கெட்டப்பை மாற்றும் சசிகுமார்

"சுப்ரமணியபுரம் துவங்கி, தற்போது நடித்துள்ள, "சுந்தரபாண்டியன் வரை, தான் நடித்த அனைத்து படங்களிலும், தாடி கெட்டப்பிலேயே நடித்துள்ளார் சசிகுமார்.

ஆனால், அடுத்த ஆண்டு தான் இயக்கி, நடிக்கவுள்ள ஒரு படத்திற்காக, முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார்.

மேலும், தொடர்ந்து புதுமுக டைரக்டர்களின் படங்களிலேயே நடிக்க திட்டமிட்டிருப்பவர், தன் மூலமாக, குறைந்தது ஒரு பத்து இயக்குனர்களையாவது அறிமுகம் செய்ய, யோசித்து வருவதாக சொல்கிறார்.

ஹாலிவுட்டுக்கு முன்னாடி ஒரு காமெடி - கமல் திட்டம்

கமல்ஹாசனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உருவாகி இருக்கும் "விஸ்வரூபம்" படம் அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்து கொண்டு‌போய் உள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஹாலிவுட் படம் தான் இயக்கபோவதாக அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்க, அதற்கு முன்பாக ஒரு முழுநீள காமெடி டிராக் படத்தை இயக்க எண்ணியிருக்கிறாராம் கமல்.

ஹாலிவுட் படத்திற்கு நிறைய பணம், நேரம் செலவாகும் என்பதால் அதற்கு முன்பாக இந்த படத்தை இயக்க எண்ணியிருக்கிறாராம்.

அதுவும் தனது ஆஸ்தான வசனகர்த்தவான கிரேஸி மோகனையே இந்த படத்திலும் பணியாற்ற எண்ணியிருக்கிறார்.

இதுதொடர்பாக கிரேஸியும்-கமலும் சந்தித்து பேசி வருவதாகவும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம்.


சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம்.


அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம்.


ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம.


அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்றி அனுஷ்கா விளக்கியபோது ஆர்யாவுக்கும் யோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவ்வப்போது சின்னச்சின்ன யோக கலைகளை அவரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார்.


அதன் பலன் சிறப்பாக இருந்ததை உணர்ந்த ஆர்யா, அதன்பிறகு ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டு, தினமும் அனுஷ்கா பாணியில் யோகாவை செய்யத்தொடங்கி விட்டாராம்.


சென்னை திரும்பியபிறகு அனுஷ்கா சொல்லித்தரும் யோகா சாதாரணமல்ல, அருமருந்து என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் ஆர்யா.

விரைவில் அறிவிக்கிறார்கள் முகமூடி பார்ட்-2

யு டிவி தயாரித்திருக்கும் படம் முகமூடி. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்துக்கு பிறகு முகமூடி பார்ட் 2 தயாரிக்க இப்போதே தயாராகி வருகிறார் யு டிவி அதிகாரி தனஞ்செயன்.

முகமூடி தயாரிப்பில் இருந்தபோது வில்லனாக நடிக்கும் நரேன் சம்பளம் உள்பட பலவற்றில் தனஞ்செயனுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரசாரமாக மோதிக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது அவர்களுக்கும் அப்படி ஒரு நட்பு நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மூகமூடி பார்ட்-2 வரும் என்றே தெரிகிறது.

இதனை தனஞ்செயன் வெளிப்படையாகவே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து விட்டார். அதிலும் ஜீவாவே ஹீரோ, ஹீரோயினும், வில்லனும் மாறுவார்கள். மிஷ்கினும் அடுத்து யு டிவிக்குதான் படம் இயக்குகிறேன் என்று சொல்லிவிட்டார்.

ஒருவேளை முகமூடி மக்களிடம் வரவேற்பு பெறாமல் போனால்... வேறொரு கதை ரெடியாக இருக்கிறதாம். அதைத் தொடங்கிவிடுவார்களாம்.

அந்த கதையில் நடிக்க ஜீவாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஒரே கதையில் இரண்டு படங்கள்

தமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. ஒருவார இடைவெளியில் வெளிவந்த நான் படத்தின் கதையும், 18 வயது படத்தின் கதையும் ஒன்றுதான்.

அம்மா, காம இச்சை அதிகமாகி கணவனை விட்டு இன்னொரு ஆணைத் தேடுகிறவர். இதை கண்டுபிடித்துவிடும் கணவன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறான். அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் மனநோயாளியாகி, சைக்கோவாகி திரிகிறான்.

இதுதான் இரண்டு படத்தின் கதையும். நான் படத்தில் விஜய் ஆண்டனி அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். அதேபோல 18 வயது படத்தில் ஜான் அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார்.

கொல்லும் விதம்தான் வெவ்வேறு. இரு படத்திலுமே ஹீரோக்கள் மனநோயாளியாக இருந்தாலும் நல்லவர்கள்.

என்னதான் கொலை செய்தாலும் நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பி தான் விரும்பியபடி டாக்டராகிவிடுகிறார்.

18 வயது படத்தில் ஜானி தன் காதலியை கைபிடித்து விடுகிறார்.

