ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘‘கோச்சடையான்’’ படத்தில் இருந்து சிங்கிள் பாட்டு இன்று வெளியிடப்பட்டது.
‘‘எந்திரன்’’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பில் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளிவர இருக்கும் படம் ‘‘கோச்சடையான்’’. முதன்முறையாக ரஜினி, அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார்.
ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நாசர், ருக்மணி, ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் பட பாணியில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்படத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
தற்போது படத்திற்கான கிராபிக்ஸ், சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினியின் பிறந்தநாளன்று படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, ‘கோச்சடையான்’ படத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டை மட்டும் இணையதளம் மூலமாக வெளியிட்டுள்ளனர்.
‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என ஆரம்பிக்கும் இப்பாடலை ரஜினியின் ஆஸ்தான பின்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘கோச்சடையான்’ படத்தின் முழுப்பாடலும் வெளியாக இருக்கிறது. அநேகமாக தீபாவளியையொட்டி பாடல்கள் வெளியாகும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment