தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் மோதல்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு துணை தலைவர் டி.சிவா ஆகியோர் எஸ்.ஏ.சந்திரசேகர் அணியிலும், துணை தலைவர் சத்யஜோதி தியாகராஜன் செயலாளர் முரளிதரன் இன்னொரு அணியிலுமாக இருக்கிறார்கள்.


முக்கிய தயாரிப்பாளரான கே.ஆர் தலைமையில் இந்த அணியினர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அவருக்கு எதிராக அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைத்து சங்கத்தை கைப்பற்றி நிர்வாகம் செய்ய ஆரம்பித்தனர்.


இதை எதிர்த்து எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதி மன்றத்துக்குச் சென்றார். வழக்கை விசாரித்த நீதி மன்றம். அட்ஹாக் கமிட்டி செல்லாது என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனால் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சங்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில் எஸ்.ஏ.சிக்கு எதிர் அணியினர் மீண்டும் கொடிபிடிக்கத் தொடங்கி உள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதி மாலை சங்கத்தில் கூடிய எதிர்ப்பு அணியினர் பெப்சி அமைப்புடன் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை முடிக்கவில்லை, சங்கத்தின் உதவிகள் பாரபட்சத்துடன் வழங்கப்படுகிறது,


வரசெலவு கணக்குகள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு ஆதராக 212 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.


இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் கூறும்போது. "சங்கத்தின் பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சங்கத்தில் கடந்த காலத்தில் ஏராளமான போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அவற்றை கண்டறிந்து வருகிறோம். இதுவரை 120 போலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அதுபற்றி முறையாக அறிவிக்க இருக்கிறோம். அந்த போலி உறுப்பினர்கள்தான் இப்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பிரச்சினையை கிளப்புகிறார்கள்.


அவர்கள் அமைதியாக இருக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம்" என்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகார மோதல் எப்போதுதான் முடிவுக்கு வருமோ என்பதுதான் சங்க உறுப்பினர்களின் கவலையாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...