வேற்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் பணி செய்து வருகிறார் சிவா. இவருடைய நண்பராக வருகிறார் ‘பிளேடு’ சங்கர். அப்பா இல்லாமல் அம்மா அரவணைப்பில் வாழும் சிவாவுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை.
ஆனால் அவருடைய அம்மாவோ சிவாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என முயல்கிறார். இருந்தும் சிவா அடம்பிடிக்கவே, திருமணம் செய்யவில்லையென்றால் திருப்பதி, பழனி, ராமேசுவரம் என சன்னியாசம்போகப்போவதாக அவருடைய அம்மா மிரட்டுகிறார்.
அம்மா மீது பாசம் கொண்ட சிவா, அம்மாவை பிரிய மனம் இல்லாததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதையடுத்து, மனோபாலா நடத்தும் திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்கின்றனர். அங்கு நாயகி வசுந்தராவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப்போக, அவளையே சிவாவுக்கு திருமணம் முடித்து வைக்க சிவாவின் அம்மா முடிவெடுக்கிறார்.
பின்னர் அவளுடைய வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்தமும் செய்துவிடுகிறார்கள். வசுந்தரா டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அரைகுறை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்த சிவா இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என முயற்சி எடுக்கிறார்.
இந்நிலையில், இந்த திருமணத்தில் வசுந்தராவுக்கும் சம்மதம் இல்லை என்பதை அறிகிறார். இறுதியில் இருவரும் இணைந்து திருமணத்தை நிறுத்தினார்களா? அல்லது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சிவா வழக்கமான நக்கல், நையாண்டி பேச்சால் படம் முழுக்க கலகலக்க வைத்திருக்கிறார். குறிப்பாக இந்தியில் இவர் எழுதி, பாடும் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
வசுந்தரா மீதான காதலை கவிதையாக சொல்வது ஏட்டில் பதிக்கவேண்டியது. வசுந்தரா காஷ்யாப் அழகாக இருக்கிறார். எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் காதல் ரசம் சொட்ட சிவாவுடன் ஆடிப்பாடுவது ரசிக்க வைக்கிறது.
மனோபாலா, சிவாவின் அம்மாவாக வரும் பெண் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
சிவாவின் நண்பராக வரும் ‘பிளேடு’ சங்கர் அழுத்தமான கதாபாத்திரத்தில் மனதில் இடம்பிடிக்கிறார்.
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கலகலப்பான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
முதல் பாதியில் இருந்தே படம் மெதுவாக நகர்கிறது. சிவாவின் நக்கல், நையாண்டி பேச்சால் படத்தை தொடர்ச்சியாக ரசிக்க முடிகிறது.
யாதீஷ் மகாதேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் திறம்பட செயல்பட்டிருக்கிறார்.
சரவணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ பார்த்தா புரியும்.
0 comments:
Post a Comment