அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்


ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் "மாற்றான்" படம், வருகிற அக்டோபர் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் "மாற்றான்". 

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருவேடங்களில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி மற்றும் மராத்தி படங்களின் பிரபல நடிகர் சச்சின் கடேக்கரும், தேசிய விருது பெற்ற நடிகை தாராவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.என்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

உடலால் ஒட்டிப்பிறந்தாலும், குணத்திலும், கொள்கைகளிலும் எதிரெதிர் துருவமாய் இருக்கும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் பாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. 

பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரமப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மேலும் இப்படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளனர். 

இந்தியாவில் முதன்முறையாக பேஷியல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றி இருக்கின்றனர். 

படத்தில் வரும் இரட்டையர்கள் காட்சியை இருமுறை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அத‌ாவது சூர்யா ஒருகாட்சியில் நடித்த காட்சி, மீண்டும் சில நாட்கள் கழித்து அதே லைட்டிங்குடன் மீண்டும் ஒருமுறை படமாக்கப்படும். இதனை 5 கேமராக்களில் படம் பிடித்து, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் கொண்டு வந்துள்ளனர். 

நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. 

சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, மைசூர், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், முதன்முறையாக லத்வியாவில் முதல் இந்திய படமாக மாற்றான் எடுக்கப்பட்டுள்ளது. 

கே.வி.ஆனந்தின் கனவுபடமான மாற்றான் படத்தை எங்களது நிறுவனம் தயாரித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருகிற அக்‌டோபர் 12ம் தேதி மாற்றான் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஹீரோ இல்லாத படம்

ஆர்.ஆர்.கிரியேஷன் என்ற புதிய நிறுவனம் நவரசம் என்ற படத்தை தயாரிக்கிறது. 

இதில் மகேஷ், தஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எம்.கே.சாந்தாராம் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: 

இந்தப் படத்தின் கதை புதிதல்ல. ஆனால் திரைக்கதை ரொம்ப புதுசாக இருக்கும். படத்தின் முதல் காட்சியிலேயே ஹீரோயின் கொலை செய்யப்படுகிறார். 

அவரை கொலை செய்தவர் யாராக இருக்கும் என்ற பட்டியலில் அவரது காதலன், ஒரு எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு வழக்கறிஞர், அக்காவின் கணவர், பக்கத்து வீட்டுக்காரர், ஆபீஸ் மானேஜர், நண்பர் என ஒன்பது பேர் இருக்கிறார்கள். 

இவர்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் அதிகாரியோ, ஒரு துப்பறிவாளனோ வரமாட்டார்கள். கண்டுபிடிக்கப்போவது படம் பார்க்கும் ஆடியன்ஸ்தான். 

ஹீரோயின் கொலைக்கு பிறகு பிளாஷ்பேக் காட்சிகளாக அவர் இந்த ஒன்பது பேருடன் வரும் காட்சிகள் காட்டப்படும், அப்போது ரசிகர்கள் இவர்தான் கொன்று இருப்பார் என்று முடிவு செய்யும்போது அடுத்தவர் கதை தொடங்கும். 

இப்படியாக ரசிகர்கள் இன்னார்தான் கொலை செய்திருப்பார் என்று முடிவு செய்யும்போது அவர்கள் எதிர்பாராத ஒரு முடிவுடன் படம் நிறைவடையும். இந்த புதிய முயற்சிக்க ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்றார்

இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்து ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி


பழைய நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தமிழில் தயாராகிறது. 

ஸ்ரீதேவி கடைசியாக 'நான் அடிமை இல்லை' தமிழ் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். இப்படம் 1986-ல் ரிலீசானது. 

பிறகு இந்திப் படங்களில் பிசியாக நடித்து தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். 

25 வருடங்களுக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர் 14-ந்தேதி படம் ரிலீசாக உள்ளது. 

இதற்கிடையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை ரஜினிக்கு பிரேத்யேகமாக திரையிட்டு காட்ட ஸ்ரீதேவி விரும்பினார்.

இதையடுத்து சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினி குடும்பத்தினருடன் வந்து படம் பார்த்தார். 

ஆரம்பம் முதல் கடைசிவரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசித்து பார்த்து படம் முடிந்ததும் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டினார். 

படத்தில் நடித்த பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ரஜினி பாராட்டியதால் ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக உள்ளார்.

இளம் இசையமைப்பாளரை கண்கலங்க வைத்த எம்.எஸ்.வி


தற்போது காலைப்பொழுதினிலே, புல்லு, கள்ளத்தனம், அதிகாரம் எண் 79, சின்னப்பாண்டி, ஏழுச்சாமி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருபவர் சி.ஆர்.ரவிகிரண். 

எக்காரணம் கொண்டு ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்கப்போவதில்லை என்ற கொள்கையை கொண்ட இவர், எனது இசையில் ஒரு பாடலையாவது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை வைத்து பாட வைத்து விட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

இதற்கான காரணத்தை அவர் கூறும்போது, பத்து வருடங்களுக்கு முன்பு நான் சபரி மன்னவா என்றொரு ஐயப்பன் கேசட்டுக்கு இசையமைத்தேன். அதில் ஒரு பாட்டாவது பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வி., அவர்களை சந்தித்து கேட்டேன். 

முதலில் மறுத்து விட்ட அவர், பின்னர் என்னை அழைத்து பாடுவதாக ஒப்புக்கொண்டாதோடு, டியூனும், இசையும் நன்றாக இருந்தால் மட்டுமே பாடுவேன் என்றார். நானும் சம்மதித்து எனது பாடல்களை அவரிடம் காட்டினேன். 

அதன்பிறகே, நான் எழுதியிருந்த பாடிடு மனமே என்ற அந்த பாடலை பாடித்தர சம்மதம் சொன்னார். ஆனால் அவர் ஒரு பாட்டு பாட எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்று அவரது மானேஜரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தொகையை என்னால் தர முடியாத நிலைமை. 

அதனால் அதை எம்.எஸ்.வி அவர்களையே சந்தித்து சொன்னேன். பின்னர் அவர் முடிந்ததை கொடு, பாடித்தருகிறேன் என்று பெரிய மனசோடு சொன்னார். 

அதைக்கேட்டு என்னையும் அறியாமல் கண்கலங்கி விட்டேன். பின்னர் எனது இசையில் பாடினார். மேலும், அந்த கேசட் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு என்னை பெருமைப்படுத்தினார்.

அப்படிப்பட்ட இசை மகான் எம்.எஸ்.வியை இப்போது நான் இசையமைக்கும் ஒரு படத்திலாவது பாட வைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 

அதற்கான காலநேரத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் சி.ஆர்.ரவிகிரண்.

தாண்டவம் தமிழில் தப்பித்தது - தெலுங்கில் சிக்கியது


ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் "தாண்டவம்" படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்ட ஈடு வழங்காமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் பொன்னுசாமி எனும் உதவி இயக்குநர் போட்டிருந்த வழக்கு ஒருவழியாக தள்ளுபடி செய்யப்பட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28) ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 

தடை பல கடந்து தமிழில் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் ஆகும் "தாண்டவம்" தெலுங்கிலும் "சிவதாண்டவம்" எனும் பெயரில் நாளை ரிலீஸ் ஆக இருந்தது!

தெலுங்கு தாண்டவத்தை தற்போதைய பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், தனது தேஜா சினிமாஸ் பட நிறுவனம் மூலம் ரூ.6.30 கோடிக்கு வாங்கி ஆந்திரா முழுக்க ரிலீஸ் செய்வதாக இருந்தார். 

இந்நிலையில் ஆந்திர சென்சாரில் தெலுங்கு தாண்டவத்தை "சிவதாண்டவம்" எனும் நேரடி தெலுங்கு படமாக அங்கீகரிக்க மறுத்து டப்பிங் படம் என சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் யு.டி.வி "சிவதாண்டவம்" நேரடி  தெலுங்கு படம். 

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பைலாங்குவேஜில் எடுக்கப்பட்ட படம் என்று பிலிம்சேம்பர் கல்யாணிடம் விற்பனை செய்திருக்கிறது. ஆனால் ஆந்திர தணிக்கை சான்றிதழ் சிவதாண்டவத்தை டப்பிங் படம் என்றே அங்கீகரித்திருப்பதால் ஆறு கோடியே முப்பது லட்சத்திற்கு படத்தை வாங்கிய கல்யாணுக்கு வரி, சதவிகித வித்தியாசங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. 

நஷ்டத்திற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் யு.டி.வி.யுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். இருதரப்பிலும் இன்னமும் சுமூக உடன்பாடு ஏற்படாதது ஆந்திராவில் சிவதாண்டவம் நாளை வெளிவருவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

ஆந்திராவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு 8 சதவீதம் மட்டுமே கேளிக்கை வரி என்பதும், டப்பிங் படங்களுக்கு 24 சதவீதம் கேளிக்கை வரி அரசு விதிக்கும் என்பதும், "சிவதாண்டவம்" படத்தை நேரடி தெலுங்கு படம் எனச் சொல்லி யு.டி.வி., பிலிம்சேம்பர் கல்யாணிடம் பிஸினஸ் செய்திருப்பதும், சிவதாண்டவத்திற்கு டப்பிங் சர்டிபிகேட் கிடைத்திருப்பதும் தான் பிரச்னைகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

எது எப்படியோ, தமிழில் தப்பித்த "தாண்டவம்", தெலுங்கில் ரிலீஸ் சிக்கலில் இருப்பதும் மட்டும் நிதர்சனம்!

விஸ்வரூபம் தள்ளிப்போவது ஏன்?


கமல், பூஜாகுமார், ஆன்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம்  கமலே இயக்கி உள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டநிலையிலும் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 

தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் அன்றுதான் வெளிவரும் என்று இப்போது கூறப்படுகிறது.

விஸ்வரூபம் தள்ளிப்போவதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படகிறது. ஒன்று படத்தில் ஆரோ 3டி என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை கமல் பயன்படுத்த விரும்புகிறார். 

இது ரெட் டெய்ல்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தை படத்தில் இணைக்க 100 நாட்கள் தேவைப்படுமாம்.

இரண்டாவது காரணம். படத்தில் கிளைமாக்ஸ் கிடையாதாம். கிளைமாக்ஸ் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று கார்டு போடுகிறார்களாம். 

இது சரியாக வருமா? ஒரு கிளைமாக்சை எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் கிளைமாக்சை இணைத்து விடலாமா? என்பதில் கமல் குழம்பி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

மூன்றாவது காரணம். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லை. 

அதனால் சொந்தமாகவே வெளியிட்டு விடலாமா? அல்லது லாபத்தை பார்க்காமல் விற்று விடலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த மூன்று காரணங்களில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது.

விஜய்யின் துப்பாக்கி சரவெடியாகிறது

துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்னை முடிந்தபாடில்லை. கோர்ட் வரை சென்று இழுத்தடித்து வருகிறார்கள். 

கள்ளத்துப்பாக்கி படத்தை தயாரிப்பது சின்ன நிறுவனமாக இருந்தாலும், துப்பாக்கி யூனிட் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயன்றதால் நிலைமை கட்டுமீறி போய்விட்டது. 

இனியும் கோர்ட், வழக்கு என்று அலைந்தால் படம் இன்னும் தாமதமாகும். அதனால் படத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சந்தித்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளனர். 

அனேகமாக படத்தின் பெயர் சரவெடி அல்லது மும்பை தமிழன் என்று மாறலாம்.

கொலவெறிக்கு போட்டியாக இன்னொரு கொலவெறி

தனுஷ் பாடிய, "வை திஸ் கொலவெரி... பாடல் உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. "யூ டியூபில் சுமார் ஆறு கோடி முறை இந்த பாடலின் காணொளி பார்க்கப்பட்டு உள்ளது. 

ஜப்பான் வரை இந்த பாடலுக்கு நடனமாடியவர்களின் காணொளிகள் வெளியாகின. தற்போது, இதை தூக்கிச் சாப்பிடும் வகையில், "காங்னாம் ஸ்டைல் (எச்ணஞ்ணச்ட் குtதூடூஞு) என்ற கொரிய பாடல் வெளியாகி உள்ளது. 

வெளியாகி இரண்டே மாதங்களில் இதை, சுமார் 25 கோடி பேர் "யூ டியூபில் பார்த்துள்ளனர்! தற்போது, "யூ டியூபில் 24 லட்சம் பேர் இந்த பாட்டு பிடித்துள்ளது என குறிப்பிட்டு உள்ளனர். 

இதனால், "யூ டியூபில் மிகவும் பிடித்த பாடல்கள் பட்டியலில் இது முதல் இடத்தை பிடித்து உள்ளது. ஆனால், "யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலின் காணொளி, அமெரிக்க பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் பாடிய, "பேபி என்ற பாடல். 

இது 78 கோடி முறை பார்க்கப்பட்டு உள்ளது! இந்த பாடலை, "காங்னாம் ஸ்டைல்  முதல் இடத்தில் இருந்து வீழ்த்துமா என்று ஜஸ்டின் பைபரின் ரசிகர்கள், தற்போது, கவலையோடு கவனித்து வருகின்றனர்.

தாண்டவம் கதை விவகாரம் - இயக்குனர்கள் சங்கம் விசாரணை


தாண்டவம் படத்தின் கதை குறித்த பிரச்னையில் இயக்குனர்கள் சங்கம் விசாரணையை தொடங்கியுள்ளது. விக்ரம், அனுஷ்கா நடித்த தாண்டவம் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்ககிறது. 

செப்டம்பர் வெளியீடு என்று தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி உரிமை கொண்டாடுகிறார். 

இயக்குனர் சங்கத்திலும் புகார் செய்துள்ளார். இவர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

இயக்குனர் சங்கத்தில் பொன்னுசாமி அளித்த புகாரில் கடந்த 2011ல் படத்தின் தயாரிப்பாளரை அணுகி தாண்டவம் படத்தின் கதையை சொன்னேன். அதை படமாக்கலாம் என்றனர். 

பிறகு என்னுடன் ஆலோசிக்காமல் இயக்குனர் விஜய்யை வைத்து படத்தை எடுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்னை குறித்து இயக்குனர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் தீர்வு ஏற்படவில்லை. 

தயாரிப்பு தரப்பில் கேட்டபோது பொன்னுசாமி கடந்த வருடம் கதை சொன்னார். நாங்கள் பார்வையற்றவர் கதையொன்றை படமாக்குவதாக சொல்லி அதை திருப்பி கொடுத்துவிட்டோம் என்றார். 

இயக்குனர் விஜய் கூறும்போது தாண்டவம் படம் உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கும் இயக்குனர் சங்கத்துக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. 

பட வேலைகளை தொடர்ந்து செய்யும்படி இயக்குனர் சங்கம் என்னிடம் கூறி உள்ளது என்றார்.

நடிகைக்காக மனைவியை விவாகரத்து செய்யப்போகும் பிரபல பாடகரின் மகன்


பிரபல இரண்டெழுத்து பாடகரின் மூன்றெழுத்து மகனான அந்த நாங்க பட வில்லன் நடிகர், வெளுத்துக்கட்டு பட நாயகியுடன் ஊர் சுற்றி வருகிறார். 

