விஜய் தந்த இன்ப அதிர்ச்சி

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நகரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.இந்த படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் திடீர் விஜயம் செய்தார்.


அவரது வருகையை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.அப்போது என்னைப் பார்த்ததும் ஏன் வேலை எல்லாம் அப்படியே நிற்கிறது?


நடக்கட்டும், நான் வேடிக்கை பார்க்கி‌றேன் என்று இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் இயல்பாக சொல்லிவிட்டு ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டார் விஜய்.


இயக்குனர் சினேகா பிரிட்டோவை அருகில் அழைத்து, ஷாட் எடுங்கள் என்று ஊக்கப்படுத்திய விஜய், நடன இயக்குனர் ராபர்ட்டைப் பார்த்து, "ஸ்டெப் சொல்லிக் கொடுங்கள்" என்றார். நிமிர்ந்து நில், துணிந்து செல் என்ற பாடல் ஒலிக்க நடன அசைவுகளைப் பார்த்த விஜய், நடன இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார்.


அப்போது, படத் தொகுப்பாளர் ராஜேஷ், அதுவரை எடுத்த காட்சிகளை லாப் டாப்பில் எடிட் பண்ணிக்காட்டி தன் பங்குக்கு பாராட்டுகளை வாங்கிக் கொண்டார். அந்த நேரத்தில் நானும் உள்ளேன் ஐயா என்று ஃபிரேமுக்குள் நுழைந்த ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாருக்கு பாராட்டு கிடைத்தது.


அது சரி, இது என்ன? பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பெரி‌ய செட் என்று எதுவும் போடவில்லையே? என்று வியப்புமாக இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் கேள்வி எழுப்பினார் விஜய்.


"அதுதான் எங்கள் கலை இயக்குனர் வனராஜின் கைவண்ணம். ‌செட் போடாதது போல் இயற்கையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் என்றார் இயக்குனர் சினேகா பிரிட்டோ.


மேலும், "தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, லேசர் ஒளியை பயன்படுத்தி நடனக்காட்சியை எடுக்கிறோம். அது மட்டுமின்றி, 40க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கதாநாயகி பிந்து மாதவியும் கதாநாயகன் தருண்குமாரும் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக 20க்கும் மேற்பட்ட மும்பை நடனக் கலைஞர்களை வரவழைத்திருக்கிறோம்.


இந்த நடனக் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று சினேகா பிரிட்டோ கூறியதைக் கேட்டதும், தனக்கே உரிய பாணியில் புன்னகையை பரிசாக வழங்கினார் இளைய தளபதி.


"சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தை எஸ்தெல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், விமலா ராணி தயாரிக்கின்றனர். இந்த படம் ஒரு வெற்றிப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் வேகமாக வளர்ந்து வருகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...