மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் கருணாஸ். காவல்துறையில் ஏட்டாக வேலைபார்த்த இவரது தந்தை பணியில் இருக்கும்போதே இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலை கருணாசுக்கு கிடைக்கிறது.
போலீஸ் வேலைக்குச் செல்ல பயப்படும் கருணாஸ், தன் தாய் தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார். பணியில் சேர்ந்த முதல் நாளே, இவர் ஒரு பயந்த சுபாவம் உடையவர் என்பது ஸ்டேசனில் வேலை செய்யும் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.
இதனால் அனைவரும் கருணாசை அலட்சியம் செய்கிறார்கள். ஆனால், இவர் பயத்தினால் செய்யும் அனைத்து செயல்களும் இவருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
ஒரு கட்டத்தில் பெரிய கொலைக் கும்பலை இவர் பயத்தினால் பிடித்து விடுகிறார். இதனால் போலீஸ் கமிஷனரான என்.எஸ். பாஸ்கர் இவர் திறமையை பாராட்டி ஏட்டாக இருந்த இவரை இன்ஸ்பெக்டராக ஆக்கி விடுகிறார்.
கருணாசோ, ஏட்டு சம்பளத்தை விட இன்ஸ்பெக்டரானால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொள்கிறார். இந்த சமயத்தில் ஒரு பெண்ணை பார்க்கிறார் கருணாஸ். அந்த பெண் பிடித்துப்போக அம்மாவுடன் பெண் கேட்க செல்கிறார். இதற்கிடையே ரவுடியை பிடிக்கும்போது ஏற்பட்ட காயத்தினால் மருத்துமனைக்கு செல்கிறார்.
அங்கு இவரின் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அதே வேளையில் குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட டெல்லி கணேசும் ரத்த பரிசோதனைக்கு வருகிறார். தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியது தெரியக்கூடாது என்பதற்காக டெல்லி கணேஷ், ரத்தத்தை மாற்றி விடுகிறார்.
ரத்தத்தை பரிசோதிக்கும் டாக்டர், கருணாசுக்கு கேன்சர் என்ற குண்டை தூக்கிப் போடுகிறார். தன் குடும்பத்தை காப்பாற்ற இன்ஸ்பெக்டர் பொறுப்பை ஏற்றோம். தற்போது இப்படி ஆகிவிட்டதே என்று நொறுங்கும் கருணாசுக்கு, போலீஸ் வேலையில் இருக்கும்போதே இறந்துபோனால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்ற செய்தி தெரிகிறது.
இதனால் நாம் செத்தாலும் பரவாயில்லை, தனது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கிடைக்க வேண்டும் என்று பயங்கர ரவுடிக் கும்பல் மற்றும் தீவிரவாதிகளை பிடிக்கும் வேலையில் இறங்குகிறார். ஆனால் இவற்றில் அவர் இறந்து போகாமல் அவருக்கு நல்ல பெயரையே வாங்கிக் கொடுக்கிறது.
ஒரு கட்டத்தில் இவரை வேண்டாம் என்று கூறிய நாயகி, இன்ஸ்பெக்டராக இருந்து செய்யும் சாதனையால் கருணாசை விரும்புகிறார். கருணாசோ தனக்கு கேன்சர் இருப்பதால் காதலை ஏற்கமுடியாமல் தவிக்கிறார்.
அதேசமயம் காதலி தன்னை வெறுக்கும் வகையில் பல செயல்களை செய்கிறார். அதிர்ஷ்டவசமாக இதுவும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கிறது.
இந்த ரகளைகளுக்கு மத்தியில் காதலியை கரம் பிடித்தாரா?, அவர் குடும்பத்தை கரையேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
பயந்தாங்கொள்ளி போலீஸ் கேரக்டரில் கருணாஸ் இயல்பாக நடித்துள்ளார். குறிப்பாக தனது காதலியை வெறுக்கச் செய்வதற்காக இவர் எடுக்கும் முயற்சிகள், அது பலன் அளிக்காததால் உருவான டென்ஷன் போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல், பாடல்களுக்கும் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார்.
கதாநாயகி அங்கனாராய்க்கு காட்சிகள் குறைவுதான். இருந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.
என்.எஸ். பாஸ்கர், பழைய நடிகர் மேஜர் சுந்தர்ராஜனை போல் முதலில் ஆங்கிலத்தில் பேசி அதையே தமிழில் பேசும் காட்சிகள் படத்திற்கு மேலும் சிறப்பு.
திடீர் திடீர் என வரும் மயில்சாமி, கோவை சரளா, சிங்கம்புலி, மனோபாலா காட்சிகளுக்கு மெருகேற்றுகிறார்கள்.
ஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஸ்ரீகாந்த் இசையில் ‘ஒபாமாவும்...’ என்ற பாடலை கருணாஸ் சொந்தக்குரலில் பாடியுள்ளார். மொத்தத்தில் ரகளபுரம் 'செமரகளை'.
0 comments:
Post a Comment