நடிகை தனது வீட்டுக்கு அருகிலேயே குடியிருப்பதால் எந்நேரமும் அவரது வீடே கதியென்று கிடக்கிறார். அதோடு நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறாராம்.

இதுபற்றி நடிகையிடம் அவர் ஒப்புதல் கேட்டபோது, மனைவி இருக்கும்போது எப்படி நான் வர முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதோடு, நான் மனைவியாக வேண்டும் என்றால் என் பெயரில் ஒரு பங்களாவாவது எழுதி வைக்க வேண்டும். 

அப்போதுதான் நம்பி வருவேன் என்று உறுதியாக சொல்லி விட்டாராம். அதனால இப்போது மனைவியை விவாகரத்து செய்யவும், நடிகைக்கு பங்களா வாங்கி கொடுக்கவும் தனது தந்தையிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார் நடிகர். 

மேலும், தனது இந்த விருப்பங்களை நிறைவேற்றும் வரையில் தன்னை சந்திக்கக்கூடாது என்றும் கண்டிசனாக சொல்லி விட்டாராம் நடிகை. அதனால் பைத்தியம் பிடித்தவர் போல் சுற்றுகிறார் வில்லன் நடிகர்.

ஆர்யாவை கலாய்த்த நடிகர்கள்


சமீபகாலமாக பல நடிகர்களே தயாரிப்பாளராகிக்கொண்டிருககிறார்கள். விஜய், அஜீத், சூர்யா, விஷால், தனுஷ் என்று பலரும் தயாரிப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், ஆர்யாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்துறை என்றொரு படத்தை தயாரித்தார். 

ஆனால் வேகமாக வளர்ந்த அந்த படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.

இதைப்பார்த்த ஆர்யாவின் நண்பர்களான சில இளவட்ட ஹீரோக்கள், அவரை கலாய்க்கத் தொடஙகி விட்டார்கள். 

இது ஆர்யாவுக்கு இப்போது மானப்பிரச்சினையாகி விட்டது. அதனால் விரைவில் படித்துறை படத்தை திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று வேகத்தில இருக்கிறார். 

படம் பைனான்ஸ் சிக்கலில் சிக்கியிருப்பதால் அவற்றை உடனடியாக கலைந்து படத்தை வெளியில் எடுக்கும் வேலைகளில் தற்போது வேகமாக இறங்கியிருக்கிறார் நடிகர்.

என்னது வடிவேலு சொந்தப்படம் தயாரிக்கிறாரா?


மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆக தயாராகி வரும் வடிவேலு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். 

ஆனால் இந்த படங்களை பணம் போட்டு தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால் அடுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்த நிலையில், சமீபத்தில் வடிவேலு சொந்தமாக படம் தயாரித்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் இதைப்பற்றி வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்களிடம் விசாரித்தபோது, அவராவது சொந்த காசில் படம் எடுப்பதாவது என்கிறார். 

யாராவது பணம் போட்டால் வேண்டுமானால் நடிப்பார். ஒருநாளும் சொந்த காசில் படம் எடுக்க மாட்டார் அவர். 

அவருடன் எந்நேரமும் இருக்கும் நடிகர்கள் நாங்கள். அவர் எவ்வளவு பெரிய கஞ்சன் என்பது எங்களுக்குத்தானே தெரியும். 

அதனால் அந்த செய்தி கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்கிறார்.

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்

இதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் "சுந்தரபாண்டியன்".

மதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்...

எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்!

இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்!

ரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு! மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்?!

சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி!

க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல!

கதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்?

அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!

சசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம்! சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம்! இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்!

ஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத "சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்!"

வழக்கு எண்ணும், 7ம் அறிவும் ஆஸ்கருக்கு போகுமா?

2011ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் பணியை ஆஸ்கர் விருது கமிட்டி துரிதப்படுத்தி உள்ளது. இந்த விருதுகள் ஹாலிவுட் படத்திற்கானது. என்றாலும் இதில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் ஒரு விருது மற்ற படங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து இந்த பிரிவுக்கு அனுப்பும்.

இதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம், தகுதியான படங்களை பார்த்து அதிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பும். ஆஸ்கர் விருது கிடைக்கிறதோ இல்லையோ ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு அனுப்பப்படுவதே பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

இந்த தேர்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கி வருகிற 26ந் தேதி வரை நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் கட்டிடத்தில் தேர்வுக்கு வரும் படங்களை குழு பார்க்கிறது.

ஹீரோயின், பர்பி, சுஹானி, கேங்ஸ் ஆப் வசேபூர், பான்சிங் தோமர், பெரரி கி சவாரி ஆகிய இந்திப் படங்களும், தெலுங்கில் ஈகா படமும், மலையாளத்திலிருந்து அக்ஷ்நிந்தி நிறம் என்ற படமும் போட்டியிடுகிறது.

தமிழ் நாட்டிலிருந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9. ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு படமும் போட்டிக்குச் செல்கிறது.

எந்த படம் தேர்வாகிறது என்பது 27ந் தேதி தெரிய வரும். தெலுங்கு ஈகா (நான் ஈ) படத்துக்கும். கேங்ஸ் ஆப் வதேபூர் இந்தி படத்துக்கும் அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வதந்தி பரப்பி விடும் மாற்றான் யூனிட்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாற்றான். சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே ப்ரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள சாருலதா என்ற படமும், மாற்றான் போன்ற கதையிலேயே உருவாகியிருப்பதால், தங்கள் படத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது மாற்றான் யூனிட்.

இந்நிலையில், இப்படியே விட்டால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு, பரபரப்பு அடங்கி விடும் என்று நினைத்து, இப்போது மாற்றான் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி விட்டதாக அவர்கள் செய்தி பரப்பி விட்டு வருகின்றனர்.

ஆனால், இது உணமையா? என்று விசாரித்தபோது, இது படத்திற்கான பரபரப்பு கூட்டும் முயற்சிதான்.

அப்படி எந்த காட்சியும் நெட்டில் வெளியாகவில்லை என்கிறார்கள்.

7 ஆண்டுக்கு பிறகு புதிய படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா

டைரக்டர் பாலு மகேந்திரா சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தலைமுறைகள் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

இவரது இயக்கத்தில் கடைசியாக வந்த படம் அது ஒரு கனாகாலம். தனுஷ் நடித்திருந்தார். 2005ல் இந்தப் படம் வந்தது. அதற்குப் பிறகு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக படங்கள் இயக்கவில்லை.

புதிய படம் குறித்து பாலுமகேந்திரா தனது ப்ளாக்கில். மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் தலைமுறைகள் என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22வது படத்திற்கும் இளையராஜாதான் இசை.

இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை. படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

78ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது. 34 இனிய வருடங்கள். இனியும் அப்படித்தான், என்று குறிப்பிட்டுள்ளார்.

பவர் (இழந்த) ஸ்டாரும்; வேஷம் கலைந்த சினிமாவும்

தமிழ் சினிமாவை காப்பாற்ற அவ்வப்போது சில அவதாரங்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் வரிசையில் வந்தவர்தான் அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாசன்.

அண்ணா நகரில் சிறிய அளவில் அக்குபன்ஞ்சர் மருத்துவமனை வைத்திருக்கும் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீதானா அவன், உனக்காக ஒரு கவிதை, ரா ரா பழனிச்சாமி, மண்டபம், சுரங்க பாதை, இப்படி சில படங்களில் நடித்தார்.

புதிய இயக்குனர்கள் அவரை தேடிப்தேடிப்போய் வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் அந்த இயக்குனர்களுக்கு அவர் கொடுக்கும் கட்டிங் பணம். சிறிய சம்பளத்தில் படம் இயக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு இது ஒரு உபரி வருமானமாக இருந்தால் அவரை ஆர்வத்தோடு தங்கள் படத்தில் தலைகாட்ட வைத்தனர்.

திடீரென ஒருநாள் அவருக்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அந்த ஆசையை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சண்டை இயக்குனர் பன்ஞ் பரத். சினிமா இயக்கம் பற்றி அரிச்சுவடிகூட தெரியாத அவர் எடுத்த படம்தான் இந்திரசேனா. இதில் சீனிவாசன் வில்லனாக நடித்தார். அடுத்து ஒருவர் இயக்கத்தில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார்.

இதில் இயக்குனருக்கும், இவருக்கும் பண விஷயத்தில் முட்டல் மோதல் வர முடிந்த படத்துக்கு இவரே கதை, திரைக்கதை வசனம், இயக்குனர் ஆனார். ஹீரோவும் அவர்தான். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கைலாஷ் என்ற பெண் துணிச்சலுடன் நடித்தார்.

பெரியார், அண்ணா எம்.ஜி.ஆருக்கு பிறகு இவர்தான் அடுத்த தலைவர் என்கிற ரேன்ஞ்சுக்கு ஓப்பன் சாங்குடன் மிரட்டியது அந்தப் படம். 50 வயதான அக்குபன்ஞ்சர் சீனிவாசனின் ஹீரோ கனவு நிறைவேறியது.

ஒரு அக்கு பன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க முடிகிறது என்று எந்த சினிமா கலைஞனும் யோசிக்கவில்லை. பலர் அவரின் அண்ணா நகர் கிளினிக்கிற்கு தேடிச் சென்று, காத்திருந்து அவரது நண்பர்கள் ஆனார்கள்.

அதில் சில முக்கிய நடிகைகளும் உண்டு. கையில் கதையை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிச் செல்லும் புதிய இயக்குனர்கள் தங்கள் கனவு கதையை ஒதுக்கி வைத்து விட்டு சீனிவாசனுக்கு கதை எழுதிக் கொண்டு சென்று அவரைப் பார்த்தார்கள்.

அப்படி தேடிச் சென்று கதை சொல்பவர்களுக்கு ஒரு நண்மை உண்டு. சீனிவாசனுக்கு கதை பிடிக்காவிட்டாலும் பெரும் தொகை சன்மானமாக கிடைக்கும். இதற்காக வாரம் ஒரு கதை சொன்ன இயக்குனர்களும் உண்டு.

அப்படிச் சென்றவர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டத்தை சீனிவாசனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். அதில் அவருக்க பிடித்த பவர் ஸ்டார் பட்டத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டார். (தெலுங்கில் பவன் கல்யாணின் பட்டம் அது) லத்திகாக படம் எல்லா தியேட்டர்களிலும் ஒரு காட்சி ஓடிவிட்டு பத்திரமாக திரும்பி வந்தது.

ஆனாலும் விடுவாரா பவர் ஸ்டார், சென்னை கமலா தியேட்டரில் அந்தப் படத்தை திரையிட்டு 150 நாட்கள் ஓட்டினார். அதாவது அந்தப் படம காலைக் காட்சியாக ஓடும். பல நாட்கள் வெறும் தியேட்டரில் படம் ஒடும். சில நாள் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும், அனைத்து நாளும் இலவச அனுமதிதான்.

தியேட்டரின் வாசலில் தனது ஆளுயர கட்அவுட் வைப்பதற்கும், படம் திரையிடுவதற்கும் வாடகை கொடுத்து விடுவார். விஜய், அஜீத் படங்களே கமலா தியேட்டரில் சில நாட்களில் காணாமல் போகும் நிலையில் பவர் ஸ்டார் மட்டும் நிலைத்து நின்று சிரித்துக் கொண்டிருந்தார். இதில் இன்னொரு கொடுமை என்ன வென்றால் சில பத்திரிகைகள் லத்திகா படத்தை ஆண்டு கண்ணோட்டத்தில் அதிக நாள் ஓடிய படங்களின் பட்டியலில் சேர்த்து மகிழ்ந்துது.

தன் வழுக்கை தலைவில் விதவிதமான விக் வைத்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ்கள் கோடம்பாக்க ரோடுகளில் விதவிதமாக சிரித்துக் கொண்டிருந்தன. அடுத்து திருமா, தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படத்தை தானே தயாரித்து இயக்கப்போவதாக அறிவித்தார்.

அதில் ஒரு படத்தில் மாஜி ஹீரோயின் வாணி விஸ்வநாத் அவருக்கு ஹீரோயின். பவர் ஸ்டாரின் "அன்பான" உபசரிப்பின் காரணமாக சில மீடியாக்களும் பவர் ஸ்டாரை தூக்கி வைத்துக் கொண்டாடியது. சில முன்னணி வார இதழ்கள்கூட அவரை கிண்டல் செய்வதாக காட்டிக் கொண்டு அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை அள்ளி வீசியது.

முன்னணி சேனல்கள் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது. சிறப்பு பேட்டி கண்டது. நல்ல திறமையோடும், எதிர்கால கனவுகளோடும் சினிமாவை உயிராக நேசித்துக் கொண்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இந்த காட்சிகள் எத்தனை வலியை உண்டாக்கி இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

அடுத்த அதிர்ச்சியை அள்ளி வீசினார் பவர் ஸ்டார். ஷங்கரின் ஐ படத்திலும், பாலாவின் பரதேசி படத்திலும் அவர் நடிப்பதாக அறிவித்தார். இந்த இருவர் படத்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டினால் போதும் என்று லட்சம் திறமையாளர்கள் காத்திருக்க இந்த வாய்ப்பு பவர் ஸ்டாருக்கு போனது எப்படி என்பது இதுவரை புரியாத ஒன்று.

அடுத்த அதிர்ச்சியை அளித்தவர் காமெடி சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. சிலர் பவர் ஸ்டார்தான் தயாரிப்பாளர் என்றார்கள். சிலர் சந்தானத்துடன் பார்டனர் என்றார்கள். இப்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ பணம் மட்டும் இருந்தால் சினிமாவில் எந்த இடத்தையும் பிடிக்கலாம் என்பதற்கு பவர் ஸ்டார் ஒரு நல்ல உதாரணம். திறமை மட்டும் இருந்தால் கோடம்பாக்கத்துக் டீக்கடையும், அங்கு கிடைக்கும் மசால் வடையும்தான் கடைசிவரை கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணாமாகியிருக்கிறது.

அஜீத், விஜய்க்குகூட பெயருக்கு முன்னால்தான் தல, இளையதளபதி என்ற பட்டங்களை போடுவார்கள். ஆனால் சீனிவாசன் என்பதையே மறந்து பவர்ஸ்டார் என்று மட்டுமே குறிப்பிடும் அளவிற்கு அவர் வளர்ந்ததற்கு மூன்று காரணங்கள்தான் உண்டு. அது 1.பணம், 2.பணம், 3.பணம்.

அண்ணாச்சி தன் பலசரக்கு கடையில் ஒரு பையனை வேலைக்கு சேர்ப்பதற்குகூட அவனது பின்ணியை தெரிந்து கொண்டுதான் சேர்த்துக் கொள்வார். ஆனால் ஒரு அக்குபன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கான பணத்துடன் விளையாட முடிகிறது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சினிமா அவரை கிண்டல் என்கிற பெயரில் கொண்டாட ஆரம்பித்தது. அவரும் அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு சினிமா உலகத்தையே கேலி செய்துவிட்டார்.

