வெளிவருவதற்கு முன்பே தடை, தாமதமென்று உலகை விறுவிறுப்பாக பேச வைத்த "விஸ்வரூபம்", வெளிவந்த பின்பும் அதே உலகை வியக்கவும் வைத்திருக்கிறது! "உலக நாயகன் எனும் அடைமொழிக்கேற்ப கமல், உலக தரத்திற்கு தந்திருக்கும் உன்னதமான தமிழ்ப்படம் தான் "விஸ்வரூபம்"!
கதைப்படி கதக் நாட்டிய கலைஞரான கமல் அமெரிக்காவில் அழகிய இந்திய வம்சாளி இளம் பெண்களுக்கு கதக் கற்றுத்தருகிறார்.
பெண் தன்மையுடன் வாழும் கமலின் நடை, உடை, பாவனைகள் எதுவும் பிடிக்காமல், அமெரிக்கன் சிட்டிசன் எனும் பெருமையான அடையாளத்திற்காகவும், தனது உயர் கல்விக்காகவும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் கமலை கட்டிக் கொண்டு மாரடிக்கும்(!) பூஜா குமாருக்கு, உடன் உள்ள ஒருவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்புக்கு கமல் எதிர்ப்பு காட்டக்கூடாது... என்பதற்காக அவர்(கமல்) ஏதும் காதல் குற்றங்கள் செய்கிறாரா...?! என கண்காணிக்க ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை அமர்த்துகிறார்கள் பூஜாகுமாரும் அவரது காதலரும் சேர்ந்து!
அந்த துப்பறியும் நிபுணர் மூலம் கமல் இந்து அல்ல ஒரு இஸ்லாமியர் என்பதும், அந்த துப்பறியும் நிபுணர் கொல்லப்படுவதின் மூலம், கமல் அமெரிக்க சட்டத்திட்டத்திற்கு புறம்பாக ஏதேதோ... செய்கிறார் என்பதும் தெரியவருகிறது! அப்படியென்றால் கமல் தீவிரவாதியா...? எனக்கேட்டால் அதுதான் இல்லை... அதுதான் விஸ்வரூபம் படத்தின் கதையே...
அதாகப்பட்டது, கமல் ஒரு இந்திய ரா உளவுப்பிரிவு அதிகாரி. காஷ்மீரி அப்பாவுக்கும், தமிழ் அம்மாவுக்கும் பிறந்தவர். தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களுக்கு போர் பயிற்சிகளை கற்றுத் தருகிறார் கமல்.
அவர்கள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, அமெரிக்காவை தகர்க்க தலிபான்கள் போடும் சதி திட்டத்தை, உதவியாளர் ஆண்ட்ரியா, உயர் அதிகாரி சேகர் கபூர் உள்ளிட்டோருடன் அமெரிக்கா போய் (ஆரம்பத்தில் அமெரிக்க போலீஸ்க்கு தெரியாமலும், அதன்பின் அமெரிக்க போலீஸின் உதவியுடனும்...) முறியடிப்பது தான் "விஸ்வரூபம்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மொத்த கதையும்!
இந்த கற்பனை கதையை காண்போர் கண்களும், கனத்த இதயங்களும் கூட மிரளும் வகையில் மிகமிக பிரமாண்டமாக அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கியிருக்கும் காரணத்திற்காகவே கமலுக்கு "கங்கிராட்ஸ் சொல்லலாம்!
கதக், கலைஞர் விஸ்வநாத்தாகவும் சரி, விசாம் அகமது காஷ்மீரியாகவும் சரி, கமலால் மட்டுமே கலக்க முடியும் என்பதை "ஃபிரேம் டூ ஃபிரேம்" நிரூபித்திருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன்.
"என் மனைவிக்கு சிக்கனை பிடிக்கும், எனக்கு என் மனைவியை பிடிக்கும்..." என்னும் சாதாரண வசனங்களில் தொடங்கி, "கடவுளுக்கு நான்கு கைகள் இருந்தால் சிலுவையில் எப்படி அடிக்க முடியும்...? அதனாலதான் நாங்க கடவுளை கடல்ல தூக்கி போட்டுவிடுவோம்..." எனும் சிந்திக்க தூண்டும் கூர்மையான வசனங்கள் ஒவ்வொன்றிலும் கமலின் குசும்பும், கூர்மையான கருத்துக்களும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.
பெண் தன்மையுடன் இருக்கும் கமல் தொழுகிறேன் பேர்வழி... என சடாரென்று வில்லன்களை பந்தாடி தன் மனைவி பூஜா குமாருடன் தப்பிக்கும் இடத்தில் தொடங்கும் விறுவிறுப்பு விஸ்வரூபம் படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் பெரும் பலம். அந்த இடத்தில் ரசிகர்களின் வாய்கள், தம்மையும் அறியாமல் கமல் - கமல் தான் என முணுமுணுப்பதும், காதை பிளக்கும் விசில் சப்தமும், கைதட்டல்களால் அரங்கு அதிர்வதும் கண்கூடு.
கமல் மாதிரியே தீவிரவாதி உமராக வரும் ராகுல் போஸ், கமலின் உயர் அதிகாரி சேகர் கபூர், கமலின் மனைவி நிருபமாக வரும் பூஜாகுமார், உதவியாளர் சஸ்மிதாக வரும் ஆண்ட்ரியாவும், நாசர், சலீம்(ஜெய்தீப்) உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே!பலே!!
ஆப்கானிஸ்தான் மலை பிரதேசங்கள், அமெரிக்காவின் அழகிய நகரங்கள், வானில் சீறிப்பாயும் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், துப்பாக்கி ரகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் த்தரூபமாக நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக்கியிருக்கும் சானுஜான் வர்கீஸின் ஒளிப்பதிவும், குணால் ராஜனின் ஒலிப்பதிவும், சங்கர்-ஹாசன்-லாயின் இசைப்பதிவும், மதுசூதனனின் விஷூவல் எபக்ட்ஸூம், கெளதமியின் உடை அலங்காரங்களும், லால்குடி இளையராஜாவின் கலை-இயக்கமும், மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பும், விஸ்வரூபத்தின் பிரம்மாண்டங்கள் பெரும் ப்ளஸ் பாயிண்டுகள்.
இந்தப்படத்தை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்த்ததைவிட இந்துக்கள் தான் எதிர்த்திருக்க வேண்டும்... என சொல்லாமல் சொல்லும் சில காட்சிகளை விஸ்வரூபத்தில் கமல் வழிய திணித்திருப்பதும், அதை., இந்துக்கள் எதிர்க்காததும் ஏன் என்பது புரியாத புதிர்...!!
விஸ்வரூபத்தை முழுநீள் ஆக்ஷ்ன் படமாக தந்திருக்கும் கமல், ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம் போல் கவனம் செலுத்தாதது கமல் ரசிகர்களை சற்றே ஏமாற்றம் கொள்ள செய்தாலும் உலகதரத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தந்திருப்பதற்காக கமலுக்கு "ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!
மொத்தத்தில் "விஸ்வரூபம்" கமலின் "வியத்தகுசொரூபம்"! "வெற்றிரூபம்"!!