இயக்குனர் மணிரத்னத்திடம் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக் கோரி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில், திரைப்பட விநியோகஸ்தர்கள் ஏழு பேர் புகார் செய்துள்ளனர்.
நெல்லையை சேர்ந்த, ராகவேந்திரா பிலிம்ஸ் உரிமையாளர் பாலாஜி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
திரைப்பட இயக்குனர் மணிரத்னம் தயாரித்து, இயக்கிய, கடல் திரைப்படத்தை நெல்லை பகுதிக்கான விநியோக உரிமையை, 65 லட்ச ரூபாய் கொடுத்து பெற்றேன்.
டைரக்டர் மணிரத்னத்தின் மீது, நம்பிக்கை வைத்தே, இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கினேன். ஆனால், படம் ஒரு வாரம் கூட உருப்படியாக ஓடவில்லை.
இதனால், கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மணிரத்னத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புரசைவாக்கத்தை சேர்ந்த பழனி கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மணிரத்னம் தான் தயாரித்த இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் தோல்வி அடைந்தபோது, நஷ்ட ஈடு கொடுத்தார்.
ஆனால், கடல் படத்தை மற்றொரு பங்குதாரருமான மனோகர் பிரசாத்திடம் கொடுத்து விட்டதாகவும், தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனவும், பொய் பேசி வருகிறார். அவரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல், புதுச்சேரியை சேர்ந்த கண்ணன், சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி ராமதாஸ், சேலம் ஸ்ரீதர், விருகம்பாக்கம் செந்தில் என, மொத்தம் ஏழு பேர், மணிரத்னத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரக் கோரி, ஒரே நாளில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment