அக்.12-ல் மாற்றான் ரிலீஸ்


ஒட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருக்கும் "மாற்றான்" படம், வருகிற அக்டோபர் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த்-சூர்யா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் "மாற்றான்". 

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இருவேடங்களில் சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி மற்றும் மராத்தி படங்களின் பிரபல நடிகர் சச்சின் கடேக்கரும், தேசிய விருது பெற்ற நடிகை தாராவும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.என்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

உடலால் ஒட்டிப்பிறந்தாலும், குணத்திலும், கொள்கைகளிலும் எதிரெதிர் துருவமாய் இருக்கும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் பாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. 

பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் உட்பட இரட்டையர்கள் இணைந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த சிரமப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மேலும் இப்படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியுள்ளனர். 

இந்தியாவில் முதன்முறையாக பேஷியல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 400 கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணியாற்றி இருக்கின்றனர். 

படத்தில் வரும் இரட்டையர்கள் காட்சியை இருமுறை படமாக்கி இருக்கிறார் இயக்குநர். அத‌ாவது சூர்யா ஒருகாட்சியில் நடித்த காட்சி, மீண்டும் சில நாட்கள் கழித்து அதே லைட்டிங்குடன் மீண்டும் ஒருமுறை படமாக்கப்படும். இதனை 5 கேமராக்களில் படம் பிடித்து, கிராபிக்ஸ் உதவியுடன் திரையில் கொண்டு வந்துள்ளனர். 

நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோரின் பாடல் வரிகளுக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. 

சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, மைசூர், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், முதன்முறையாக லத்வியாவில் முதல் இந்திய படமாக மாற்றான் எடுக்கப்பட்டுள்ளது. 

கே.வி.ஆனந்தின் கனவுபடமான மாற்றான் படத்தை எங்களது நிறுவனம் தயாரித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருகிற அக்‌டோபர் 12ம் தேதி மாற்றான் படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...