடிப்பது, பாலம் கட்டும் கடமையை உணர்த்தி ஆவேசமாவது அழுத்தமானவை. பூனம்பாஜ்வா காதலுக்கு பயன்பட்டுள்ளார். பட்டணத்து பெண் தாதாவாக வரும் சங்கீதா மிரட்டல் வில்லி. தொண்டை வலிக்க கத்தி பேசுவது ஓவர்.

பேராசிரியராக வரும் எம்.எஸ். பாஸ்கர், சந்தானம் சிரிக்க வைக்கின்றனர். பிரபு சிறிது நேரம் வந்தாலும் கம்பீரம். குடும்பபாங்கான கதையை பாசம், ஆக்ஷன் ரூட்டில் கலகலப்பும் விறு விறுப்புமாய் நகர்த்தியுள்ளார் இயக்குனர் அம்மு ரமேஷ்.

நரேன்- பூனம் பாஜ்வாவிடம் காதல் பற்றிக் கொள்வதில் ஈர்ப்பு இல்லை. இமான் இசையில் பாடல்கள் தரமானவை.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...