மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்


யானைக்கூட்டத்தில் ஒற்றை யானைக்கு மதம் பிடித்தது என்றால் அது கூட்டத்தை விட்டு வெளியில் வந்து எதிர்படும் எல்லாவற்றையும் எப்படி துவம்சம் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். 

அப்படிப்பட்ட யானைகள் பல, ஒரே இடத்தில் ஒன்று கூடி ஒருத்தரை பழிவாங்க காத்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கதைதான் "மதயானைக்கூட்டம் மொத்தப்படமும்! 

"தேவர் மகன் டைப் பங்காளி பாகஸ்தன் பகைதான் படம் முழுக்க என்றாலும் கள்ளர், தேவர் இனத்து பெருமையை "மதயானைக்கூட்டம் பறைசாற்றுகிறதா? அல்லது அந்த இனத்தினரை சிறுமைப்படுத்தியிருக்கிறாரா? இயக்குநர்? என்பது கடைசிவரை புரியாத புதிர்!

ஊர் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவர் எனும் முருகன்ஜிக்கு, "செவனம்மா - விஜி சந்திரசேகர், "அம்மு - பிரேமா என இரண்டுதாரம். இரண்டுதாரம் என்று ஆனதும் செவனம்மா விஜி, ஜெயக்கொடி முருகன்ஜியுடன் பேசுவது கொள்வது கிடையாது. 

ஆனாலும் இரண்டாம்தார வாரிசுகள் மீது கொள்ளை கரிசனம். தங்கைக்கு துரோகம் செய்த ஜெயக்கொடிதேவர் மீது குரோதம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஜெயக்கொடி தேவருக்கு ஊர் தரும் மரியாதைக்கு கட்டுப்பட்டு அவரது இரண்டாம் தாரத்தையும், அவரது வாரிசுகளையும் பழிவாங்க காத்திருக்கிறார்கள் செவனம்மாவின் சகோதரர் வீரத்தேவர் வேல ராமமூர்த்தியும், அவரது வாரிசு மற்றும் கைக்கூலிகளும். 

இந்நிலையில் ஜெயக்கொடித்தேவர் எதிர்பாராமல் அகாலமரணமடைய வீரத்தேவர் விஸ்வரூபம் எடுக்கிறார். இரண்டாம் தாரத்தின் வாரிசு நாயகர் கதிருக்கும், வீரத்தேவருக்கும் ஜெயக்கொடி தேவரின் இறுதிசடங்கில் முட்டல், மோதல் ஏற்படுகிறது. 

அதில் வாரிசை இழக்கிறார் வீரத்தேவர். அதனால் ஊரைவிட்டு ஓடும் ஹீரோ கதிர், கேரளா சென்று தன் தங்கையின் தோழி ஓவியாவுடன் ஒன்றிரண்டு டூயட் பாடிவிட்டு ஊர் திரும்பினால், இவரது அம்மா இறந்த செய்தி வருகிறது. 

அம்மாவை அடக்கம் செய்துவிட்டு, அம்மாவை கொன்ற வீரத்தேவர் கோஷ்டியை பழிதீர்க்க பாயும் நாயகர் கதிர், பழிதீர்த்தாரா? பலிவாங்கப்பட்டாரா..? என்பது க்ளைமாக்ஸ்!

வித்தியாசமாக ஜெயக்கொடித்தேவரின் சாவு வீட்டில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆரம்பமாகும் "மதயானைக்கூட்டம் காதல், பாசம், வீரம், துரோகம், "சென்டிமெண்ட் என பயணித்து இறுதியில் நாயகரையும், அவரது காதலையும் காவு வாங்கி "புஸ் ஸென முடிவது தவிர ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறு என வித்தியாசமான களத்தில் பிரயாணிப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. க்ளைமாக்ஸில் செவனம்மா, அண்ணன் வீரத்தேவரை தீர்த்துகட்டி கதிரையும், அவரது அம்மா அம்மு - பிரேமாவையும் காபந்து செய்திருந்தார் என்றால் வித்தியாசமாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது பலவீனம்!

நாயகன் பார்த்தியாக கண்களிலேயே நடிப்பை வழியவிடும் அறிமுகம் கதிர், மந்தஹாசப்புன்னகையுடன் "மப்பும் மந்தாரமாக ஓவியா, படத்தில் வரும் கேரளா மாதிரியே அம்மணியும் வனப்பு", செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் செவனம்மாவாக விஜி சந்திரசேகர், ஜெயக்கொடித்தேவராக கம்பீரமும், கனிவுமாக முருகன்ஜி, கூடி, குடிக்கும் கேரக்டரில் வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். வேல.ராமமூர்த்தி கடைசிவரை மதயானைக்கூட்டத்து குள்ளநரியை கண்டுபிடிக்காதது ஏமாற்றம்!

ரகுநந்தனின் உயிரோட்டமான இசை, ராகுல் தருமனின் ஓவியம் மாதிரியான ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் படம் முழுக்க, அடி, உதையும் அருவாளும் ஆயுதமுமாக ஒரே இரத்தசகதியாக தெரிவது மதயானைக்கூட்டத்தின் ப்ளஸ்ஸா? மைனஸா? தெரியவில்லை! புரியவில்லை!!

ஆகமொத்தத்தில், விக்ரம் சுகுமாரனின் எழுத்து-இயக்கத்தில், "மதயானைக்கூட்டம் - ஒரு ஜாதிக்குள்ளேயே நடக்கும் "சதி வெறியாட்டம்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...