ஒரு சில வருடங்களுக்கு முன் நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா, அதுசமயம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தர முடியாத கல்யாண சமையல் சாதத்தை... இந்த வெற்றிப்படத்தில் நடித்திருப்பதன் மூலம் ஒரு பெரும் விருந்தாகவே படைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல!
கதைப்படி இந்த "அல்ட்ரா மார்டன் உலகத்திலும் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததுமே அவளது கல்யாணத்தைப் பற்றியும் அவளை ஒரு நல்லவன் கையில் பிடித்து தரவேண்டுமே.. என்றும் கவலை கொள்ளும் பெற்றோர் தான் நாயகி லேகா வாஷிங்டனின் பெற்றோரும்!
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய லேகா, கிடுகிடுவென வளர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்ததும், அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
பேப்பரிலும், நெட்டிலும் எக்கச்சக்க மாப்பிள்ளைகளை பார்த்து சிலரை லேகாவின் பெற்றோரும், பலரை லேகாவும் கழிச்சுக்கட்டி ஒருவழியாக "ஹேண்ட்சம் பிரசன்னாவை "டிக் அடித்து பெண் பார்க்க வரச்சொல்கின்றனர்.
சுற்றமும், நட்பும் புடைசூழ பெண் பார்க்க வரும் பிரசன்னாவிற்கு லேகாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து, அப்பா, அம்மாவிடம் கூட ஆலோசனை பெறாமல் அங்கேயே சம்மதமும் தெரிவித்து விடுகிறார்.
லேகாவும் அவரது வீட்டினரும் ஒரு சில நாட்களில் ஓ.கே. சொல்லிவிட, கல்யாண வேலைகள் தடபுடலாகிறது.
பிரசன்னா - லேகாவின் கல்யாணத்திற்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது என்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வோம், பேஸ்புக்கில், ட்விட்டரில் நண்பராவோம்.. என்றெல்லாம் நெருங்கி, திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன் ஒருநாள் தனிமையில் இருக்கும் இருவரும் திருமணம் தான் நிச்சயிக்கப்பட்டு விட்டதே என அத்துமீற நினைக்கையில்... பிரசன்னாவிற்கு ஏதோ பிரச்சனை என்பது தெரிகிறது. அதனால் அந்த அத்துமீறலில் "அந்தமீறல் நடக்கவே இல்லை! அப்புறம்? அப்புறமென்ன...?
பிரசன்னா அதற்கு லாயக்கானவரோ? லாயக்கில்லாதவரோ? எப்படி இருந்தாலும் அவர் தான் தன் புருஷன் என்பதில் உறுதியாக இருக்கிறார் லேகா. பிரசன்னா கை மருத்துவம் முதல் கண்ட, கண்ட கண்றாவி மருத்துவங்கள் வரை நண்பர்களின் ஆலோசனைப்படி செய்து பார்க்கிறார்.
ஆனாலும் ஏதோ பிரச்னையால் அவரை ஆண்மை அரவணைத்துக்கொள்ள மறுக்கிறது. ஒருகட்டத்தில் பிரசன்னாவின் மாமனாராகப்போகும் டெல்லி கணேஷூக்கும் விஷயம் தெரிந்து, அவர் மூலம் அவரது மருத்துவ நண்பரான கிரேஸி மோகனை பார்க்கப்போகிறார் பிரசன்னா!
டாக்டர் கிரேஸி மோகனோ எல்லா டெஸ்டும் எடுத்துப்பார்த்து விட்டு எல்லாவற்றுக்கும் காரணம் மனம் தான் என்கிறார். திருமண நாளும் நெருங்குகிறது. பிரசன்னா தெளிவடைந்தாரா? திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா? முத்தாய்ப்பாக முதலிரவும் நடந்தேறியதா...? என்பது கல்யாண சமையல் சாதத்தின் காமெடியும், காம நெடியுமான மீதிக்கதை!
ரகுவான பிரசன்னா... பிரமாதமண்ணா... தனது பிரச்னையை வெளியில் சொல்ல முடியாமலும், சொல்லாமல் இருக்க முடியாமலும் அவர் படும்பாடு தியேட்டரில் விசில் சத்தங்களையும், கமென்டுகளையும் தூள் பறக்க விடுகிறது. நிஜத்தில் திருமணமான கொஞ்ச காலத்திலேயே இப்படி ஒரு கதையில் நடித்திருக்கும் பிரசன்னாவிற்கு ரொம்பவே துணிச்சல்! அந்த துணிச்சலுக்காகவே அவரை பாராட்டலாம்.
மீராவாக வரும் லேகா வாஷிங்டன் சோக்கா நடித்திருக்கிறார். கண்களாலேயே அவர் பேசும் காதல் மொழிகள் கலர் புல்! இவர்களை மாதிரியே ஹூரோ பிரசன்னாவின் தாத்தாவாக வரும் காத்தாடி ராமமூர்த்தி, அம்மா கீதா ரவிசங்கர், ஹூரோயின் லேகாவின் அப்பா டில்லி கணேஷ், அம்மா உமா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள். பலே! பலே!!
"உங்க பீட்சா ஜெனரேஷனை விட எங்க கேழ்வரகு ஜெனரேஷனுக்கு சக்தி ஜாஸ்திடா "சின்ன விஷயத்தை பெரிசு படுத்துறே... "சாமி எல்லாம் இருக்கு... தப்பு பண்ணிணா கண்ணை குத்திடும்னு பெரியவங்க சொல்வாங்க..
அது அப்படி கண்ணை குத்தியிருந்தா கூட பரவாயில்லையே... என பளிச்... பளிச்.. என அர்த்தம் பொதிந்து மின்னும் வசனங்களும், இதுவரை எந்தப்படத்திலும் காட்டப்படாத அளவிற்கு பிரமாதமாக காட்டப்படும் பிரமாண்ட பிராமண வகுப்பு திருமண வைபோகமும் கல்யாண சமையல் சாதத்தை, கலர் புல் சாதமாக்கி இருக்கிறதென்றால் மிகையல்ல!
அரோராவின் அதிரும் இசை, கிருஷ்ணன் வசந்த்தின் ஓவிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ஆர்.எஸ். பிரசன்னாவின் எழுத்து, இயக்கத்தில் மது பழக்கம், மனப்பிரச்னைகள், டைட் ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்ட சமாச்சாரங்கள் கூட ஆண்மைக்கு சவால் விடும் விஷயங்கள்.. என மெஸேஜூம் சொல்லியிருக்கிறது கல்யாண சமையல் சாதம்! அதனால் அதன் ருசியோ பிரமாதம்!!.
0 comments:
Post a Comment