இந்த கதை பஞ்சம் தொடருமா? நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் செய்த தில்லு முல்லு - கார்த்தி சொன்ன சுவாரஸ்ய தகவல்

"தில்லு முல்லு" படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசுகையில், ரஜினி சார் நடித்த "தில்லு முல்லு" ரிலீஸ் ஆனபோது நான் ஆயா கையை பிடித்து கொண்டு ஸ்கூலுக்கு போய்கிட்டிருந்தேன்.

அதனால படத்தை அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாம போச்சு. அதன்பிறகு யு.எஸ்.-ல படிச்சுகிட்டிருந்தப்போ லோன்லியா பீல் பண்றப்போவெல்லாம் டெய்லி ஒரு மணி நேரமாவது இப்படத்தை டி.வி.டி.யில் பார்க்காமல் தூங் போகமாட்டேன்.

அந்த அளவிற்கு அதில் தேங்காய் சீனிவாசனும், ரஜினிசாரும் ‌காமெடியில் பிச்சு உதறியிருப்பாங்க. அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாத வருத்தத்தை இந்த தில்லு முல்லு, சிவா நடிப்புல தீர்த்து வச்சிடுங்குறது என் நம்பிக்கை.

வாலி, எம்.எஸ்.வி., யுவன் கூட்டணியில் ஒரு புதிய காக்டெயில் மிக்ஸாக இருக்கும் இந்த "தில்லு முல்லுங்கறது என் எதிர்பார்ப்பு. அதற்காக இயக்குநர் பத்ரி, புது புரடியூசர் வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

மற்றபடி என்னோட சின்ன வயது தில்லு முல்லு என்று பெரிசா சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. ஏன்னா அவ்வளவு கட்டுப்பாடாக எங்களை வளர்த்துட்டாங்க...

எங்க போனாலும் சிவக்குமார் பையனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேள்வி வந்துடும். அந்த பயம் வேற, அதையும் மீறி நான் செய்த "தில்லு முல்லுன்னா நான் அடிக்கடி ஸ்கூலை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு பின்னாடி இருக்கிற பீச்சுல குளிச்சதுதான் என்று சுவாரஸ்யமாக பேசி சென்றார் நடிகர் கார்த்தி!

சிவாவுக்கு சம்பளமே கொடுக்க கூடாது - பார்த்திபன்

ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தில்லு முல்லு படம் இப்போது மீண்டும் ரீ-மேக் ஆகிறது. இதில் ரஜினி வேடத்தில் சிவாவும், அவருக்கு ஜோடியாக இஷா தல்வாரும் நடிக்கின்றனர். பத்ரி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று பேசினர். விழாவில் பார்த்திபனின் பேச்சு தான் மிகவும் ஹைலைட்டாக அமைந்தது.

அவர் பேசுகையில், நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கு ரீ-பிளேஸ்மெண்ட் இதுவரை இல்லாமல் இருந்தது. தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்த பாத்திரத்தை இன்று பிரகாஷ்ராஜ் ஏற்று நடிப்பது பாராட்டுதலுக்குரியது.

அவருக்கு சரியான ரீ-பிளேஸ்மெண்ட் பிரகாஷ்ராஜ்தான் இருக்கமுடியும். அதேமாதிரி சிவா, ரஜினி சார் கேரக்டரில் நினைத்து பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் "நச்" என்று இருக்கிறார்.

சிவனே பார்வதியை தள்ளி வைத்துவிட்டு இதுமாதிரி ஒரு நாயகி கிடைத்தால் ஒரு டூயட் பாடிவிட்டு வருவார் என்றால், நம் சிவா எம்மாத்திரம்...? இப்பட புரடியூசருக்கு என் தாழ்மையான ஒரு வேண்டுகோள்.

இந்தபடத்தில் சிவாவுக்கு சம்பளமே தர வேண்டாம். வெறும் பேட்டா மட்டும் போதும். அத்தனை அழகான நாயகியை அவருக்கு சம்பளமாக தந்துவிட்டீர்கள் அது போதும் என்று தன் பாணியில் போட்டு தாக்கினார்.

முன்னதாக வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் அனைவரையும் வரவேற்று பேசினார். பரதநாட்டியம், ஐ.ஐ.டி. மாணவர்களின் இசைக்கச்சேரி, வசந்தின் மேஜிக் ஷோ, அழகிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட சிறப்புகளுடன் தில்லு முல்லு படத்தொடக்க விழா ஏராளமான திரையுலக வி.வி.ஐ.பி.கள் புடைசூழ சிறப்பாக நடந்தேறியது!

அக்டோபரில் விஸ்வரூபம் ரிலீஸ்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். இதில் கதாநாயகியாக பூஜாகுமார் நடிக்கிறார்.

அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என்றும், சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன் மனதிலும் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக பதுங்கி இருந்த கதை என்பதால், ரசிகர்கள் மனதிலும் அது தங்கும் என்று கமல் நம்பிக்கையில் இருக்கிறார்.

மேலும் கமல் படம் என்றாலே பல புதிய அம்சங்கள் இருக்கும். இதனால் கமலின் விஸ்வரூபத்தைக் காண அவரது ரசிகர்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.

ஜெயித்த பணத்தை தோற்றவர்களுக்கு கொடுத்த பவர் ஸ்டார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியில் தான் ஜெயித்த பணத்தை தோல்வியடைந்த பெண்களுக்கு பரிசாகக் கொடுத்தார்.

