அழகான மலை கிராமம் கோரமலை. இங்கு வாழும் தொங்காபுரம் ஜமீன் ஆட்களும், குஞ்சானி இன மக்களும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.
இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாசர். இங்கு கான்ஸ்டபிள் வேலைக்கு பாலாஜியும், டிரைவர் வேலைக்கு வெங்கியும் வருகின்றனர்.
பாலாஜிக்கு சிறுவயதிலிருந்தே இவனையும் மீறி திருடுவது பழக்கமாக இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவே போலீஸ் வேலைக்கு வருகிறார்.
வெங்கிக்கு வலதுபக்க காது கேட்காது. இருவரும் வேலைக்கு வந்ததும் நண்பர்களாகி விடுகிறார்கள். அந்த ஊரில் கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் இவர்களை குஞ்சானி இனத்தைச் சேர்ந்த நாயகி லட்சுமி பிரியா அவளது தம்பி, அப்பா ஆகியோருடன் வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் அவள்மீது இருவரும் ஒருதலையாக காதல் வயப்படுகிறார்கள்.
மறுமுனையில் நாயகியின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் காட்டுக்குள் மர்மமான முறையில் சுடப்பட்டு இறந்து விடுகிறார். அந்த கொலையை துப்பறியும் வேலையில் நாசர் குழு களமிறங்குகிறது.
இதற்கிடையில் தன்னுடைய அப்பாவை கொன்றவனை தேடி கொலை செய்ய நாயகியும், அவளது தம்பியும் காட்டுக்குள் உலா வருகின்றனர்.
அப்போது, குடித்து விட்டு போதையில் வரும் பாலாஜி செய்வதறியாது துப்பாக்கியால் ஒருவரை கொலை செய்து விடுகிறார். முகம் சிதைந்த நிலையில், அவரது பாக்கெட்டில் இருக்கும் மாத்திரை பாட்டிலை வைத்து அவர் அந்த ஊரின் ஆராய்ச்சியாளர் ஜெயப்பிரகாஷ் என்பதை அறிகின்றனர்.
ஜெயபிரகாஷ் அதே ஊரில் காம உணர்ச்சியை அதிகப்படுத்தும் மாத்திரையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர். அந்த பிணத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்குழியில் புதைக்க திட்டமிடுகின்றனர்.
ஆனால், போகும் வழியில் ஜெயபிரகாஷை நேரில் சந்திக்கும் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அவர்கள் கொலை செய்தது தொங்காபுரம் ஜமீன் என்பது ஜெயபிரகாஷ் மூலமாக இருவருக்கும் தெரிய வருகிறது.
ஜமீன்தான் எம்.எஸ்.பாஸ்கரை சுட்டது என்பதும், அவரை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானமாக 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனவும் நாசர் வாக்கி டாக்கியில் தகவல் தருகிறார். இதையறியும் பாலாஜியும், வெங்கியும் அந்த பிணத்தை போலீசில் கொண்டு போய் சேர்க்க முடிவெடுக்கின்றனர்.
ஆனால், தன்னுடைய ஆராய்ச்சிக்காக கிடைத்த ஒரேயொரு நபர் தொங்காபுரம் ஜமீன் என்பதால் அவரது பிணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டுபோக ஜெயபிரகாஷ் மறுப்பு தெரிவிக்கிறார்.
மறுமுனையில், இதையெல்லாம் கேட்டு அறிந்த நாயகி தன் அப்பாவை கொன்றவனுடைய பிணத்தை தன்னுடன் ஒப்படைக்குமாறு கேட்கிறாள்.
இந்த மூன்று பிரிவுக்கும் பிணத்தை யார் எடுத்துப் போவதில் பிரச்சினை ஏற்பட்டு சண்டை ஏற்படுகிறது. இறுதியில், அந்த பிணத்தை யார் கொண்டு சென்றனர் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
கதையின் நாயகர்களாக பாலாஜியும் வெங்கியும். இருவரும் தங்களுடைய முகத்தில் காமெடியை கொண்டுவர ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். வெங்கியின் உடல்வாகு, அவரது ஓட்டம் கொஞ்சம் காமெடியை வரவழைக்கிறது. மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாயகி லட்சுமி பிரியா, அழகாக இருக்கிறார். மலை வாழ் பெண்ணாக அழகாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.
நாசர் சிரிப்பு போலீசாக நம்மை சிரிக்க வைக்கிறார். படம் ஆரம்பக் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் குயில் சுடுவது ரசிக்க வைக்கிறது. ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் வரும் ஜெயபிரகாஷ் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சம்கூட ஒட்டவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் ஜமீனின் மனைவியாக வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்படும் வில்லியாக மிரட்டுவார் என பார்த்தால் அடங்கி போய் ஏமாற்றிவிடுகிறார்.
கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். டுவிஸ்ட் டுவிஸ்ட் என்று சொல்லி படத்தில் எங்குமே டுவிஸ்ட் வைக்காதது பெரும் ஏமாற்றமே.
படத்தின் தொடக்கத்தின் போது கார்ட்டூன் காட்சிகளை வடிவமைத்ததில் கடும் சிரத்தை எடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரொம்ப நீளமாக நீண்டுகொண்டே போகிறது. அவற்றிற்கு கத்திரி போட்டிருக்கலாம்.
மெடில் புளூஸ் இசையில் ‘பார் சாங்’ தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம் ரகம்.