சினிமா ஒரு கடல் அதில் யார் வேண்டுமானாலும் குதித்து, குளித்து விளையாடலாம், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அப்படி குதித்தவரோடு சினிமாவில் மதிப்பு மிக்கவர்களும் உடன் விளையாடினார்களே அது ஏன் என்பதுதான் சராசரி ரசிகனின் கேள்வி.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் காலம் ஒரு நாள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத்தானே செய்யும். என்னதான் வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையத்தானே செய்யும். அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. அக்குபன்ஞ்சர் சீனிவாசனுக்கு பணம் எப்படி வந்தது, எந்த வழியில் வந்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை இனி காவல் துறை சொல்லும். குறைந்த வட்டிக்கு கடன் தருகிறேன்.

அட்வான்ஸ் கொடுங்கள் என்ற தொழிலில் 60 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சீனிவாசன். இன்னும் அவர் மீது பல வழக்குகள் பாயலாம். வழக்கில் அவர் தண்டனை பெறலாம். அல்லது நிரபராதி என்று விடுதலையாகலாம்.

ஆனால் ஹீரோக்கள் நிறைந்த சினிமாவில் இரண்டு ஆண்டுகள் வெளிச்சத்துடன் வலம் வந்த சீனிவாசன் நிஜ ஹீரோவாகி ஒட்டுமொத்த சினிமாவையும் காமெடியாக்கி விட்டார் என்பதுதான் உண்மை.

கராத்தே குங்பூவுடன் நடந்த பட பூஜை

தமிழ் சினிமா கார்பரேஷன் என்ற நிறுவனம் சண்டபடம் என்ற பெயரில் ஒரு சண்டை படத்தை தயாரிக்கிறது. இதில் சண்டை இயக்குனர்களின் மகன்கள் நடிக்கிறார்கள். ராம்கி இயக்குகிறார். இவருடன் இணைந்து விஜயபத்மா தயாரிக்கிறார்.


ஆங்கிலத்தில் வெளிவரும் ஜாக்கி சான், புரூஸ்லி டைப் படமாம். தமிழ்நாட்டில் சண்டை கற்றுக் கொடுக்க என்று ஒரு கோவில் இருக்கிறதாம்.


இங்கு சண்டை கற்றுக் கொள்ளும் இருவர் தங்கள் வாரிக்கும் அதை கற்றுத் தருகிறார்களாம். அந்த கோவிலில் இருக்கும் அபூர்வமான புதையலை கொள்ளையடிக்க ஒரு கும்பம் திட்டமிடுகிறது.


அவர்கள் நவீன ஆயுதங்களை கொண்டவர்கள். அந்த கும்பலை இந்த சண்டை கலைஞர்கள் எப்படி விரட்டி அடித்து கோவிலை காப்பாற்றுகிறார்கள் என்பது£ன் கதையாம்.


படத்தின் பூஜை காமராசர் அரங்கத்தில் நடந்தது. முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம், சண்டை இயக்குனர் பெப்சி விஜயன், இயக்குனர் ஏ.வெங்கடேஷ். சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்கள் சண்டை திறமைகளை மேடையில் காட்டினார்கள். குங்கு, கராத்தே சண்டை போட்டார்கள்.


அதோடு யோகாசன நிகழ்ச்சியுடன் பட பூஜை நடந்தது வித்தியாசமாக இருந்தது.


படத்தையும் வித்தியாசமா எடுங்கப்பு...

நடிகர்களுக்கு எதிராக தயாரிப்பாளர்

நடிகர் சங்கத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்களை தூண்டி விடுபவர் நடிகர் சங்கத்திற்கு அருகிலேயே அரண்மணை மாதிரி வீடு கட்டியிருக்கும் அந்த அகோரமான சப்பாத்தி தயாரிப்பாளர்தானாம்.

பிரமாண்டமான கட்டிடமாக நடிகர் சங்கம் வந்தால் தன் வீட்டின் அழகு கெட்டுவிடும் என்று அவர் அங்குள்ள மக்களை தூண்டிவிட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வைத்திருக்கிறார் என்பது நடிகர் சங்கத்தினரின் குற்றச்சாட்டு.

இதையே வேறு விதமாகவும் சொல்கிறார்கள். அதாவது நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் காண்டிராக்கை அந்த தயாரிப்பாளர்தான் பெரும் தொகைக்கு எடுப்பதாக இருந்ததாம்.

ஆனால் சங்க நிர்வாகிகள் கேட்ட கட்டிங் தொகையை கொடுக்க அவர் தயங்கியதால் காண்டிராக்ட் வேறொரு நிறுவனத்துக்கு இவர் கேட்டதை விட குறைந்த தொகைக்கு விடப்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் பிரச்னையை கிளப்பிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்கம்னாலே இனி அகராதியில் பிரச்னைக்குரிய இடம்னு எழுதணும் போலிருக்கிறது.