நடிகை ரோஜா நடத்தும் கேம்ஷோ லக்கா கிக்கா. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்று பரிசினை பெற்றுச் செல்கின்றனர்.

கடந்த வார நிகழ்ச்சியில் திரைப்பட நடன பெண்மணிகள் செந்தாமரை, மைனா நாகு ஆகியோருடன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.

ஒவ்வொரு சுற்றிலும் பவர் ஸ்டாரின் கையே ஓங்கியது. ரூ.36,000 வரை போட்டியில் ஜெயித்தார் சீனிவாசன். போட்டியில் கலந்து கொண்ட பிற பங்கேற்பாளர்களுக்கு 4000, 7000 ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன.

இறுதியில் 36000 ரூபாய் ஜெயித்த சீனிவாசன் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தன்மையாக தன்னுடைய பரிசுப்பணத்தை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்த செந்தாமரை, மைனா நாகு ஆகியோருக்கு வழங்கி விட்டார் பவர் ஸ்டார்.

அக்னி நட்சத்திரத்தை ரீமேக் செய்யக்கூடாது

மணிரத்னம் இயக்கிய படம் அக்னி நட்சத்திரம். இதில் கார்த்திக், பிரபு இருவரும் நடித்திருந்தனர். ஒரு தந்தைக்கு பிறந்த இரு தாயின் பிள்ளைகளாக இருவரும் நடித்திருந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை ரீமிக்ஸ் செய்ய இருப்பதாகவும், இதில் கார்த்திக் மகன் கவுதமும், பிரபு மகன் விக்ரமும் நடிக்க இருப்பதாகவும் -கூறப்படுகிறது.

கவுதம் இப்போது மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு கும்கி படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அக்னி நட்சதிரம் படத்தை யாரும் ரீமிக்ஸ் செய்யக்கூடாது. அப்படிச் செய்தாலும் அதில் என் மகன் நடிக்க மாட்டான் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: மணிரத்னம் சார்கிட்ட என் மகனை ஒப்படைச்சிருக்கேன். அவனை எப்படி கொண்டு வரணுங்றத அவர் பார்த்துக்குவார். மற்றபடி கடல் படத்தோட கதையோ அதில் கவுதம் என்ன கேரக்டர் பண்றான்ங்றதோ எனக்குத் தெரியாது.

அக்னி நட்சத்திரம் ரீமேக் பற்றி பேச சிலபேர் ட்ரை பண்ணினாங்க. ஆனா நான் பேசல. காரணம் எந்தப் படத்தையும் ரீமேக் பண்றதில்ல எனக்க உடன்பாடில்ல. அதுவும் மணி சார் படத்தை யாருமே ரீமேக் பண்ணக்கூடாது.

அவரை விட சிறப்பா யாராலும் எடுத்துட முடியாது. ஆனா கெடுத்துட முடியும். நான் பண்ணினதையே என் மகனும் பண்றதுல எனக்கு உடன்பாடில்ல. இதுமாதிரிதான் அலைகள் ஒய்வதில்லை ரீமேக் பண்றோம்.

ராதா மகள் ஹீரோயின் உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நான் சாரி அது சரியா வராதுன்னு சொல்லிட்டேன்.

சில அற்புதமான விஷங்களை அப்படியே வைத்திருந்துதான் ரசிக்கணுமே தவிர அதை திரும்ப பண்றேன்னு கிளம்பக்கூடாது" என்கிறார் கார்த்திக்.

நயன்தாராவை அசர வைத்த அஜீத்

"பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்றத்தைப் பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது.

இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்துக்கும், இப்போதைய அஜீத்துக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதேசமயம், இன்னும், "ஸ்லிம்மாகி விட்டார்.

தொழில் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டவர்களால் தான், கதையின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலும் என்கிறார்.

திருமணம் செய்யும் எண்ணம் இல்லை - ஸ்ரேயா

எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அரை நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஸ்ரேயா, புதுப்பட வாய்ப்புக்காகவே அப்படி போஸ் கொடுத்ததாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார்.

புதுமுகங்களின் போட்டியை சமாளித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயன்று வரும் அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையாம்.

திருமணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ள ஸ்ரேயா, நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனக்கு 30 வயது தான் ஆகிறது.

அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.

ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30-35 வயதில்தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களைவிட நான் சிறியவள் தான். எனவே இன்னும் பல ஆண்டுகள் நடிப்பேன், என்றார்.

விஜய் ஆண்டனியின் ரெட்டை சவாரி

பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய, "நாக்கு முக்கா பாடலால் பிரபலமான இசையமைப்பாளர், விஜய் ஆண்டனிக்கு ஹீரோ ஆசை வந்து மண்டையக் குடையவே, தான் இதுவரை சம்பாதித்ததையும், நண்பர்கள் தந்ததையும் வைத்து தைரியமாக, "நான் படத்தை எடுத்து ரிலீசும் செய்துவிட்டார்.

இதில் அனுயா - ரூபா மஞ்சரி என, இரு அழகு தேவதைகள் இருந்தும், விஜய் ஆண்டனிக்கு, டூயட் பாட நோ சான்ஸ். காரணம், கதை அப்படி. "நான் படத்தைப் பார்த்த நண்பர்கள், அவரின் நடிப்பை மெச்சுகின்றனர்.

அதனால், ஹீரோ அவதாரத்தை தொடருவதென தீர்மானித்துவிட்டார் விஜய் ஆண்டனி. ஒரு பக்கம் இசை, இன்னொரு பக்கம், நடிப்பு என, ரெட்டைக்குதிரை சவாரிக்கு தயாராகிவிட்டார்.

விஜய் தந்த இன்ப அதிர்ச்சி

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நகரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.இந்த படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் திடீர் விஜயம் செய்தார்.


அவரது வருகையை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.அப்போது என்னைப் பார்த்ததும் ஏன் வேலை எல்லாம் அப்படியே நிற்கிறது?


நடக்கட்டும், நான் வேடிக்கை பார்க்கி‌றேன் என்று இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் இயல்பாக சொல்லிவிட்டு ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டார் விஜய்.


இயக்குனர் சினேகா பிரிட்டோவை அருகில் அழைத்து, ஷாட் எடுங்கள் என்று ஊக்கப்படுத்திய விஜய், நடன இயக்குனர் ராபர்ட்டைப் பார்த்து, "ஸ்டெப் சொல்லிக் கொடுங்கள்" என்றார். நிமிர்ந்து நில், துணிந்து செல் என்ற பாடல் ஒலிக்க நடன அசைவுகளைப் பார்த்த விஜய், நடன இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார்.


அப்போது, படத் தொகுப்பாளர் ராஜேஷ், அதுவரை எடுத்த காட்சிகளை லாப் டாப்பில் எடிட் பண்ணிக்காட்டி தன் பங்குக்கு பாராட்டுகளை வாங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் நானும் உள்ளேன் ஐயா என்று ஃபிரேமுக்குள் நுழைந்த ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாருக்கு பாராட்டு கிடைத்தது.


அது சரி, இது என்ன? பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பெரி‌ய செட் என்று எதுவும் போடவில்லையே? என்று வியப்புமாக இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் கேள்வி எழுப்பினார் விஜய்.


"அதுதான் எங்கள் கலை இயக்குனர் வனராஜின் கைவண்ணம். ‌செட் போடாதது போல் இயற்கையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் என்றார் இயக்குனர் சினேகா பிரிட்டோ.


மேலும், "தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, லேசர் ஒளியை பயன்படுத்தி நடனக்காட்சியை எடுக்கிறோம். அது மட்டுமின்றி, 40க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கதாநாயகி பிந்து மாதவியும் கதாநாயகன் தருண்குமாரும் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக 20க்கும் மேற்பட்ட மும்பை நடனக் கலைஞர்களை வரவழைத்திருக்கிறோம்.


இந்த நடனக் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று சினேகா பிரிட்டோ கூறியதைக் கேட்டதும், தனக்கே உரிய பாணியில் புன்னகையை பரிசாக வழங்கினார் இளைய தளபதி.


"சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தை எஸ்தெல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், விமலா ராணி தயாரிக்கின்றனர். இந்த படம் ஒரு வெற்றிப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு டாக்டர்

சினிமாவில் அவ்வப்போது டாக்டர்கள் வந்து மிரட்டிவிட்டுச் செல்வார்கள். திருச்சியிலிருந்து டாக்டர் ராம் என்பவர் நடிக்க வந்தார். காது மூக்கு தொண்டை சிகிச்சைக்கு இந்திய அளவில் புகழ் பெற்றவர்.

ஒருசில உப்புமா படங்களில் நடித்தவர் சொந்தமாக பிரம்மதேவா என்ற படத்தை தயாரித்து நடித்தார். அது அட்டர் ஃபிளாப்பாக மீண்டும் டாக்டர் தொழிலுக்கே திரும்பி விட்டார். அடுத்து அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாசன் கோடிகளோடு புறப்பட்டு வந்தார்.

நடிப்பு, இயக்கம், கதை, வசனம் என்று ஏகத்துக்கு பயமுறுத்தியதோடு பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் வைத்துக்கொண்டு சினிமாவில் நிஜ காமெடி பீசாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்போது டாக்டர்.பி.சரவணன் என்பவர் மதுரையிலிருந்து வந்திருக்கிறார். இவர் எம்.டி படித்தவர். மதுரையில் ஏழைகளுக்கு இலசவ மருத்தும் செய்கிறாராம். சரவணா மருத்துவமனை என்ற பெரிய மருத்துவமனை கட்டியிருக்கிறாராம்.

நிறைய தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறாராம். இவரும் அகிலன் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து அதில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். காரணம் டாக்டர் சரவணன் மதுரை பைனான்சியர் அன்பு செழியனுக்கு நெருங்கிய நண்பராம். அவரின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் எல்லோரும் வந்ததாக அவர்களே மேடையில் சொன்னார்கள்.

அதோடு முன்பின் அறிந்திராத டாக்டரைப் பற்றி வானளாவ புகழ்ந்தார்கள். மதுரையிலிருந்து வந்த டாக்டர்களின் ஆதரவாளர்கள், விழாவின் இறுதிவரை அரங்கம் அதிர வாழ்க கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நடிகை நமீதாவும், சோனியா அகர்வாலும் கவர்ச்சியாக வந்து விழாவுக்கு கலர் சேர்த்தார்கள்.

