நடிகர் விஷால் மதுரையை பின்னணியாக (திமிரு...) கொண்டு நடித்த படங்களும், திருச்சியை பின்னணியாக (மலைக்கோட்டை) கொண்டு நடித்த படங்களும் ஹிட் அடித்துள்ளன!
தெரிந்தோ(?) தெரியாமலோ(!) ‘‘பட்டத்து யானை’’ படத்தில் மதுரை, திருச்சி இந்த இரண்டு மாநகரங்களுமே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. அப்புறமென்ன... காமெடி சரவெடி, ஆக்ஷ்ன் அதிரடி என்று அசத்தியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ சூப்பர்-டூப்பர் ஹிட் அடிக்க இருக்கிறது. கங்கிராட்ஸ் விஷால்!!
காரைக்குடியின் பிரபல சமையல் சக்ரவர்த்தி சந்தானம், அவரிடம் பாவா லட்சுமணனின் சிபாரிசில், விஷால் தலைமையிலான ஐவர் குழு சமையலுக்கு வந்து சேருகிறது.
வந்து சேர்ந்த வேகத்திலேயே சந்தானத்தை ஒரு பெரும் ரவுடியுடன் கோர்த்து விட்டு பயத்தில் சந்தானத்தை திருச்சிக்கு மூட்டை முடிச்சை கட்ட வைக்கிறது. இந்த ஐவருடன் திருச்சியில் ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் எனும் ஐடியாவுடன் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு கிளம்பும் சமையல் சக்கரவர்த்தி சந்தானத்தை, திருச்சியில் சி்ங்கிள் டீக்கு வழியில்லாமல் ’அம்போ’ என விட்டுவிட்டு செல்கிறது விஷால் கோஷ்டி!
கூடவே 2 லட்சம் பையையும் மிஸ் செய்யும் விஷாலுக்கு, அந்த காணாமல் போன பையால் கதாநாயகி பள்ளி மாணவியான ஐஸ்வர்யா அர்ஜூனுடன் காதல் ‘பிக்ஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன, அந்த ஊர் வில்லனுக்கும் சில, பல காரணங்களால் ஐஸ் அர்ஜூன் மீது காதலும், அவர் குடியிருக்கும் வீட்டின் மீது ஒரு கண்ணும் விழுகிறது.
வில்லன் கோஷ்டி, சமையல்காரன் தானே?! என்று விஷாலை சாதாரணமாக நினைத்து ஐஸ்ஸையும், அவர் குடியிருக்கும் வீட்டையும் தூக்க பார்க்க, கைவசம் இருக்கும் சாரணி, சட்டுவத்தால் இருநூறுக்கும் மேற்பட்டி வில்லனின் கையாட்களையும், வில்லனையும் நையப்புடையத்து அனுப்பும் விஷால், தான் சாதாரண சமையல்காரன் அல்ல, மதுரையில் 3 பேரை கொன்று அதற்கு சில வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தபோது, சிறையில் தான் சமையல் செய்வதையே கற்றுக்கொண்டதாக ப்ளாஷ்பேக் விரிக்கிறார்.
அங்கு அராஜமாக நடந்து கொள்ளும் 3 பேரை விஷால் நியாயத்திற்காக போட்டுத்தாக்கும் கதை விரிகிறது! அதன்பின் மதுரை வில்லன், சென்னை வில்லன், திருச்சி வில்லன் இன்னும் சில சில்லரை வில்லன்கள் எல்லோரும் சேர்ந்து ஐஸ்வர்யாவையும், விஷாலையும் தீர்த்துகட்ட முயற்சிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து ஐஸ்ஸை காத்து அவர் விரும்பும் எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்கும் விஷால், தன்னையும் காத்துக் கொண்டு சந்தானத்திற்கு தன் நண்பர்களுக்கும் நல்லபடியாக ஹோட்டல் வைத்து கொடுத்தாரா? இல்லையா? என்பது காமெடியாகவும், அதிரடியாகவும், அதிரி புதிரியாகவும் படமாகியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ படத்தின் மீதிக்கதை!!
விஷால், மெய்யாலுமே மிரட்டியிருக்கிறார். மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்!
ஆனால், பள்ளி மாணவியாக வரும் ஐஸ்வர்யா பின்னால் வந்த வேலை, போன பணம், காத்திருக்கும் சந்தானம் பற்றியெல்லாம் கவலைபடாமல் லோலேவென சுற்றுவது நம்பும்படியாக இல்லை! விஷால் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்! இயக்குநருக்கும் சேர்த்து தான் சொல்கிறோம்!
ஐஸ்வர்யா அர்ஜூன் அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் உடை, நடை, எடை, உயரம் உள்ளிட்ட விஷயங்களில் விஷாலுக்கு பொருத்தமான ஜோடியாக பளீரிடுகிறார். பலே, பலே! என்ன ஒரே குறை ஐஸ்வர்யாவின் முகத்தில் அர்ஜூனும் தெரிவது சற்றே சலிப்பு தட்டுகிறது. அடுத்தடுத்த படங்களில் அம்மணி அந்த குறையை மேக்கப்பில் - பேக்கப் பண்ணட்டும்!
சந்தானம், சமையல் சக்ரவர்த்தியாக பட்டையை கிளப்பி இருக்கிறார். சில கடித்தாலும், பல தியேட்டரை அதிர வைக்கிறது! அதிலும் நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கமுத்து உள்ளிட்டவர்களை ஒன்றாக நிற்க வைத்து மண்ணெண்யை உமிழ்ந்து நெருப்பு பற்ற வைக்கும் காமெடியில், சிங்கமுத்துவின் மனைவியையை மட்டும் அவர் செய்கையால் நகர சொல்லும் இடத்தில் பண்ணும் சேட்டைகளும், பதிலுக்கு அந்த அம்மணி வாழை இலையால் மூடியிருக்கும் தன் மேனியில் இருந்து இலையை விலக்கும் இடமும் கொஞ்சம் காமநெடி என்றாலும் செம காமெடி!
ஜாக்பாட் - மயில்சாமி, முருகா - ஜெகன், மருதமுத்து - முரளி சர்மா, சரித்திரன், ஜான் விஜய், பெசன்ட்நகர் ரவி, நான்கடவுள் ராஜேந்திரன், சித்ராலட்சுமணன் எல்லோரும் சூப்பர்!
எஸ்.எஸ்.தமனின் இசையில் ஐந்து பாடல்கள், ஐந்தும் ஐந்து விதம்! அருமையான பதம்! எஸ்.வைத்தியின் ஒளிப்பதிவும், ‘‘மலைக்கோட்டை’’ ‘பளிச்’சை மறுபடியும் தந்திருக்கிறது. அனல் அரசுவின் நம்பும்படியான சண்டைக்காட்சிகள், ரமேஷ்.ஏ.எல்.லின் பக்குவமான படத்தொகுப்பு எல்லாம் சேர்ந்து இயக்குநர் ஜி.பூபதிபாண்டியனின் இயக்கத்தில் ‘‘பட்டத்து யானை’யை மகுடம் சூட வைத்திருக்கிறதென்றால் மிகையல்ல!
மொத்தத்தில், ‘‘பட்டத்து யானை’’ - ‘‘பட்டையை கிளப்பும் யானை!!’’
0 comments:
Post a Comment