வழக்கமான காதல், கண்ணாமூச்சி கதைதான் பதினாறு. ஆனால் அதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதம்தான் தொன்னுற்று ஆறையும் ரசிக்க வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல!
சிவாவும், மதுசாலினியும் கல்லூரி காதல் ஜோடி! மதுவின் வசதியான தந்தை அபிஷேக்கும், அவரது மனைவியும் இந்த காதலுக்கு எல்லா வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க, மதுவோ ஏழை இளைஞனான சிவாவை விடாமல் காதலிக்கிறார். அவர்களது காதலை பிரிக்க கடைசி அஸ்திரமாக பதினாறு எனும் நாவலை படிக்க கொடுக்கிறார் அபிஷேக்கின் மனைவி.
காதல் நாவலான பதினாறு, அதன் பின் திரையில் ஓட., அதில் கிராமத்து வசதியற்ற மாணவனுக்கும், வசதியான பள்ளி மாணவிக்குமிடையேயான காதல், கைகூடாமல் போன கதை சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கதையை படித்த பின்பும் மனம் மாறாத சிவா, அந்த கதையில் இடம்பெற்ற பாத்திரங்களைத் தேடிப் புறப்படுகிறார்.
அவ்வாறு புறப்பட்ட சிவாவிற்கு கிடைத்த விடை என்ன? எத்தனையோ காதல் கதைகள் இருந்தும் பதினாறு கதையை அபிஷேக்கின் மனைவி மதுசாலினி - சிவா ஜோடியிடம் கொடுக்க காரணம் என்ன? சிவா - மது காதல் கடைசியில் கைகூடியாதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இனிமையாகவும், இளமையாகவும் விடையளிக்கிறது பதினாறு படத்தின் மீதிக்கதை!
சென்னை 28, தமிழ்ப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரா இது? எனக் கேட்கும் அளவுக்கு வித்தியாசமாக நடித்திருக்கிறார் சிவா. ஆங்காங்கே அவருக்கே உரித்தான நையாண்டித்தனமும், நக்கலும் வெளிப்பட்டாலும் படத்தின் இயல்பு மாறாமல் நகரத்து காதலராக நச்சென்று நடித்திருக்கிறார் மனிதர். பேஷ்..! பேஷ்..!!
சிவாவை விட, சின்ன வயது அபிஷேக்காக கிராமத்து காதலர் கிஷோருக்கு நடிக்க நிறையவே வாய்ப்பு. அத்தனை வாய்ப்புகளையும் அழகாக பூர்த்தி செய்து ஜொலித்திருக்கிறார் புதுமுகம் கிஷோரும். சில இடங்களில் சிவா - மதுவின் கிராமத்து காதலைவிட, பதினாறு கதையாக சொல்லப்படும் கிஷோர் - வினிதாவின் கிராமத்து காதல் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறது என்றால் அது பொய்யல்ல!
சிவா - கிஷோர் மாதிரியேல நகரத்து காதலி மது, ிராமத்து காதலி வினிதா இருவரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு! அதிலும் புதுமுகம் வினிதா பிரமாதம்! அப்பா விட்ட சவாலுக்கு பதிலடியாக கோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு உடுத்தியிருக்கும் துணிமணிகளை அவிழ்த்து எறிந்து விட்டு, கோபி நீ உழைச்சி ஒரு முழம் துணியாவது வாங்கி வா... எனும் இடத்தில் நம்மை அதிர வைப்பதோடு, இவர்களது காதல் எப்படியாவது சேர்ந்து விடாதா...? என அழவும் வைப்பது வினிதாவின் நடிப்பிற்கு கிடைத்த வெமாணமாகும்.
சின்ன வயதில் கிஷோராகவும், பெரிய வயதில் அபிஷேக்காகவும் வரும் கோபால கிருஷ்ணன் கதாபாத்திரம் நச் என்றால் இளவரசி - கோபி என முதல் ஆங்கி எழுத்துக்களைச் சேர்ந்து 16 என காடு மேடெல்லாம் எழுதி வைக்கும் அவரது காதல் கவிதை டச்.
இவர்கள் எல்லோரையும் விட இளவரசி எனும் வினிதாவின் கிராமத்து அப்பா கேரக்டரில் வரும் குணா உருக்கம்! மனிதர், மகளின் மீதிருக்கும் அன்பால் அவள் பண்ணும் காதல் அடாவடிகளை பொறுத்துக் கொண்டு, தங்கையின் காலில் விழுந்து கதறும் இடத்தில் பெண்ணைப் பெற்றவர்களின் கண்ணீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக கைத்தட்டலாக பெற்று தியேட்டரை அதிர வைக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நகரத்து காதலுக்கு பாடல்கள் ஓ.கே.! அப்பா இசைஞானியிடம் அட்லீஸ்ட் ஐடியாவாவது கேட்டிருக்கலாம் யுவன்! அருள்தாஸின் ஒளிப்பதிவு நகரம் - கிராமம் இரண்டிலும் இளமையாகவும், இனிமையாகவும் இருப்பது பலம்! அதேமாதிரி ஆர்.கே.மகாலிங்கத்திவ் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வசனங்களும் படத்தின் பெரும்பலம்.
டி,சபாபதியின் இயக்கத்தில் பதினாறு., இருபத்தாறு, முப்பத்தாறு, நாற்பத்தாறு, ஐம்பத்தாறு, அறுபத்தாறு, எழுபத்தாறு, எண்பத்தாறுல தொன்னுத்தாறு உள்ளிட்டா எல்லாரும் ரசிக்கும் படம்.
பதினாறு - காதல் தேனாறு; பாலாறு.
0 comments:
Post a Comment