கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஸ்ரீதேவி. அதிகம் படிக்காத இவர் லட்டு செய்வதில் கைதேர்ந்தவர். இரண்டு குழந்தைகளும் நன்கு இங்கிலீஷ் பேசக்கூடியவர்கள்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள், அம்மாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதால் மிகவும் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். இது ஸ்ரீதேவியின் மனதை மிகவும் புண்படுத்துகிறது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் அக்கா மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனவே ஸ்ரீதேவி திருமணத்திற்காக தனியாக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இங்கிலீஷ் தெரியாததால் விமானத்தில் தண்ணீர் கேட்பதற்குக்கூட முடியாத நிலையில் தவிக்கிறார். பக்கத்து சீட்டில் பயணிக்கும் அஜீத் அவருக்கு உதவுகிறார். விமானத்தில் இருந்து வெளியே வரும்வரை உதவுகிறார்.
பிறகு தனது சகோதரி வீட்டில் தங்கும் ஸ்ரீதேவி தனியாக கடைக்குச் செல்கிறார். அங்கு தனக்கு வேண்டிய உணவை வாங்க முயல்கிறார். ஆங்கிலம் தெரியாததால் அவமானப்படுகிறார்.
மனம் நொந்துபோன இவர் அமெரிக்காவில் 4 வாரங்களில் ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து தன் கணவர் மற்றும் குழந்தைகள் அமெரிக்காவிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்.
அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டாரா, தன் மரியாதையை மகளிடம் இருந்து பெற்றுக்கொண்டாரா? என்பதே கதை.
15 வருடங்களுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் ஸ்ரீதேவி நடிப்பில் பளிச்சிடுகிறார். குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக பொருந்தியிருக்கிறார்.
ஆங்கிலம் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை புரிந்துகொள்ள முயற்சிப்பதும், தனக்கு வேண்டியதை சொல்ல முடியாமல் தவிப்பதும் என கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.
5 நிமிடங்கள் மட்டுமே வரும் அஜீத், அவரின் கதாபாத்திரத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது.
வெள்ளைக்காரர்களை பார்த்து நாம் பயப்படக்கூடாது, அவர்கள் நம்மைப் பார்த்து கவலைப்படக்கூடிய காலம் வந்து விட்டது என்பது போன்ற வசனங்கள் சிறப்புக்குரியவை.
ஸ்ரீதேவியின் அக்காவின் இளைய மகளாக வரும் ப்ரியா ஆனந்த் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவராக வரும் அதில்ஹூஸைன், நண்பராக வரும் மேதி, இங்கிலீஷ் டியூஷன் டேவிட், பாகிஸ்தானிய இளைஞன் என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்; நாகரீக உலகத்தில் அவர்களும் பளிச்சிட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.
அவர்களை, பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல் பெற்றோர்களும் மாறவேண்டும் என்பதை மிகவும் யதார்த்தமான கதையில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் பெண் இயக்குனர் கௌரி ஷிண்டேவை பாராட்டியே ஆகவேண்டும்.
இசை, ஒளிப்பதிவு இரண்டும் பாராட்டும் வகையில் உள்ளது. இங்கிலிஷ் விங்கிலிஷ்- ஸ்ரீதேவியின் வெற்றிப்பட வரிசையில் இடம்பிடிக்கும்.