ரஜினிகாந்த் முதன்முறையாக கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பது ரொம்பவே சவாலாக இருப்பதாக லண்டனில் ரஜினி பேட்டியளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், தனது கணவர் தனுஷை வைத்து "3" என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதையடுத்து ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யாவும் இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அதுவும் முதல்படமே தனது அப்பா ரஜினியை வைத்து இயக்கி வருகிறார்.
கோச்சடையான் என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து வருகிறார். கோச்சடையான் படம் முற்றிலும் வித்தியாசமான முறையில், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்திற்காக லண்டனில் முகாமிட்டுள்ளனர் கோச்சடையான் படக்குழுவினர்.
இப்படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில் என்னுடைய முதல்படம் போலவே கோச்சடையானிலும் நடித்து வருகிறேன். சிவாஜி, எந்திரன் படங்களுக்கு பிறகு என்னுடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
எனவே அவர்களின் ரசனையை போக்கும் வகையில் நான் நடித்து வருகிறேன். மேலும் எனக்கு வயதும் ஆகிக்கொண்டே போகிறது. எனவே அதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு கதையையும், கேரக்டரையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
கோச்சடையான் படம் போன்று ஒரு படம் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் கோச்சடையான் பூர்த்தி செய்யும். சாதாரண படங்களில் நடிப்பதற்கும், அனிமேஷன் படங்களில் நடிப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது.
அதில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல, அந்த தொழில்நுட்பத்திற்கும் ஏற்றவாறு மிக கவனமாக நடிக்க வேண்டும். அனிமேஷன் படத்தில் நடிக்க ரொம்பவே கஷ்டப்படுகிறேன். இருந்தாலும் அதை மேனேஜ் பண்ணி நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment