தற்போது காலைப்பொழுதினிலே, புல்லு, கள்ளத்தனம், அதிகாரம் எண் 79, சின்னப்பாண்டி, ஏழுச்சாமி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருபவர் சி.ஆர்.ரவிகிரண்.
எக்காரணம் கொண்டு ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்கப்போவதில்லை என்ற கொள்கையை கொண்ட இவர், எனது இசையில் ஒரு பாடலையாவது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை வைத்து பாட வைத்து விட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
இதற்கான காரணத்தை அவர் கூறும்போது, பத்து வருடங்களுக்கு முன்பு நான் சபரி மன்னவா என்றொரு ஐயப்பன் கேசட்டுக்கு இசையமைத்தேன். அதில் ஒரு பாட்டாவது பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வி., அவர்களை சந்தித்து கேட்டேன்.
முதலில் மறுத்து விட்ட அவர், பின்னர் என்னை அழைத்து பாடுவதாக ஒப்புக்கொண்டாதோடு, டியூனும், இசையும் நன்றாக இருந்தால் மட்டுமே பாடுவேன் என்றார். நானும் சம்மதித்து எனது பாடல்களை அவரிடம் காட்டினேன்.
அதன்பிறகே, நான் எழுதியிருந்த பாடிடு மனமே என்ற அந்த பாடலை பாடித்தர சம்மதம் சொன்னார். ஆனால் அவர் ஒரு பாட்டு பாட எவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்று அவரது மானேஜரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தொகையை என்னால் தர முடியாத நிலைமை.
அதனால் அதை எம்.எஸ்.வி அவர்களையே சந்தித்து சொன்னேன். பின்னர் அவர் முடிந்ததை கொடு, பாடித்தருகிறேன் என்று பெரிய மனசோடு சொன்னார்.
அதைக்கேட்டு என்னையும் அறியாமல் கண்கலங்கி விட்டேன். பின்னர் எனது இசையில் பாடினார். மேலும், அந்த கேசட் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு என்னை பெருமைப்படுத்தினார்.
அப்படிப்பட்ட இசை மகான் எம்.எஸ்.வியை இப்போது நான் இசையமைக்கும் ஒரு படத்திலாவது பாட வைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதற்கான காலநேரத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் சி.ஆர்.ரவிகிரண்.
0 comments:
Post a Comment