ஆளும்கட்சியினரால் எனக்கு ஆபத்து - விஜய்

என் காவலன் படத்துக்கு எதிராக ‌செயல்பட்ட ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களால் எனக்கு ஆபத்து வரலாம் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு ரீலிஸ் ஆன காவலனுக்கு எதிராக பல்வேறு பிரச்‌னைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அடுத்தடுத்து போடப்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தகர்த்தெறிந்து பொங்கல் ரீலிஸில் வெற்றிகரமாக ஓடும் படமாக உருவெடுத்திருக்கிறது காவலன்.

படத்தின் ரீலிஸை தனது பிரஸ்டீஜாக கருதிய விஜய், பட வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்நிலையில் ஆளும்கட்சியிரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் அளி்த்துள்ள பேட்டியில், இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம்.

ஆனா, காவலன் படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையை தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்கு பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையை சொல்ல முடியாது.

காவலன் படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு தெளிவாக திட்டம் போடுறதை புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க.

அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!

வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. காவலன் படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லா தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் காவலன் வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்

சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன்.

அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே? இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, என்று கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சு தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை என்றும் விஜய் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...