அக்குபன்ஞர் டாக்டருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்ததது எப்படி?, மதுரை டாக்டர் சமூக சேவகர் என்பது உண்மையால் சினிமா எடுத்திருக்கும் கோடிகளை வைத்து இன்னொரு மருத்துவமனை கட்டியிருக்கலாமே?,

இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டரால் கோடிகளை செலவு செய்து எப்படி படம் தயாரிக்க முடிகிறது? இவையெல்லாம் ரசிகனுக்கு பதில் கிடைக்காத கேள்விகள்.

'சமர்' தலைப்பை பயன்படுத்தக்கூடாது - விஷால் படத்தை எதிர்த்து வழக்கு

விஷால், திரிஷா ஜோடியாக நடிக்கும் படத்துக் ‘சமரன்’ என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்பு தற்போது ‘சமர்’ என மாற்றப்பட்டு உள்ளது. திரு இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷாவை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தை டைரக்டு செய்தவர்.

‘சமரன்’ என்பதைவிட ‘சமர்’ பெயர் எளிதாக மக்களை சென்றடையும் என்பதால் தலைப்பை மாற்றி உள்ளோம் என்று அவர் கூறினார். ஆனால் விஷால் படத்துக்கு ‘சமர்’ தலைப்பை பயன்படுத்தக்கூடாது என அக்வஸ்ரே பட நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் மதுரை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

‘சமர்’ தலைப்பை கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை தயாரிப்பாளர் சங்க சில்டில் பதிவு செய்தோம். ‘சமர்’ பெயரில் தற்போது புதுமுகங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். சக்திமோகன் இப்படத்தை இயக்குகிறார்.

விஷால் படத்துக்கு ‘சமர்’ தலைப்பு வைத்துள்ளதாக விளம்பரங்கள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியானோம். ‘சமர்’ தலைப்பை விஷால் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர் சார்பில் வக்கீல் ஜான்ஸ்டீபன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுமக்களிடம் அடி வாங்கிய ஹீரோ

சித்திரைத் திங்கள் என்ற பெயரிட் உருவாகி வரும் படத்தின் ஹீரோவை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலுக்கு நூறு வருடம் ஆயுள் என்றால், காமத்துக்கு ஐந்தே நிமிடம் என்ற கருவை மையமாக வைத்து, சித்திரைத்திங்கள் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஸ்வந்த், நக்கீரன் என்ற இரண்டு கதாநாயகர்களும், ஸ்ரீரேகா, ஸ்வாதி என்ற இரண்டு கதாநாயகிகளும் அறிமுகம் ஆகிறார்கள்.

கதை - திரைக்கதை - வசனம் எழுதி படத்தை தயாரிப்பதுடன், இயக்கவும் செய்கிறார் டைரக்டர் ஆர்.மாணிக்கம். சரத்பிரியதேவ் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது.

படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது தூரத்தில் ஒரு மயில் தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. உடனே கதாநாயகி ஸ்ரீரேகா காரை நிறுத்தி அந்த மயிலை நோக்கி நடந்தார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த கதாநாயகன் நக்கீரன் பின் தொடர்ந்தார்.

அதை தவறாக புரிந்து கொண்ட கிராமத்து மக்கள், ஹீரோ நக்கீரனை அடித்து உதைக்க தொடங்கினார்கள். ஓடிவந்த படக்குழுவினர், மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி நக்கீரனை மீட்டனர். இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் வெளிவருகிறது சிவாஜி நடித்த தெலுங்கு படம்

கர்ணன் படம் மறு திரையீட்டில் பெரிய வரவேற்பை பெற்றதும், சினிமாக்காரர்களுக்கு என்ன செய்வது, ஏதுசெய்வது என்றே தெரியவில்லை. சிலர் சிவாஜியின் பழைய ஹிட் படங்களை தூசு தட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்பன், திரிசூலம், தங்கப்பதக்கம், கவுரம், புதிய பறவை என சிவாஜி படங்களை டிஜிட்டல் படுத்தி வெளியிட பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கும் ஒரு படிமேலே போய்விட்டார்கள் தெலுங்கு சினிமாகாரர்கள். 1987ம் ஆண்டு சிவாஜி நடித்த தெலுங்கு படம் விசுவநாத நாயகுடு, இது 16ம் நூற்றாண்டில் நடந்த சரித்திரத்தை மையமாக கொண்டது.

புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் விசுநாத நாயகுடு. தமிழ்நாட்டு ராஜராஜசோழன் போன்று அங்கு புகழ் பெற்றவர். இவரது சரித்திரப் படம்தான் இது.

இதில் விசுவநாதநாயுகுடுவாக அப்போது தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகவும், அரசவை நடனக்காரியாகவும் ஜெயப்பிரதா நடிதிருந்தார். சிவாஜி, விசுநாதநாயுடுகுவின் தந்தை நாகம்ம நாயக்கராக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. படத்தை தாசரி நாராயணராவ் இயக்கி இருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

அப்போது இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட யாரும் முன்வரவில்லை. இப்போது கர்ணன் காட்டிய வழியில் தாசர நாராயணராவின் உறவினர்கள் பத்ரகாளி, பெத்தபாபு ஆகியோர் தங்களின் குருபிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இதை டப் செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு படத்தில் சிவாஜியின் கேரக்டர் பெயரான நாகம்ம நாயக்கர் என்று வைத்திருக்கிறார்கள்.

