அரவான் - சினிமா விமர்சனம்

சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலைத் தழுவி வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரவான். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ஊர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். வேம்பூர் பகுதி மக்களுக்கு கன்னம் வைத்து திருடுவதுதான் குலத்தொழில்.

இந்த ஊருக்கு தலைவனாக பசுபதி வருகிறார். கூட்டமாக சென்று களவாடி வருவதில் வேம்பூர் மக்கள் அசகாய சூரர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய ஊரின் பெயரை சொல்லி, ராணி வீட்டில் ஆதி திருடி விடுகிறார். இதனால் பழி வேம்பூர் மேல் விழுகிறது. தன் ஊர் பழியை தீர்க்க திருடிய ஆதியை கண்டுபிடிக்கிறார் பசுபதி.

ஆதி திருடிய பொருளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதால் வேம்பூரின் பழி தீர்கிறது. ஆதியின் திறமையைக் காணும் பசுபதி அவரை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். வேம்பூர் பெரிசுகளின் தூண்டுதலால் 5 தலைமுறையாக திருடவே முடியாத கோட்டையூரில் திருடச் செல்கிறார்கள். அதில் பசுபதி கூட்டத்துடன் ஆதியும் செல்கிறார்.

அந்த ஊரினை காவல் காக்கும் பொறுப்பு மாத்தூரை சேர்ந்த கரிகாலனிடம் இருக்கிறது. அரண்மனை, கடுங்காவல் இவையனைத்தையும் மீறி அந்த ஊரில் திருடிவிட்டு தப்பிக்கிறார்கள். அப்படி தப்பிக்கும்போது பசுபதி மட்டும் சிக்கிக் கொள்கிறார். ஆதி தலைமையில் மற்றவர்கள் தப்பிக்க, பசுபதியை கரிகாலன் குழு அடித்து உதைக்கிறது.

மறு இரவே ஆதி தனது திறமையினால் கரிகாலனின் காவல்களை உடைத்து பசுபதியை மீட்டு வருகிறார். இதனால் ஆதி மேல் காதலுறும் பசுபதியின் தங்கை, ஆதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். அதையே பசுபதியும் சொல்ல, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. நான் வேறு ஊர்க்காரன் என்கிறார் ஆதி.

அந்நேரத்தில் வேம்பூரின் மானம் ஜல்லிக்கட்டு வடிவில் ஊசலாடுகிறது. ஊர்மானம் காக்க பசுபதி காளையை அடக்க முயல்கிறார். அதில் குத்துப்பட்டு விழும் பசுபதியை காப்பாற்றும் ஆதி, காளையையும் அடக்கி விடுகிறார்.

வெற்றிக்களிப்பில் மிதந்து நிற்கும் ஆதியை கரிகாலன் தலைமையிலான மாத்தூர் ஆட்கள் அடித்து, இழுத்துச் செல்கின்றனர். அதைத் தடுக்கும் பசுபதியிடம் இது களவுப் பொருள் விவகாரம் அல்ல, எங்கள் ஊரின் பலி ஆள் இவன் என்றபடி இழுத்துச் செல்கிறார்.

காவல்காரக் கூட்டத்தினர் வாழும் சின்னையன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் ஆதி. அவர்கள் காவலுக்கு செல்லும் வேளையில் சின்னையன்பட்டியில் பரத் பிணமாக கிடக்கிறார். சுற்று வட்டாரத்தில் விசாரிக்கையில் பரத் மற்றொரு காவல்கார ஊரான மாத்தூரை சேர்ந்தவர் என்பதும், கரிகாலனின் மச்சினன் என்பதும் தெரிய வருகிறது.

மூன்று தலைமுறைகளாக இந்த இரண்டு ஊருக்கும் இருக்கும் பகை, இப்போது அதிகமாகிவிட, அப்பகுதி பாளையத்தார் வந்து தீர்ப்பு சொல்கிறார். கொலை செய்தவன் யாரென்று தெரியாததால் பழி சின்னையன்பட்டியை சேர்கிறது. பலியான ஊருக்கு பதிலாக அதே வயதுடைய சின்னையன்பட்டியைச் சேர்ந்த நபர் பலி கொடுக்கவேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பு. இரு ஊரும் இதற்கு சம்மதிக்க, பலி ஆளாக ஆதி சிக்குகிறார்.

30 நாட்களுக்குப் பிறகு அவர் தானாக வந்து மாத்தூரில் பலியாக வேண்டும். இந்த 30 நாட்களுக்குள் பரத்தை கொன்றது யார் என ஆதி தேடிச் செல்கிறார். ஆதி தேடிச் செல்கையில் 30 நாள் முடிந்து போகிறது. இதனால் ஆதிக்கு பதிலாக அவரின் நண்பன் திருமுருகன் பலியாகிறார்.

இதனால் சொந்த ஊரும் ஆதியை கொல்ல துடிக்கிறது. மாத்தூரும் ஆதியைக் கொல்ல அலைகிறது. இந்நிலையில் ஆதியை காப்பாற்ற வேம்பூர் துடிக்கிறது? இறுதியில் பரத்தை கொன்றது யார்? கொன்றவனை ஆதி கண்டுபிடித்தாரா? காவல்காரனான ஆதி கள்ளனாக மாறியது ஏன்? அவரின் குடும்பம் எனன ஆனது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் எதிர்பாராத திருப்பங்களோடு விடை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் வசந்தபாலன்.

வரிப்புலியாக வரும் ஆதி, கொம்பூதியாக வரும் பசுபதி, வனப்பேச்சியாக வரும் தன்ஷிகா, மாத்தூரானாக வரும் கரிகாலன், வீரனனாக வரும் திருமுருகன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் இப்படத்தில் நடிக்கவேயில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு தன் கேரக்டரை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

பரத், அஞ்சலி, தேவதாசியாக வரும் ஸ்வேதா மேனன், பாளையக்காரியாக வரும் ஸ்ருதி பிரகாஷ் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைகிறார்கள்.

முன்னூறு ஆண்டு பழமையான மக்களின் வாழ்விடங்களை, பழமை மாறாமல் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர் என அனைத்து டெக்னீசியன்களும் இணைந்து ஒவ்வொரு பிரேமாக செதுக்கியிருக்கிறார்கள். இவைற்றையெல்லாம் ஒளிப்பதிவாளர் சித்தார்த் தனது கேமராக் கண்ணில் மிக இயல்பாக பதிவு செய்து நம் கண்களில் உலவ விட்டிருக்கிறார்.

நேர்த்தியான ஒளிப்பதிவு. நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு கார்த்திக்கின் இசை மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது. ‘நிலா... நிலா...’ பாடல் முணுமுணுக்கும் ரகம். தேவையான இடத்தில் இவரின் பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. "உன்னக் கொல்லப் போறேன்..." பாடல் இனிமையாக இருப்பினும், அது கதையோட்டத்தின் வேகத்தை தடை செய்கிறது.

சு.வெங்கடேசனின் வசனம் சில இடங்களில் கூர் திட்டப்பட்ட வைரமாய் மின்னுகிறது. உதாரணத்திற்கு ‘கனவிலிருந்துதான் காவல் பிறக்கிறது’ என்ற வசனமும், ‘சாகாத மனுஷன் யாராவது இருந்தா காட்டுங்க... நீங்க சொல்றபடி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’ போன்ற வசனங்களை சொல்லலாம். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதை நேர்த்தியாக இயக்கிய வசந்தபாலனுக்கு நிச்சயம் விருது கொடுத்தே பாராட்டலாம்.

இவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்தினாலும் தமிழ் மணம் மாறாமல், நம்மை பழைய காலத்திற்கே கூட்டிச் சென்று அம்மக்களோடு உலவிய திருப்தியை அரவான் தருகிறான். அரவான் - அசத்துவான்..!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...