சின்னத்தம்பி பிரபு - செல்லதம்பி ஆனார்

சினிமா உலகத்தில் பிரபுவுக்கு, "சின்னத்தம்பி என்ற செல்லப்பெயர் உள்ளது. அவர் நடித்து சூப்பர் ஹிட்டான, "சின்னத்தம்பியை ஞாபகப்படுத்தும் விதமாகவும், நடிகர் திலகத்தின் கலைவாரிசு என்பதாலும், அந்தப் பெயர், அவருக்கு அடைமொழியாக வந்து சேர்ந்தது.

அந்த, "சின்னத்தம்பி இப்போது, "செல்லத்தம்பியாக மாறுகிறார்.

மகன் விக்ரம் பிரபுவுக்கு ஹீரோவாக முடி சூடிய பிறகு, குணசித்திர வேடங்களை மட்டுமே ஏற்று நடித்தார் பிரபு. அவரை மீண்டும் ஹீரோவாக்கி அழகு பார்க்கின்றனர்.

"செல்லத்தம்பியில் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அப்பா - மகன் என, இரு மாறுபட்ட வேடங்களில் தோன்றுகிறார்.

சுவாசிகா, ஆசிப் அலி ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை, நிஷாந்த் இயக்குகிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்குகின்றனர்.

சிம்புவைப்பற்றி தவறான கருத்து

சிம்பு என்றாலே டைரக்டர்களின் வேலைகளில் தலையிடுபவர், அவர்கள் சொன்னபடி நடிக்காமல் தனது விருப்பத்துக்கு நடிப்பவர் என்ற கருத்து கோலிவுட்டில் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கி வரும் டைரக்டர் விஜய்சந்தரிடம் கேட்டபோது, அந்த கருத்தை மறுக்கிறார்.

சிம்பு பற்றி அவர் கூறியதாவது, சிம்பு ஒரு நல்ல நடிகர். மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடியவர்.

அதோடு, தான் நடிக்கும் படம் நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இதைதான் மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்.

என்னைக்கேட்டால், அவர் ஒரு சிறந்த நடிகர். அவரைப்பற்றி தவறான பரவியுள்ள செய்தி என்பது, வானொலியில் கதை சொல்வது போல்தான். அது ஒரு கற்பனை. அதை ஒருவர் சொல்லச்சொல்ல நாம் கேட்கும்போது மனத்திரையில் ஒரு காட்சி ஓடிக்கொண்டேயிருக்கும்.

சிம்புவைப்பற்றி சித்தரிக்கப்பட்டிருப்பதும் அப்படியொரு கதைதான். அந்த கதையை யாரும் நம்ப வேண்டாம் என்பதே எனது கருத்து என்கிறார்.

அதோடு, வாலு படத்தைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க எனது கதை திரைக்கதைதான். அதில் அவராக எந்த குறுக்கீடும் செய்யவில்லை. நாம் சொன்னபடி நடித்துக்கொடுக்கிறார்.

திருப்தி இல்லை என்றால் இன்னொரு டேக் எடுத்து நடிக்கவும் தயாராகி விடுகிறார். அதிலும் மற்ற படங்களை விட இந்த படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிம்பு என்கிறார் விஜயசந்தர்.

சந்திரமுகி பார்ட் 2 வில் அஜித்

ரஜினி நடிப்பில் "சந்திரமுகி" படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் 2வது பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் அஜித் ஹீரோவாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினி - பி.வாசு கூட்டணியில் பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்றவை வெற்றி படங்களாக வெளியாகின. அதன்தொடர்ச்சியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களது கூட்டணியில் கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்த படம் "சந்திரமுகி".

ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே. இப்படி பல சிறப்புகளை கொண்ட இப்படத்தின் 2ம் பாகமாக, சந்திரமுகி பார்ட் - 2-வை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக 2ம் பாகத்திலும் நடிக்க ரஜினியை கேட்டிருந்தனர். ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

இந்நிலையில் ரஜினிக்கு பதிலாக இப்போது அந்த வேடத்தில் அஜித்தை நடிக்க வைக்க அவருடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தில் அஜித்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரஜின‌ியே சிபாரிசு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பி.வாசு இயக்கத்தில், அஜித் பரமசிவன் என்ற படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் அவர் நடிப்பார் என்றும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திருவிளையாடல்

திருவிளையாடல் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் தயாராகி உள்ளது. சிவாஜி, சாவித்திரி நடித்த திருவிளையாடல் படம் 1965ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.

செண்பகபாண்டியனாக முத்துராமன், புலவர் தருமியாக நாகேஷ். அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார். சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி இப்படம் தயாரானது,. சிவன் கேரக்டரில் சிவாஜி வந்தார்.

பார்வதி கேரக்டரில் சாவித்திரி நடித்தார். இப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் காமெடி வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து இருந்தனர்.

இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப்பா, ‘இன்றொரு நாள் போதுமா, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டால் நெடு மரம், ‘பாட்டும் நானே பாவமும் நானே போன்ற பாடல்கள் ஹிட் அடித்தன.

திருவிளையாடல் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெருகூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...