எப்போதோ செய்திருக்க வேண்டியதை இப்போதாவது செய்ய முன்வந்ததற்கு வாழ்த்து சொல்லலாம்.

ஆனால் டப்பிங்கிற்கு அந்த சிம்மக்குரல் வேண்டுமே அதற்கென்ன செய்யப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் தொடரும் தலைப்பு சண்டை

வேறெந்த மொழி சினிமாவிலும் நடக்காத கூத்து ஒன்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. அது படத்து தலைப்புக்கான சண்டை.


ஒரு படம் எடுக்க வேண்டுமானாலும் கம்பெனி பெயரையும், படத்தின் பெயரையும், தயாரிப்பாளர் சங்கத்திலோ, தயாரிப்பாளர் கில்டிலோ அல்லது சேம்பரிலோ பதிவு செய்ய வேண்டும். இந்த மூன்று சங்கங்களும் தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஒரே தலைப்பு இரண்டு இடங்களில் பதிவாகமால் பார்த்துக் கொள்ளும்.


இதுதான் நடைமுறை. ஆனால் கில்டிலும், சேம்பரிலும் தலைப்பு பதிவு செய்ய கட்டணம் குறைவு என்பதால் சிலர் சகட்டுமேனிக்கு தலைப்புகளை பதிவு செய்து வைப்பார்கள். ஆனால் படம் எடுக்க மாட்டார்கள். ஆண்டுதோறும் பணம் கட்டி அதனை மறுபதிவு செய்து விடுவார்கள்.


ஒரு பெரிய கம்பெனி படம் எடுக்க ஒரு தலைப்பை வைத்தால். அந்த தலைப்பை ஒரு உப்புமாக கம்பெனி பதிவு செய்து வைத்திருக்கும். அப்போது அந்த கம்பெனிக்கு ஒரு தொகையை கொடுத்து விட்டு தலைப்பை வாங்கிக் கொள்வார்கள்.


இந்த மாதிரியான தலைப்பு வியாபாரத்துக்காகத்தான் சிலர் தலைப்பை பதிவு செய்தே வைக்கிறார்கள். ஏதாவது ஒரு சங்கத்தில்தான் தலைப்பை பதிவு செய்ய வேண்டும்.


பதிவு செய்த தலைப்பைக் கொண்டு ஒரு வருடத்துக்குள் படம் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தலைப்பு செல்லாது என சில கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் இந்த தலைப்பு பிரச்சினை இருக்காது.


சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். மாதக் கணக்கில் ரூம்போட்டு யோசித்து, டிஷ்கசன் நடத்தி திரைக்கதை எழுதும் இயக்குனர்கள் ஏனோ இந்த தலைப்பில் மட்டும் தவித்துப் போகிறார்கள். இப்போது கூட விஜய் நடிக்கும் ஒரு படத்துக்கு துப்பாக்கி என்று பெயர்.


ஆனால் இன்னொரு கம்பனி கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறது. பிரச்சினை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. விஷால் நடிக்கும் சமரன் படத்தின் பெயரை இன்னொருவர் வைத்திருக்கிறார்.


இதனால் விஷால் படத்துக்கு சமர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். விக்ரம் நடிக்கும் படம் தாண்டவம். இன்னொருவர் இதே தலைப்பை பதிவு செய்திருக்கிறார். இது சம்பந்தமாக பஞ்சாயத்து பேசி விக்ரம் படத்தின் பெயரை சிவதாண்டவம் என்று மாற்றிக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் மாற்றவில்லை என்று எதிர்தரப்பு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறது.


இது பெரிய படங்களுக்கான பிரச்சினை. சிறிய படங்களுக்கு இந்த பிரச்சினை இன்னும் அதிகம். "செம்மொழியான தமிழ் மொழியில் தலைப்புக்கா பஞ்சம். ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள். படத்தின் பெயருக்காகவா படம் ஒடப்போகிறது.


கதையை நன்றாக இருந்து தலைப்கை கழுதைன்னு இருதாலும் படம் ஓடும். இதை புரிஞ்சுக்கிட்டு தலைப்புக்கு சண்டை போடாம இருந்தா சினிமாவுக்கு நல்லது" என்கிறார். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.

மலையாளத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு, அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார்.

பல இயக்குனர்கள் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டும் இவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது மலையாளப் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

கேரளாவில் நடிகர் பிஜூ மேனனுடன் இணைந்து தயாரித்து, மலையாள படமொன்றை இயக்குகிறார் ஷஜூன் கரியால்.

5 நண்பர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர்.

ஆகையால், இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவது போல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய்யிடம் கதையே சொல்லாத கவுதம்மேனன்

"துப்பாக்கி படத்தில் நடித்து வரும் விஜயும், "நீ தானே என் பொன் வசந்தம் படத்தை இயக்கும் கவுதம்மேனனும், அடுத்து, "யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் இணைவர் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்தப் படமே, நிறுத்தப்பட்டு விட்டதாக செய்தி பரவி உள்ளது.

விஜய் தரப்பினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன், கதாநாயகனிடம், இயக்குனர் கதை சொல்ல வேண்டும்.

கதை பிடித்து, கதாநாயகன் சம்மதம் சொன்ன பிறகு தான், அப்படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்படும்.

