புதிய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தை, உடனடியாக துவங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, அதிருப்தி தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.
சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை தொடர்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை, இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இப்பிரச்னை தீர்க்கப்படாததால், கடந்த 12 நாட்களாக, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரச்னைக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம், இன்னும் தீர்வு காணப்படாததால், சங்க நிர்வாகத்தின் மீது, தயாரிப்பாளர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
அதிருப்தி தயாரிப்பாளர்களின் திடீர் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கே.ராஜகோபால், கேயார், ஜெயசித்ரா உட்பட, 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை குறித்து, கடந்த மாதம் நடத்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டத்தில், விரிவாக விவாதித்து
எடுக்கப்பட்ட முடிவை, சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்னும் நிறைவேற்றாதது வருத்தத்துக்குரியது, கண்டனத்திற்குரியது.
சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக, "புதிய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு உடனடியாக உருவாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சினிமா இயக்குனர் அமீர், புதிய படத்தில் ஒப்பந்தம் இல்லா இயக்குனருக்கு, சம்பளமாக 10 லட்சம் ரூபாயும், இணை இயக்குனருக்கு 4 லட்சம் ரூபாயும், உதவி இயக்குனருக்கு 2 லட்சம் ரூபாயும், இயக்குனருக்கு தினப்படி 1,000 ரூபாயும், தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்றும், படத்தின் தலைப்பை இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பட வெளியீட்டிற்கு இயக்குனர் சங்கத்தின் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக அறிவித்திருப்பது, தயாரிப்பாளர்களின் சுய மரியாதைக்கு விடப்பட்ட சவாலாக தெரிகிறது. அமீரின் செயல் கண்டனத்திற்குரியது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன்,தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதியையும் இன்று வரை நிறைவேற்றாததால், சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு, அவர் மீது நம்பிக்கை இல்லை.
சங்கச் செயல்பாட்டில் தனது இயலாமைக்கு, தார்மீக பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலகவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால், சினிமா தயாரிப்பாளர்கள் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதால், சங்க நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அமீரின் தன்னிச்சையான அறிவிப்பு குறித்து முடிவு எடுப்பதற்கு, தமிழ்நாடு சினிமா இயக்குனர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று நடக்க உள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை தொடர்பாக, நாளை "பெப்சி அமைப்பினர் உண்ணாவிரதம் நடக்கிறது.
0 comments:
Post a Comment