சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் முன்பு அவருடைய பாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறார் இந்தி நடிகர் ஷாகித் கபூர்.
ஐ.ஐ.எப்.ஏ., எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பிரம்மாண்ட தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டமும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதனிடையே இந்த விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. அதில் ஒருபகுதியாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கமல்ஹாசனின் பாட்டுக்கு நடனமாடுகிறார்.
கமல்ஹாசன் குள்ளமாகவும், மூன்று வித வேடங்களிலும் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அன்னத்தா ஆடுறாரு... பாட்டுக்குத்தான் ஷாகித் ஆட இருக்கிறார்.
இதற்காக தீவிர பயிற்சியிலும் ஷாகித் இறங்கியுள்ளார். மேலும் இது கமல் பாட்டு என்பதாலும், அதுவும் அவர் முன் ஆட இருப்பதால் கொஞ்சம் பயமாக இருப்பதாக ஷாகித் கூறியிருக்கிறார்.
இந்த விருது நிகழ்ச்சியில் நடைபெற இருக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் பிரபுதேவா தான் நடன அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment