ரஜினி மகளான ஐஸ்வர்யாவை மணந்த பின்னர் தன்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ். தனுஷின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலவெறி பாடலால் எங்கயோ போய்விட்ட தனுஷ், சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய தனுஷ், கொலவெறி பாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த தனுஷிடம் ஏன்? இந்த பாடலை ரஜினிகாந்துக்கு சமர்பிக்கவில்லை என்று கேட்டனர் அதற்கு தனுஷ், குடும்பத்தில் இருக்கிறவர்களிடமே இந்தபாட்டை சமர்பிக்க கூடாது.
அது நன்றாக இருக்காது, என் மாமனார் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றார். மேலும் 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர், யாரும் என்னை ஒரு நடிகராகவோ அல்லது தனுஷ் என்றோ பார்ப்பதில்லை.
ரஜினியின் மருமகனாகத்தான் பார்க்கின்றனர். அதற்கு முன்பு வரை எனக்கு இருந்த பெயர், புகழ் எல்லாம் ரஜினியின் மருமகன் என்ற பட்டம் அடித்து சென்றுவிட்டது. இதனால் நான் என்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன்.
எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள். திருமணம் ஆன பிறகு என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான்.
இப்போது அந்த கேள்வி படிப்படியாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் கேள்வியாய் கேட்டவர்கள் இப்போது இடையில் கேட்கின்றனர்.
இனி வருங்காலத்திலும் அதுவும் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரஜினி குடும்பத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment