ஹாலிவுட் படங்களை அப்பட்டமாய் காப்பியடித்துவிட்டு அப்படி ஒரு ஹாலிவுட் படம் வந்ததா.?! நான் பார்க்கவே இல்லையே... என உலகறிந்த உண்மையின் மேல், முழு போஸ்டர் ஒட்டி மூடிக்கொண்டுத் திரியும் நம்மூர் இயக்குநர்களுக்கு மத்தியில், நம்மூர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் காதல் கதையை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘ரெளத்திரம்’ கோகுல்!
அவருக்கு அதற்காக ஒரு ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லியே ஆக வேண்டும்! வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதியா? விஜய்சேதுபதி என்றால் வித்தியாசமா.?! என தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து கேட்க வைத்து வரும் விஜய்சேதுபதி, இந்தப்படத்திலும் அதுமாதிரி ஒரு பெரும் முயற்சிக்காக, இயக்குநர் கோகுலின் பக்கபலமாக நின்று பக்கா படமாக ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’’ படத்தை கொண்டு வந்திருப்பதற்காக விஜய்க்கும் ஒரு டஜன் ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லலாம்! இனி கதைக்கு வருவோம்!
ஒரு குறைந்த வருவாய் பிரிவினருக்கான அரசு குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியும், குமுதா எனும் ‘அட்டக்கத்தி’ நந்திதாவும். சின்னவயது முதலே தெரியும் என்பதால் சுமார் மூஞ்சி குமாருக்கு, குமுதா மீது லவ் என்றால் லவ் அப்படி ஒரு ஒன்சைடு லவ்!
ஆனாலும் சுமார் மூஞ்சி விஜய்சேதுபதியின் குடியாத, விடியாத தருணங்களால், குமாரை பார்த்தாலே குமுதாவிற்கு குமட்டிக் கொண்டு வருகிறது.
அதனால் தன் அப்பா பட்டிமன்றம் ராஜாவிடம் சொல்லி, அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்திற்கு சுமார் மூஞ்சி குமாரை அனுப்பி வைக்கிறார் குமுதா. அங்கு தன் கலாட்டா காதலை ப்ளாஷ் பேக்காக சொல்லி செம மாத்து வாங்கும் விஜய் சேதுபதி, அந்த துக்கத்தை மறக்க ஆப் தேடி நட்ட நடுராத்திரியில் நண்பருடன் அலைகிறார்.
இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் மார்கெட்டிங் இளைஞர் பாலா எனும் அஸ்வினுக்கும், தனியார் நிறுவன ஹெச்.ஆர்., ரேணு எனும் ‘சுப்புரமணியபுரம்’ சுவாதிக்கும் காதல். அடிக்கடி செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் இருவரையும் சேரவிடாமல் தடுப்பது பாலா எனும் அஸ்வினின் குடிப்பழக்கம்!
மார்கெட்டிங் ஹெட்டின் டார்ச்சர், காதலியின் டார்ச்சர் இந்த இரண்டாலுமே அடிக்கடி குடிக்கும் பாலா, ஒருநாள் குடிபோதையில் ஒரு கர்ப்பிணியின் மீது தன் வண்டியை ஏற்றிவிட, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவரது கணவரின் வருகைக்காக அஸ்வினும், அவரது காதலி சுவாதியும் காத்திருக்கின்றனர்.
அந்த கர்ப்பிணியின் கணவரும் ஒரு டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டு இருக்கும்போது, அதே டாஸ்மாக்கில் சற்றுமுன் நடந்த ஒரு கொலைக்காக போலீஸ் விசாரணைக்கு போக, கர்ப்பிணி பிழைக்க வேண்டுமென்றால், ஒரு அரிய வகை இரத்தம் தேவை. அந்த வகை இரத்தம் சுமார் மூஞ்சி குமாருக்கு மட்டுமே அந்தப்பகுதியில் அப்போதைக்கு இருக்கிறது!
அப்புறம்.? அப்புறமென்ன? இரத்த வங்கி வழிகாட்டுதல் படி அந்த அரிய வகை இரத்தமுள்ள சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியைத் தேடி அஸ்வினும், நண்பர்களும் அலைகின்றனர். விஜய்சேதுபதியோ, நண்பருடன் ஆப் சரக்கைத் தேடி அலைகிறார்.
சுமார் மூஞ்சி குமார்-விஜய்சேதுபதியின் கையில் ஆப் கிடைப்பதற்கு முன், அஸ்வின்பாலா, அவரைத் தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து அடிபட்ட கர்ப்பிணிக்கு இரத்தம் வாங்கி கொடுத்தாரா? , கர்ப்பிணி உயிர் பிழைத்தாரா?
இந்த நல்ல காரியத்தால் காதலி குமுதா, சுமார் மூஞ்சி குமாருக்கு கிடைத்தாளா? டாஸ்மாக் கொலையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? கர்ப்பிணியின் கணவர் மீண்டாரா? அஸ்வின்-சுவாதி ஜோடி இணைந்ததா இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சீரியஸ் கேள்விகளுக்கு காமெடியாக பதில் சொல்கிறது ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ திரைப்படம்!
விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி, பரோட்டா சூரி, வி.எஸ்.ராகவன், எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ‘பளிச்’ சென நடித்து பாலகுமாராவை தூக்கி நிறுத்துகிறது.
அதிலும் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் நடிக்க எப்படி ஒப்புக் கொள்கிறார்? எனும் ஆச்சர்யத்தை தருகிறது அவரது பாத்திர படைப்பு! பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமல்ல... இயக்குநர் கோகுல் உள்ளிட்ட எல்லோருமே காமெடியாக படத்தில் நிறைய மெஸேஜ் சொல்லி இருக்கிறார்கள்!
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, சித்தார்த் விபினின் இசை, லியேர் ஜான்பாலின் படத்தொகுப்பு, கோகுல், கார்க்கியின் வசனங்கள், மதன்கார்க்கியின் பாடல்கள் எல்லாமே பாலகுமாரா படத்திற்கு பெரும்பலம்! குடி, குடி என குடியை காட்டி, குடிக்காதே எனும் மெஸேஜையும், இரத்த தானம் செய்யுங்கள் எனும் அட்வைஸையும் காமெடியாக, அதேநேரத்தில் கருத்தாழத்துடன் சொல்லியிருக்கும் விதத்தில் இப்படத்தை எழுதி இயக்கிய கோகுல் வெற்றி பெற்றிருக்கிறார்!
ஆகமொத்தத்தில், ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ - ‘‘ஏகப்பட்ட விருதுகளுக்கு ஆசைப்பட்டிருக்கிறது!’’
0 comments:
Post a Comment