சிங்கம் 2 - சினிமா விமர்சனம்



நாயகர் சூர்யா, நாயகி அனுஷ்கா, இயக்குனர் ஹரி உள்ளிட்ட "சிங்கம்" பட வெற்றிக் கூட்டணி, அந்த வெற்றியின் தொடர்ச்சியாக இணைந்திருக்கும் படம் மட்டுமல்ல, சிங்கத்தின் பாகம் இரண்டாகவும் வெளிவந்திருக்கும் படம் தான் "சிங்கம்-II".

"சிங்கம்-I"-ன் க்ளைமாக்ஸில் வில்லன் பிரகாஷ்ராஜை ஆந்திராவில் வைத்து அழித்தொழித்ததும் இனி போலீஸ் உத்தியோகமே வேணாம், காதலி அனுஷ்காவை கல்யாணம் கட்டிக்கொண்டு சொந்தமான பலசரக்கு கடையில் பொட்டலம்‌ போட்டு பொழைச்சுக்குறேன் என்று காதலியுடன் காரில் ஏறி பறக்கும் சூர்யாவை வழி மறித்து அமைச்சர் ராமநாதன், தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் ஆயுத கடத்தல் நடப்பதாக தகவல், அதை ஆப்த ரெக்கார்டு போலீஸாக இருந்து கண்காணித்து உரிய நேரத்தில் சார்ஜ் எடுத்து கொண்டு அந்த கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுவார். அதன்படி சூர்யாவும் தன் வருங்கால மனைவி அனுஷ்காவிற்கே தெரியாமல் போலீஸ் பொழப்பு நடத்த உறுதி பூணுவார் அல்லவா?! அதன் தொடர்ச்சி சிங்கம் பகுதி-2 படமாகி உளறது. 

அதாகப்பட்டது, போலீஸ் உத்தியோகம் போனதால் சூர்யா - அனுஷ்காவின் திருமணமும் தள்ளிபோகிறது. தன் அப்பாவிடமும் தான் போலீஸ்தான் என்ற உண்மையை சூர்யா சொல்லாமல், அடித்தாலும் (வடிவேலு பாணியில்...) அடித்து கேட்டாலும் சொல்லாமல், தூத்துக்குடி தனியார் பள்ளி ஒன்றில் என்.சி.சி மாஸ்டராக செம பில்டப் கொடுக்கிறார். 

அதே பள்ளியில் படிக்கும் பெரிய இடத்துப் பெண் ஹன்சிகா, சூர்யாவை ஒன் சைடாக காதலிக்கிறார். ஹன்சிகாவின் காதலை புறக்கணிக்கும் சூர்யாவோ தூத்துக்குடி கடற்கரையை தீவிரமாக கண்காணிக்கிறார். அங்கு ஆயுத கடத்தல் இல்லை... சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது! 

விடுவாரா சூர்யா சரியான நேரத்தில் சார்ஜ் எடுத்துக் கொண்டு வில்லன்களை வெளுத்து கட்டுகிறார். மயிரிழையில் தப்பிக்கும் சர்வதேச போதை கடத்தல் தாதா டேனியையும் சவுத் ஆப்ரிக்கா போய் சட்டையை பிடித்து இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார். இடை‌யி‌டையே அனுஷ்காவுடன் டூயட் பாடுகிறார். ஹன்சிகாவின் கனவில் வருகிறார்... இது தான் சிங்கம்-2வின் கமர்ஷியல், கலர்புல் கதை மொத்தமும்!!

சூர்யா - துரை சிங்கமாக ஆக்ஷ்ன், லவ், சென்டிமெண்ட், காமெடி கலாட்டா என வழக்கம் போலவே சகல ஏரியாக்களிலும் சகட்டு மேனிக்கு புகுந்து விளையாடி இருக்கிறார். என்.சி.சி. மாஸ்டராகவும், போலீஸ் டிஎஸ்பியாகவும் அவர் காட்டும் மிடுக்களுக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! அதுவும் ஆபரேஷன் டி எனும் பெயரில் டேனியைத் தேடி ஆப்ரிக்கா போய், அந்த ஊர் காவலர்களுடன் சேர்ந்து அவர் பண்ணும் அதிரடியில் என்னதான் கமர்ஷியல் சினிமா என்றாலும் தியேட்டரே உறைந்து ‌போகிறது... நிஜம் என நம்பி! வாவ் ஹாட்ஸ் ஆப் சூர்யா!

அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு நாயகியர். இருவரில் அனுஷ்கா அரேபிய குதிரை என்றால், ஹன்சிகா துள்ளி விளையாடும் புள்ளி மான்! ஆனால், இந்த சிங்கத்துக்கு என்னாச்சு...?! புள்ளிமானின் இளங்கறியை ருசிக்காமல், பந்தயக்குதிரை மீதே பால் ஈர்ப்பு கொண்டு பவனி வருகிறது...?! சிங்கம் பகுதி-2 லாவது அனுஷ்காவை கொன்று, ஹன்சிகாவை சூர்யா ஜோடியாக்குவார் இயக்குனர் எனப் பார்த்தால் ஹன்சிகாவை போட்டுத்தள்ளி அனுஷ்காவை திருப்திபடுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி!

சந்தானம், நாசர், மன்சூரலிகான், ரகுமான், தலைவாசல் விஜய், ராதாரவி, மனோராமா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இவர்களுடன் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனி ஸ்பானியும் பாத்திரமறிந்து மிரட்டியிருக்கிறார். பலே, ‌பலே! பிரியனின் ஓவிய ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்தின் மிரட்டல் மியூசிக் இரண்டும் படத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஸ்கூல் பிரேயரில் தேசிய கீதம் பாடும்போது சவுண்டு விடும் ஒரு மாணவனின் அடாவடி அப்பாவையும் மற்றும் அவரது அடியாட்களையும் போட்டு தாக்கும் சூர்யா, அதே பிரேயரில் தமிழ்த்தாய் வாழ்த்து ‌பாடும் போது நடப்பது, திரும்புவது... என திரிவது... உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருப்பினும் ஹரியின் இயக்கத்தில் "சிங்கம் - II", கமர்ஷியல் "தங்கம்"! வசூல் "வைரம்"! ஆகலாம்!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...