நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய 3 டி திரைப்படத்துக்கு "கோச்சடையான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது இளைய மகள் செüந்தர்யா அஸ்வின் இயக்குகிறார்.
"எந்திரன்' படத்தையடுத்து ரஜினி "ராணா' என்ற புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் மார்ச் மாதம் தொடங்கியது. "ராணா' படப்பிடிப்பு நடந்த முதல் நாளே ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக ரஜினி சிங்கப்பூர் சென்று சிறப்பு சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது
நீண்ட நாள் ஓய்வில் இருந்த ரஜினியும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அதனால் 'ராணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் "ராணா' படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு திடீரென "கோச்சடையான்' என்ற 3 டி படத்தில் ரஜினி நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனமும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான "அவதார்', ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "த அட்வென்ட்ச்சர்ஸ் ஆஃப் டின் டின்' போன்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் "கோச்சடையான்' படம் உருவாக்கப்படுகிறது.
கே.எஸ். ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பட இயக்கத்தின் மேற்பார்வைக்கும் பொறுப்பேற்றிருக்கிறார். ரஜினியின் இளைய மகள் செüந்தர்யா அஸ்வின் படத்தை இயக்குகிறார். படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் வெளிவரும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கி.பி. 710-ம் ஆண்டைச் சேர்ந்த மதுரையின் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனின் வழித்தோன்றலான கோச்சடையான் ரணதீரன் என்ற மன்னன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் கற்பனை கலந்து "கோச்சடையான்' கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றும், மதுரையில் உள்ள ஒரு பகுதி "கோச்சடை' என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"சுல்தான்'தான் "கோச்சடையான்'?
ரஜினியின் மகள் செüந்தர்யா தயாரிப்பிலும் இயக்கத்திலும் "சுல்தான் - த வாரியர்' என்ற அனிமேஷன் படம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சரித்திரப் பின்னணியில் பெரும் பொருள்செலவில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வந்தது. அதன் பிறகு இந்த அனிமேஷன் படத்துக்கு "தீரா' எனப் பெயர் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
அந்தப் படம்தான் புதிய தொழில்நுட்பத்துடன் 3 டி வடிவில் "கோச்சடையான்' என்ற பெயரில் உருவாகிறது எனத் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment