கண்பேசும் வார்த்தைகள் - விமர்சனம்


விஜய் டி.வியின், "மதுரை, "சரவணன் மீனாட்சி மெகா தொடர்களின் நாயகர் மிர்ச்சி செந்தில் கதாநாயகராக அதுவும், வாகைசூட வா இனியா ஜோடியாக தமிழ் சினிமா நாயகராக அடியெடுத்து வைத்திருக்கும் படம் தான் "கண்பேசும் வார்த்தைகள்".

திருவாரூரில் இருந்து சொந்த ஊர் வெறுத்துபோய் சிங்கப்பூர் சிட்டிசன் ஆகும் முடிவில், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் நண்பனைத் தேடி, நாடி போகிறார். 

அங்கு நண்பர் முருகதாஸின் உதவியால் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள்ளும் செந்தில், சிங்கப்பூர் சிட்டிசன்னாகும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். வெளிநாட்டினர் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவது அவ்வளவு எளிதல்ல... 

அதற்கு ஈஸியான ஒரே வழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண்ணை காதலித்து கரம்பிடிப்பது தான் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும் செய்கிறார். அதன் விளைவு சிங்கப்பூரில் ஒரு ஆடை அலங்கார கடையில் வாழ்க்கை வாழும் இனியாவை, சிங்கப்பூர் சிட்டிசன் என கருதி காதலிக்க தொடங்குகிறார். 

கிட்டத்தட்ட ஹீரோ செந்திலின் எண்ணத்திலேயே தன் முரட்டு அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பிக்க, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இனியாவும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் செந்திலுடன் காதல் வயப்படுகிறார். 

இவர்களது காதலுக்கு ஆடுகளம் காமெடியன் முருகதாஸும், ஒரு கல் ஒரு கண்ணாடி ஜாங்கிரி மதுமிதாவும் உதவுகின்றனர். செந்திலுக்கு சிங்கப்பூர் சிட்டிசன் கிடைத்ததா.? இனியா முரட்டு மாமனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கை படாமல் தப்பித்தாரா...?! என்பது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

திருவாரூரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இளைஞனாகவே யதார்த்தமாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிர்ச்சி செந்தில்! இவரும், முருகதாஸும் சிங்கப்பூர் எம்பஸியில், சிங்கப்பூர் சிட்டிசனாக வாழ விரும்புவதற்காக... "எங்க ஊரில் கோயிலுக்கு போனா செருப்பு கா‌ணோம், ஹாஸ்பிட்டலுக்கு போனா உறுப்பு காணோம், ஆசிரமத்திற்கு போனா கற்பு காணோம்..." என்று பேசும் காமெடி பன்ச்சுகள் கலக்கல்!

மார்டன் கெட்டப்பில் வாகைசூட வா இனியா கொஞ்சம் செயற்கையாக தெரிகிறார். ஒரு பாடல் காட்சியில் கிளாமர் தூக்கலாக மிர்ச்சி செந்திலுடன் ஒட்டி உரசுவது கவர்ச்சி பிரியர்களுக்கு செம விருந்து. இனியா - செந்தில் காதலும், இனியாவின் மார்டன் கெட்-அப் மாதிரியே செயற்கையாக தெரிவது "கண்பேசும் வார்த்தைகள்" படத்தின் பலவீனங்களில் ஒன்று!

ஜாங்கிரி மதுமிதா, முருகதாஸ், லிவிங்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன், கதிரவன், கந்தவேலு உள்ளிட்டவர்கள் படத்திற்கும் தங்கள் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர்.

புதியவர் ஷாமன்த்தின் இசை, நாககிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆர்.சரவணக்குமாரின் கதை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், ஆர்.பாலாஜியின் எழுத்து - இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை!

ஆக மொத்தத்தில், "கண்பேசும் வார்த்தைகள்" - "பேசுவதும், பேசாததும்" ரசிகர்களின் கையில் இருக்கிறது!

1 comments:

Prem S said...

// "கண்பேசும் வார்த்தைகள்" - "பேசுவதும், பேசாததும்" ரசிகர்களின் கையில் இருக்கிறது!//

அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...