ஏ.எல்.விஜய் இயக்கத்தில், யு.டி.வி. தயாரிப்பில், விக்ரம்-அனுஷ்கா ஜோடி நடித்திருக்கும் "தாண்டவம்" படத்தின் கதை தன்னுடையது என்றும், அதற்கு நஷ்ட ஈடு வழங்காமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் பொன்னுசாமி எனும் உதவி இயக்குநர் போட்டிருந்த வழக்கு ஒருவழியாக தள்ளுபடி செய்யப்பட்டு திட்டமிட்டபடி நாளை (செப் 28) ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
தடை பல கடந்து தமிழில் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் ஆகும் "தாண்டவம்" தெலுங்கிலும் "சிவதாண்டவம்" எனும் பெயரில் நாளை ரிலீஸ் ஆக இருந்தது!
தெலுங்கு தாண்டவத்தை தற்போதைய பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், தனது தேஜா சினிமாஸ் பட நிறுவனம் மூலம் ரூ.6.30 கோடிக்கு வாங்கி ஆந்திரா முழுக்க ரிலீஸ் செய்வதாக இருந்தார்.
இந்நிலையில் ஆந்திர சென்சாரில் தெலுங்கு தாண்டவத்தை "சிவதாண்டவம்" எனும் நேரடி தெலுங்கு படமாக அங்கீகரிக்க மறுத்து டப்பிங் படம் என சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் யு.டி.வி "சிவதாண்டவம்" நேரடி தெலுங்கு படம்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பைலாங்குவேஜில் எடுக்கப்பட்ட படம் என்று பிலிம்சேம்பர் கல்யாணிடம் விற்பனை செய்திருக்கிறது. ஆனால் ஆந்திர தணிக்கை சான்றிதழ் சிவதாண்டவத்தை டப்பிங் படம் என்றே அங்கீகரித்திருப்பதால் ஆறு கோடியே முப்பது லட்சத்திற்கு படத்தை வாங்கிய கல்யாணுக்கு வரி, சதவிகித வித்தியாசங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.
நஷ்டத்திற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் யு.டி.வி.யுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். இருதரப்பிலும் இன்னமும் சுமூக உடன்பாடு ஏற்படாதது ஆந்திராவில் சிவதாண்டவம் நாளை வெளிவருவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
ஆந்திராவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு 8 சதவீதம் மட்டுமே கேளிக்கை வரி என்பதும், டப்பிங் படங்களுக்கு 24 சதவீதம் கேளிக்கை வரி அரசு விதிக்கும் என்பதும், "சிவதாண்டவம்" படத்தை நேரடி தெலுங்கு படம் எனச் சொல்லி யு.டி.வி., பிலிம்சேம்பர் கல்யாணிடம் பிஸினஸ் செய்திருப்பதும், சிவதாண்டவத்திற்கு டப்பிங் சர்டிபிகேட் கிடைத்திருப்பதும் தான் பிரச்னைகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
எது எப்படியோ, தமிழில் தப்பித்த "தாண்டவம்", தெலுங்கில் ரிலீஸ் சிக்கலில் இருப்பதும் மட்டும் நிதர்சனம்!
0 comments:
Post a Comment