ஆனால், கவுதம்மேனன் இதுவரை, விஜயிடம் கதையே சொல்லவில்லை.

முழு கதையையும் அவர் சொல்லி, அதன்பின் விஜய் சொல்லும் முடிவை பொறுத்து தான், அந்தப் படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்பது தெரியும், என்கின்றனர்.

3டி படத்தில் நயன்தாரா

அடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார்.

தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், "அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம், "3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

"மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா... காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.

தாண்டவம் படத்திற்கு திடீர் சிக்கல்

விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தாண்டவம்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அதில் தாண்டவம் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ரூ.1.5 கோடி செலவிட்டு படமும் எடுத்து முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த படத்தின் நாயகனாக புதுமுகம் பாலு, நாயகியாக சரண்யாமோகன் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

படத்தின் சூட்டிங்கை முடித்து விட்ட நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தாண்டவம் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

குத்துவிளக்கு விற்கும் தனுஷ்

"களவாணி, வாகை சூடவா பட இயக்குனர் சற்குணம், அடுத்து இயக்கும் படம், "சொட்டவாளக்குட்டி! "பொல்லாதவன், "ஆடுகளம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தில்; கும்பகோணத்தில், குத்துவிளக்கு செய்து விற்கும் வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இவருக்கும், பல் டாக்டருக்கு படிக்கும் வனரோஜா என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை தான், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்கிறார் சற்குணம்.

இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, நாசர், சாயாஜி ஷிண்டே, சூரி, சிங்கம்புலி, ஸ்ரீமன், சத்யன் என, பலர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், கதாநாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.

சிவாஜி 3D படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ்

ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான படம் ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கி இருந்தார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் எட்டியுள்ளதாக கூறப்பட்டது.

‘சிவாஜி’ படத்தை தற்போது ‘3டி’ தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கின்றன. கடந்த சில மாதங்களாக ‘சிவாஜி’யை 3டி-யில் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

சமீபத்தில் ரஜினிக்கு ‘3டி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார்கள். படத்தை பார்த்த ரஜினி ஆச்சரியப்பட்டு பாராட்டினாராம்.

அடுத்த மாதம் (செப்டம்பர்) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையில் ‘சிவாஜி 3டி’ பட டிரெய்லர் வெளியிட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடக்கிறது.

இதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் பங்கேற்கின்றனர்.

‘சிவாஜி 3டி’ படத்தில் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மக்களை ஈர்க்கும். இதுவரை இல்லாத புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு இப்படம் தரும் என்று ஏ.வி.எம். நிறுவனம் அறிவித்து உள்ளது.

நயன்தாரவை துரத்தும் சிம்பு

நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகை. அவரைச் சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்தாலும் கோடிகளை கொட்டி தங்கள் படத்தில் அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

ஹீரோக்களும் வெயிட்டிங். சிம்பு தமிழ்நாட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும் ஹீரோ. நயன்தாரா நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா, இரண்டைத் தவிர சிம்பு படம் எதுவும் பெரிய ஹிட்டாகவில்லை.

இப்படி சினிமாவின் தர வரிசைப் பட்டியலில் பெரிய இடைவெளி கொண்ட இருவரும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். வல்லவன் படத்தின்போதுதான் இவர்கள் காதல் கொண்டார்கள். அப்போது இருவருமே சினிமாவில் ஒரே தரவரிசையில்தான் இருந்தார்கள்.

நயன்தாரா யார் மீதாவது அன்பு வைத்தால் அதில் அதி தீவிரமாக இருப்பார். உயிருக்கு உயிராக நேசிப்பார். அதற்கு ஒரு சிறு சேதாரம் வந்தால்கூட அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. சிம்பு இந்த கேரக்டருக்கு நேர் எதிர்மறை.

எதையுமே ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்பவர். அதனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் பிரிந்தார்கள். பிரிவு கூட நயன்தாராவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்களின் அந்தரங்க உறவுகள் படமாக வெளிவந்தபோதும், அதை வெளியிட்டவரே சிம்புதான் என்ற தகவல் பரவியபோதும் அவர் ரொம்பவே அப்சட் ஆகிவிட்டார். இனி தன் வாழ்நாளில் சிம்புவுக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்ற முடிவோடு தன் பயணத்தை தொடர்ந்தார்.

நயன்தாராவின் அதீத அன்பு அடுத்து பிரபுதேவாவின் பக்கம் பாய்ந்தது. பிரபுதேவாவின் அழகிலோ, அவரிடம் இருக்கும் செல்வத்திலோ அவர் மயங்கவில்லை. காரணம் அவரைவிட அழகானவர்கள், பணக்காரர்கள் நயன்தாராவின் பார்வைக்கே தவம் கிடக்கிறார்கள்.

பிரபுதேவா மகனின் மரணம் அவரைப்போலவே நயன்தாராவையும் பாதித்தது. அந்த பாதிப்புக்கு பரிகாரம் சொன்னவர் பாசத்தையும் சேர்த்து கொடுக்க அதுவே காதலானது. பிரபுதேவா தனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் பெயரை தன் கையில் டாட்டூ குத்திக் கொள்ளும் அளவுக்குச் சென்றார்.

