நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்திற்கு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `வீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ம்தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
`துப்பாக்கி திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment