‘களவாணி’, ‘வாகைசூட வா’ திரைப்படங்களின் வாயிலாக அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிய இயக்குநர் சற்குணத்தின் மூன்றாவது படைப்பு தான் ‘நய்யாண்டி’, எனும் எதிர்பார்ப்பை விட, இந்தப்படத்தில் ஒரு டூயட் பாடலுக்கான லீட் காட்சியில், எனது தொப்புளுக்கு பதில் வேறு ஒரு டூப்ளிக்கேட் தொப்புளை இயக்குநர் சற்குணம் காண்பித்து விட்டார்... என கமிஷ்னர் ஆபிஸ் வரை நாயகி நஸ்ரியா நஸீம் போர்கொடி தூக்கி நாடகம் நடத்தியதும், அதன்பின் அப்படி ஒரு தொப்புள் காட்சியே படத்தில் இல்லை... என அம்மணி படத்தை பார்க்காமலே பார்த்ததாக சொல்லி புகாரை வாபஸ் வாங்கியதும் ‘நய்யாண்டி’ படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாய் கூட்டிவிட்டது.
இனி ‘நய்யாண்டி’ கதையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்... கதைப்படி, கும்பகோணம் அருகே குத்துவிளக்கும், காண்டாமணி உள்ளிட்ட பித்தளை பொருட்களை பெரியளவில் செய்து விற்பனை செய்யும் பிரமிட் நடராஜன் - மீரா கிருஷ்ணன் தம்பதியின் மூன்றாவது வாரிசு சின்னவண்டு எனும் தனுஷ். நாற்பது சொச்சம், 35 மிச்சம் வயதுடைய இரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகாத நிலையில், சின்னவண்டு-தனுஷ், பல்டாக்டர்-வனரோஜா எனும் நஸ்ரியா நஸீமை காதலித்து இக்கட்டான ஒரு சூழலில் அவசரகதியில் தாலியும் கட்டுகிறார். இத்தனையும் நடப்பது கும்பகோணம் ஏரியாவில் அல்ல... சின்னவண்டு தனுஷின் சின்ன வயசு, சைஸ்... மாமா பரோட்டா சூரி ஊரில்!
அந்த ஊரில் தான் சின்ன வண்டு, சின்னவயசு முதல் வளர்கிறார் வாழ்கிறார். அந்த ஊருக்கு பாட்டி வீட்டிற்கு வந்த நாயகி வனரோஜா நஸ்ரியா மீது சின்ன வண்டு தனுஷூக்கு காதல்!
ஒரு கட்டத்தில் சின்ன வண்டின் நற்குணங்களைக் கண்டு தனுஷ் மீது நஸ்ரியாவுக்கும் காதல்! அந்த காதல் பூத்து காய்த்து கசிந்துருக ஆரம்பிக்கும் வேளையில் தன் பிறந்தநாளுக்காக தனது சொந்த ஊருக்கு போகும் நஸ்ரியாவுக்கு தடபுடலாக கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன.
அந்த தருணத்தில் அங்கு வரும் தனுஷ், அடாவடி மாப்பிள்ளையின் அடியாட்களை அடித்து போட்டுவிட்டு நஸ்ரியாவுக்கு அவசரத் தாலி கட்டுகிறார். அப்புறம்? அப்புறமென்ன?
நஸ்ரியாவை அழைத்து கொண்டு அந்த ஊரை விட்டு ஓடி வரும் தனுஷ், ஒரு இடத்தில் தன் மாமா சூரியை வரவழைத்து அவர் கையில் நஸ்ரியாவை ஒப்படைத்து தன் கும்பகோணம் குத்துவிளக்கு பேக்டரியில் அநாதை என சொல்லி அடைக்கலம் ஏற்படுத்த சொல்லிவிட்டு, சில நாட்கள் கழித்து அங்கு வருகிறார்.
அங்கு திருமணம் ஆகாமல் தவிக்கும் தனுஷின் அண்ணன்கள் இருவரும் நஸ்ரியாவுக்காக நான்- நீ என போட்டி போட்டு அடித்து கொள்கின்றனர். மற்றொரு பக்கம் நஸ்ரியாவுக்கு நிட்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வில்லனின் ஆட்கள் நஸ்ரியாவைத்தேடி கும்பகோணம் வருகின்றனர்.
தனுஷ், அண்ணன்களிடமிருந்தும், வில்லனிடமிருந்தும் நஸ்ரியாவை காபந்து செய்து, தன் அவசரத்தாலி மேட்டரை வீட்டிற்கு தெரியப்படுத்தினாரா? அல்லது அண்ணன்களாலும், வில்லனாலும் அல்லல்களுக்கு ஆட்பட்டாரா? என்பது ‘நய்யாண்டி’ படத்தின் காமெடி கலந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
சின்னவண்டு - தனுஷ் வழக்கம் போலவே பெரிய அளவில் ரொம்பவும் அடித்து கிணற்றை தாண்டுவது, மரத்திற்கு மரம் தாவுவது என தன் பாத்திரமறிந்து ‘பளிச்’ சென்று நடித்திருக்கிறார்.
பல் டாக்டர் வனரோஜாவாக வரும் நஸ்ரியா நஸீம் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பல் டாக்டராக வந்து, அப்பா அனுப்பி வைத்த செட்-அப் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அப்பா நரேனிடம் செல்ல கோபம் காண்பிப்பதோடு சரி... அதன்பிறகு இழுத்து போர்த்திக் கொண்டும், கவர்ச்சி காண்பித்தபடி தனுஷையும், நம்மை இன்பவதை செய்கிறார் பேஷ், பேஷ்!
தனுஷின் மாமா சூரி, அண்ணன்கள் ஸ்ரீமன், சத்யன், அம்மா மீரா கிருஷ்ணன், அப்பா பிரமிட் நடராஜன், வில்லன் வம்சி கிருஷ்ணா, இமான் அண்ணாச்சி, சதீஷ், அஸ்வின், நஸ்ரியாவின் அப்பா நரேன், பாட்டி சச்சு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறது!
அதிலும் நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் வயிறை எக்கிக்கொண்டு ஸ்ரீமன்னும், வாலிப வயோதிகராக சத்யனும் அடிக்கும் லூட்டிகள் தான் செம காமெடி!
எம்.ஜிப்ரானின் இசை ஒரு புது தினுசு! வேல்ராஜின் ஒளிப்பதிவு அள்ளுது மனசு! ஏ.சற்குணத்தின் எழுத்து-இயக்கத்தில் அவரது முந்தைய படங்கள் அளவுக்கு ‘நய்யாண்டி’ இல்லாவிட்டாலும், ‘நய்யாண்டி’ பண்ணும் அளவிற்கு இல்லை என்பது ஆறுதல்!
ஆகமொத்தத்தில் ‘நய்யாண்டி’ - தனுஷ் ரசிகர்களுக்கு நல் மேளம் தான் - தாளம் தான்! இயக்குநர் சற்குணத்தின் நற்பட விரும்பிகளுக்கு...?!
0 comments:
Post a Comment