சந்தானம், உதயநிதி ஸ்டாலின் மீது மோசடி புகார்

நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த ஐஸ் கம்பெனி அதிபர் ரவி கிஷன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவி கிஷன். இவர் ‌சொந்தமாக ஏஞ்சல் என்ற பெயரில் ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். ரவிகிஷனுக்கு விருகம்பாக்கம் அருகே 2 கிரண்வுட் இடத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதனை வாங்க நடிகர் சந்தானம் முயற்சி செய்துள்ளார்.

பங்களாவின் மதிப்பு ரூ.2.25 கோடி. ஆனால் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் உதவியோடு ரூ1.85 கோடிக்கு விலை பேசி, கடந்த 2010-ம் ஆண்டு பத்திரபதிவும் நடந்தது. பத்திரபதிவின் போது சந்தானம் ரூ.1.75 கோடி தான் ரவி கிஷனிடம் கொடுத்துள்ளார்.

மீதி ரூ.10 லட்சத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இன்று வரை பணத்தை சந்தானம் தரவில்லை. இடையில் காசோலையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

இதனையடுத்து சந்தானத்திடம் பணம் கேட்டுள்ளார் ரவி கிஷன். ஆனால் அவர் பணம் தர மறுக்கிறார். மேலும் பணத்தை கேட்டால் உதயநிதி துணையோடு அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்துள்ளார்.

இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சந்தானம் மற்றும் அவருக்கு துணையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கொடுத்திருக்கிறார் ரவி கிஷன்.

அதில் பணத்தையும் தராமல், அடியாட்கள் வைத்து தன்னையும், தனது குடும்பத்தையும் மிரட்டுவதாகவும், தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...