இயற்கையிலேயே குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட பிரபு தேவாவினால் நயன்தாராவிற்காக தன் மனைவியை மட்டும்தான் தியாகம் செய்ய முடிந்தது. குழந்தைகளை விட்டுப் பிரிய முடியவில்லை. அன்பை பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத நயன்தாராவுக்கு இது சரியாக வரவில்லை. அவரிடமிருந்தும் பிரிந்தார்.

சிம்புவை விட்டு நயன்தாரா பிரிந்த பிறகு அவர் மார்க்கெட் இழந்து சாதாரண நடிகையாகிவிட்டிருந்தாலோ, அல்லது சினிமாவை விட்டு விலகி இருந்தாலோ நயன்தாரா என்ற ஒருவரை காதலித்ததையே சிம்பு வசதியாக மறந்து விட்டிருப்பார்.

ஆனால் பிரிவுக்கு பிறகான நயன்தாராவின் வளர்ச்சி அவரை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. அதிர்ச்சியடைய வைத்தது. நயனை தவறவிட்டுவிட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால் மீடியாக்களிலும், தனிப்பட்ட நண்பர்களிடமும், ஏதாவது ஒரு வகையில் நயன்தாராவை குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் எங்கிருந்தாலும் வாழ்க, அவரைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும், திருமணம் நடக்கட்டும் பார்க்கலாம் அவருடன் நடிக்க தயார், இப்படி ஏதாவது சொல்லி மீடியாக்கள் தன்னையும், நயனையும் சேர்த்து நினைக்க வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் சிம்பு பற்றி நயன்தாரா எந்த இடத்திலும் பேசவில்லை. அப்படி ஒரு சில இடங்களில் மீடியாக்கள் பேச வைக்க முற்பட்டபோதும் அது முடிந்து போன கதை என்று மட்டும் சொன்னார்.

இப்போது நயன்தாரா, பிரபுதேவாவை விட்டு விலகிய நிலையில் தனது நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் சிம்பு. அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் வாலிண்டரி அட்டனென்ஸ் கொடுப்பது. அவர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்வது. அல்லது தானே பார்ட்டி கொடுத்து அதற்கு நண்பர்கள் மூலம் நயனை வரவழைப்பது என்று தனது காய்களை நகர்த்தினார்.

அப்படி நடந்த ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாக ஹாய் சொல்லியிருக்கிறார். தயாராக நின்றிருந்த போட்டோகிராபர் அதனை படமெடுத்திருக்கிறார். இவ்வளவுதான் நடந்தது.

பத்திரிகையாளர் கலந்து கொள்ளாத, பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பார்ட்டியில் எடுத்த புகைப்படம் பத்திரிகைக்கு எப்படி வந்தது. ஆனால் வந்துவிட்டது. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்று மீடியாக்கள் இதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நாளைக்கு சிம்புவும், நயன்தாராவும் இணையலாம், திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி நடந்தால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று நயன் முடிவு செய்துவிட்டார் என்று பொருள்.

துப்பாக்கி திரைப்படத்தை கைப்பற்றியது விஜய் தொலைக்காட்சி

கோச்சடையான், விஸ்வரூபம் திரைப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துப்பாக்கி. விஜய் நடிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

முதன் முறையாக இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பு, ஒரு புறம் பிரச்னையாக இருந்தாலும் படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை பெருந்தொகை கொடுத்து விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயின் முந்தைய படமான நண்பன் திரைப்படத்தையும் விஜய் தொலைக்காட்சி ரூ.12 கோடி கொடுத்து பெற்றிருந்தது. தற்போது அந்த தொகையை விட பெருந்தொகை கொடுத்து துப்பாக்கி படத்தை கைப்பற்றியுள்ளது.

வெளிவர முடியாமல் தவிக்கும் கரண் படங்கள்

வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த கரண், கொக்கி படத்தின் மூலம் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். அந்தப் படம் வெற்றி பெறவே தொடர்ந்து ஹீரோவாக வலம் வர ஆரம்பித்தார்.

அடுத்து அவர் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றி பெற மார்க்கெட் எகிறியது. குணசித்திர வேடங்களில் நடித்து வந்த காலத்தில் நான்கு லட்சம், 5லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கரனின் சம்பளம் ஹீரோவான பிறகு 80 லட்சம் வரை உயர்ந்தது.

ஒரு கோடியாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது கருப்பசாமி குத்தகைதாரர் படத்துக்கு பிறகு வெளிவந்த தி நகர், மலையன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சரியாக போகாததால் கரணின் ஹீரோ மார்க்கெட் சரிந்தது. கரண் பரபரப்பாக இருந்தபோது வாய்ப்பு வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டு நடித்தார். அப்படி தயாரான படங்கள்தான் கந்தா, சூரன்.

இப்போது கரண் மார்க்கெட் சரியில்லாத நிலையில் இரண்டு படங்களையும் வாங்க ஆளில்லை. கந்தா படத்தை தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட நினைத்தார்.

அதற்கு முன்பு அவர் பெற்ற கடன்கள் படத்தை வெளிவரவிடாமல் தடுத்தன. இப்போது சூரன் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் வாங்குவதற்கு யாரும் முன்வராததால் அதுவும் கிடப்பில் கிடக்கிறது. இதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத கரண் அடுத்த படத்துக்கு கதை கேட்பதில் பிசியாக இருக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...