அஜீத்-விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டபோதும், கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாகி விட்டனர். இதனால் அவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பு கூட்டும் நிகழ்வுகளும் இல்லாமல் போனது.
அந்தவகையில், 7 வருடங்களுக்கு முன்பு அஜீத் நடித்த ஆழ்வாரும், விஜய் நடித்த போக்கிரியும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இதில் ஆழ்வாரை விட போக்கிரியே வசூல் சாதனை புரிந்தது.
அதுதான் அவர்கள் கடைசியாக மோதிக்கொண்டது. அதன்பிறகு அதற்கான சூழல் அமையவில்லையா? இல்லை போட்டியே வேண்டாம் என்று அவர்களாக விலக்கிக்கொண்டார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த நிலையில், தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் ஜில்லா பொங்கல் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகிறது.
இதற்கிடையே ஆரம்பத்தை தீபாவளிக்கு வெளியிட்ட அஜீத், பொங்கலுக்கு வீரம் படத்தை வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால், மீண்டும் அஜீத்-விஜய் மோதுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
ஆனால் அப்படியொரு சூழ்நிலை உருவாகவே கூடாது என்று விநியோகஸ்தர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், இரண்டு பேரின் படமும் ஒரே சமயத்தில் தியேட்டருக்கு வந்தால், வசூல் பாதி பாதியாகி விடும். அதில் ஏதேனும் ஒரு படம் தோற்று விட்டால், அதை வாங்கியவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதே அதற்கு காரணமாம்.
அதனால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் மோதவிடக்கூடாது என்பது சம்பந்தமாக சில விநியோகஸ்தர்கள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி விட்டார்களாம்.
0 comments:
Post a Comment