என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்


நண்பன்' படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு 'எஸ்' ஆன அவரது அம்மா! 

அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே 'குடி'ப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். 

ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார். 

அதேநேரம் அவரது அலுவலகத்திற்கு இவரது அஸிஸ்டண்டாக வரும் த்ரிஷா, இவரை ஒரு தலையாக காதலிக்கிறார். 

ஏற்கனவே விளம்பர மாடல் ஆண்ட்ரியா, ஜீவாவிடம் அவரது காதலை முத்தமாக வெளிப்படுத்தி மொத்தமாக வாங்கிகட்டிக் கொண்டது தெரியும் என்பதால் த்ரிஷா, தன் காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வளைய வருகிறார். ஜீவாவிற்கு, த்ரிஷாவின் காதல் தெரிந்ததா? ஜீவாவின் பெண்கள் மீதான கோபம் குறைந்ததா? த்ரிஷா மீது காதல் மலர்ந்ததா.? இல்லையா? என்பது மீதிக்கதை!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி 'என்றென்றும் புன்னகை' படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, 'நச்' என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. 

இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும், ஜீவாவின் நடிப்பிற்கு கட்டியம் கூற!

பேபி சந்தானத்தின் காமெடி சரவெடிகள் தான் 'என்றென்றும் புன்னகை' படத்தின் ஹைலைட்! குடித்துவிட்டு வந்து குடிக்கவில்லை... என கோணலாக சாய்ந்தபடி பொண்டாட்டி முன் அவர் அடிக்கும் லூட்டியிலாகட்டும், 'எங்க வீட்டு நாய் செத்து போனதை எங்கம்மாவால ஜீரணிக்கவே முடியலை...' என்று மனைவி சொல்லி முடிப்பதற்குள் உங்கம்மாவை யாரு? செத்துபோன நாயை சாப்பிட சொன்னது? எனக்கேட்டு கலாய்ப்பதிலாகட்டும், கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி, வெளியில இருக்கிறவனுக்கு எப்படா உள்ளே போகலாங்கற மாதிரி இருக்கும், உள்ளே இருக்கிறவனுக்கு எப்போ வெளியில வருவோம் என்பது மாதிரி இருக்கும்! அதுதான் கல்யாணம் என்று போகிற போக்கில் ஜோக்கடிபதில் ஆகட்டும், சந்தானத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்!

ஜீவா, சந்தானம் மாதிரி வினய்யும் மற்ற படங்களைக்காட்டிலும் இதில தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். த்ரிஷா, ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகள் எனினும் த்ரிஷாவின் நடிப்பும், ஜொளிப்பும் ஒரு சுத்து தூக்கல்!

ஜெகன், நாசர் உள்ளிட்டவர்களும் 'பலே' சொல்லுமளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் எல்லோரையும் கலாய்க்கும் சந்தானத்திற்கே ஜெகன் 'கடுக்கன்' கொடுப்பதும், நியூசிலாந்து பார்ட்டியில் 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் அண்ட் சன்னி' என தங்கள் பாஸை கலாய்ப்பதிலும் ஜெகன் நிற்கிறார்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசை, ஆர்.மதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ஐ.அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் 'ஹே' படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!

ஆகமொத்தத்தில் 'என்றென்றும் புன்னகை' - 'வெடிச்சிரிப்பு' - 'காதல் கவிதை'!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...