சினிமா விமர்சனம் - தோனி ( தோழன் நீ )

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதாவது... எனும் கதையில் இருக்கும் நம் நாட்டின் கல்விமுறையை களைய வேண்டும் எனும் கருத்தை "நண்பன்" படத்தில் காமெடியாக லைட்டாக எடுத்துரைத்திருந்தார் ஷங்கர்.

அதே கருத்தை தோனியில் சீரியஸாக, வெயிட்டாக சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்! "தோனி" படம் அல்ல... பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்வி முறைகளுக்கும் பாடம்! என்றால் மிகையல்ல!!

கதைப்படி வாங்கும் சம்பளம் வாய்க்கும், வயிற்றுக்கும் பத்தாமல் ஊறுகாய் வியாபாரம், ஊரைச்சுற்றிக்கடன் என்று வாழ்க்கையை ஓட்டும் ரிஜிஸ்தர் ஆபிஸ் கிளார்க் பிரகாஷ்ராஜ். மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் நரக வேதனை நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து பெரிய ஆளாக்கும் கனவில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அவரது கனவை நனவாக்கும் விதமாக பெண் பிள்ளை, ஸ்ரீஜிதா பொறுப்பாக படிக்கிறார். ஆனால் ஆண் பிள்ளை மாஸ்டர் ஆகாஷோ படிப்பில் ஜீரோ வாங்கிவிட்டு, கிரிக்கெட்டில் சிக்ஸராக அடிக்கிறார்.

இதனால் அவர் படிக்கும் ஹைஸ்டேண்டட் ஸ்கூலில் கண்டனக்குரல்கள் எழுந்து, அது பிரகாஷ்ராஜின் காதுகளை துளைக்கிறது. அதன் விளைவு... மகனை கண்டிக்கிறேன் பேர்வழி... என மாஸ்டர் ஆகாஷை அடிக்க, அது படாத இடத்தில் பட்டு ம‌கன் கோமா ஸ்டேஜூக்கு போகிறார்.

அப்புறம்? அப்புறமென்ன... சமூகத்தையும், இச்சமூகத்தில் தற்பொழுது தரப்படும் கல்விமுறையையும் சாடும் பிரகாஷ், சாகக்கிடக்கும் மகனை எவ்வாறு காப்பாற்றுகிறார், சமூகத்துடன் எப்படி போராடி ஜெயிக்கிறார்...? என்பது தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான "தோனி" படத்தின் முக்காலும், முழுசுமான மீதிக்கதை!

நாய்படாத பாடுபடும் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்த்தனாக பிரகாஷ்ராஜ், வாங்கும் சம்பளம் போதாமல் வட்டிக்கு கடன் வாங்கி, பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து, அதை அடைக்க துணைக்கு மனைவியும் இல்லாமல், ஊறுகாய் தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி பெரும் போராட்டம் நடத்தும் பாத்திரத்தில் பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

படத்திற்கு தோனி நாட்-அவுட் என்று இந்திய கிரிக்கெட் கேப்டனின் பெயரை சூட்டிவிட்டு, கிரிக்கெட் மோகத்தில் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே என்ற வருத்தத்தில் மொட்டை மாடி கச்சேரியில் குடித்துவிட்டு நண்பர்களிடம் இந்த தோனி, தெண்டுல்கர் இவங்களையெல்லாம் தடை செய்து நாடு கடத்த வேண்டும்... என்று உணர்ச்சி பிழம்பாகி உளறும் இடத்தில் தொடங்கி, காய்கறிகாரனிடம் பெண்கள் மாதிரி பேரம் பேசுவது, ஊறுகாய் பாட்டில்களை ஆபிஸ் பீரோவில் பிறர் பார்வை படும்படி அடுக்கி வைத்து வியாபாரம் செய்ய முயல்வது, மகனின் படிப்பிற்காக ஆசிரியர்களிடம் கெஞ்சுவது, கிரிக்கெட் கோச் நாசரிடம் மகனை விட்டு விடும்படி மிஞ்சுவது, முறை தவறி வாழும் அப்பார்ட்மெண்ட் பெண்ணின் சூழ்நிலை புரியாமல் எக்கு தப்பாக பேசிவிட்டு, பின் அவரது மனிதாபிமானம் கண்டு மருகுவது, முதல்வரை பொது நிகழ்ச்சி ஒன்றில் தன் மகனுடன் முண்டியடித்து சந்திக்க முயல்வது... என நடுத்தர வர்க்கத்து பிரஜையாகவே வாழ்ந்திருக்கும் பிரகாஷ்ராஜூக்கு "தோனி" படத்தின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட இன்னும் பல உயரிய விருதுகள் கிடைக்கும் என்பது உத்திரவாதம்!

பிரகாஷ்ராஜூக்கு ஈடு கொடுத்து அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஆகாஷ், எனக்கு மேக்ஸ் வரலைப்பா, எனக்கு கிரிக்கெட் தான் வருது என்று தன் இயலாமையையும் கிரிக்கெட் சம்பந்தப்பட புள்ளி விவரங்களை சொல்லி தன் திறமையையும் வெளிப்படுத்தும் இடங்களில் பலே பலே... சொல்ல வைக்கிறார்.

இவர்களை மாதிரியே பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்டே, எனக்கு வேற வழி தெரியலை... அதான் இந்த தொழிலுக்கு வந்துட்டேன்... என்று ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பல இடங்களில் பிரகாஷ்ராஜையே மிஞ்சி விடுகிறார்.

ரிஜிஸ்தர் பிரம்மானந்தம், கிரிக்கெட் கோச் நாசர், கந்துவட்டிக்காரராக வரும் புதுமுகம், பிரகாஷ்ராஜின் பொறுப்பான மகளாக வரும் ஸ்ரீஜிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும் "தோனி" படத்தின் ஒவ்வொரு பலமான பேட்ஸ்மேன்கள் என்றால் மிகையல்ல!

இளையராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் கதையையும், களத்தையும் ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பது மாதிரி பரிச்சயப்படுத்தி பலம் சேர்த்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் இதே எண்ணத்தை படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஏற்படுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

பிரகாஷ்ராஜின் மகன் மாஸ்டர் ஆகாஷ், தோனியை ரோல் மாடலாக கொண்டு அவர் மாதிரி வரவேண்டும் என்று கிரிக்கெட் விளையாடுகிறான். ஆனால் ரோல் மாடல் வலது கை பேட்ஸ்மேன் என்றால், இவர் இடதுகை பேட்ஸ்மேனாக ஸ்கிரீனில் வருவது நெருடுகிறது! மற்றபடி ஷங்கரின் "நண்பன்" மாதிரி இல்லாமல், நம் நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என "நச்" ‌என்ற மாதிரி "டச்" பண்ணி, தமிழில் படம் இயக்கி இருக்கும் பிரகாஷ்ராஜூக்கு ரசிகன் ரசிகை பாகுபாடு இல்லாமல் இச்... இச்... தரலாம்!

மொத்தத்தில் "தோனி" மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை பெற்றவர்களுக்கும், பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களுக்கும் நல்ல "தோழன்(நீ!)"

1 comments:

Kumaran said...

ரொம்ப..ரொம்ப..ரொம்ப நல்ல விமர்சனம் சகோ..பதை பார்க்க வேண்டும் போல இருக்கிறது..ரசித்தவற்றை அப்படியே அழகாக வழங்கிய தங்களுக்கு எனது நன்றிகள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...