தமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் "வனயுத்தம்" மொத்தமும்!
கதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் "வனயுத்தம்! இது வீரப்பனின் கதையா.? தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா...? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!
வீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்டைகளையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.
விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, "குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார்.
வீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் "ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், "கெஸ்ட் ரோலா? "ஒஸ்ட் ரோலா? என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்!
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
வீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா.? விஜயகுமாரின் வெற்றிக்கதையா...? என்பதை புரியாதா புதிராக்கிவிடுகிறது.
எனவே "வனயுத்தம்", வழக்கமான "தமிழ்சினிமா சப்தம்! யுத்தம்!!" எனலாம்...
0 comments:
Post a Comment